|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 January, 2012

அதிகாரங்களை, நாங்களே வைத்துக் கொள்வோம்' நிபுணர் குழுவிடம் கேரளா மனு!

முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும். அந்த அணையின் உரிமை, கட்டுப்பாடு, தண்ணீர் திறந்து விடுவதை ஒழுங்குபடுத்துவது போன்ற அதிகாரங்களை, நாங்களே வைத்துக் கொள்வோம்' என, நிபுணர் குழுவிடம் கேரளா மனு அளித்துள்ளது. இதன் மூலம், "தமிழகத்துக்கு தண்ணீர்; கேரளாவுக்கு பாதுகாப்பு' என்ற கோஷம் கலைந்து, கேரளாவின் உண்மையான முகம் அம்பலமாகியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தரும்படி, ஐவர் குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த குழுவும் பலமுறை கூடி ஆலோசனை மேற்கொண்டு, இரு மாநில அரசுகளின் கருத்துக்களையும் கேட்டறிந்து வந்தது. இக்குழுவில் இடம் பெற்றுள்ள தத்தே மற்றும் மேத்தா ஆகியோர், அணைக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தி அறிக்கையும் தாக்கல் செய்தனர்.

கேரளா கோரிக்கை நிராகரிப்பு : அந்த அறிக்கையில், "அணை முழு பலமாக உள்ளதென்றும், நிலநடுக்கங்களால் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை' என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நிபுணர் குழு ஏற்றுக்கொண்டு விட்டது. தவிர, 136 அடியிலிருந்து 120 அடி வரை நீர்மட்டத்தை குறைத்திட வேண்டுமென்ற கோரிக்கையையும், ஐவர் குழு நிராகரித்து விட்டது. மேலும், அந்த ஆலோசனையில் நீதிபதி ஆனந்த், இரு மாநில அரசு பிரதிநிதிகளிடமும் ஒரு கேள்வியை முன்வைத்தார். அதாவது, புதிய அணையைக் கட்டுவது குறித்து தமிழக - கேரள அரசுகள் என்ன நினைக்கின்றன என்பது பற்றி, எழுத்துப்பூர்வமாக கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டிருந்தார்.புதிய அணை குறித்த மனு : இந்நிலையில், நேற்று கேரளா சார்பில் நீதிபதி ஆனந்திடம், புதிய அணை குறித்த மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் மூன்று முக்கிய விஷயங்களை கேரளா தெளிவுபடுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு: தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்ட வேண்டும். அதில், எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அவ்வாறு கட்டப்படும் புதிய அணையின் உரிமையாளர் அந்தஸ்தை, கேரளா தான் வைத்திருக்கும்; அணையின் கட்டுப்பாட்டையும் கேரளாவே  மேற்கொள்ளும். தண்ணீர் திறந்து விடுவதை ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரத்தையும், கேரளாவே வைத்திருக்கும். புதிய அணையில் தண்ணீர் எவ்வளவு தேக்கி வைக்க வேண்டும் என்பதை, தமிழக - கேரள மாநிலங்கள் கூட்டுக்குழு அமைத்து, அந்த குழு மேற்பார்வையிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுயரூபம் தெரிந்தது :புதிய அணை ஏன் என்பது குறித்து கேரளா இதுவரை செய்த பிரசாரத்தின் கோஷமே, "தமிழகத்துக்கு தண்ணீர்; கேரளாவுக்கு பாதுகாப்பு' என்பது தான். தமிழகத்துக்கு தண்ணீர் தருவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், தற்போது கிடைக்கும் அளவில் துளி கூட குறைக்க மாட்டோம் என்றும், பெரிய அளவில் பிரசாரம் நடத்தியது. நேற்றைய மனுவிலோ, கேரளாவின் உண்மையான சுயரூபம் தெரிந்துவிட்டது. இதன் மூலம், புதிய அணை கேட்பதன் நோக்கத்தின் பின்னணி அம்பலமாகியுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...