|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 February, 2012

அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி தங்களுக்கு மீண்டும் பணி வழங்காத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
 தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றிய 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி கடந்த நவம்பர் 8-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
 இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி மக்கள் நலப் பணியாளர் சங்கங்களின் நிர்வாகிகள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.


 இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. சுகுணா கடந்த ஜனவரி 23-ம் தேதி தீர்ப்பளித்தார். மக்கள் நலப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்றும், அவர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்கி, அவர்களுக்கான பணப் பலன்கள் முழுவதையும் வழங்கிட வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.  இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட மக்கள் நலப் பணியாளர் நலச் சங்கத் தலைவர் என். செல்லப்பாண்டியன் தமிழக அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


 மக்கள் நலப் பணியாளர்களின் பணி ஒப்பந்தக் காலம் வரும் மே 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதுவரை மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி வழங்குவதில்லை என்ற நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது.  எனவே, நீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்லப்பாண்டியன் தனது மனுவில் கூறியுள்ளார்.  இந்த மனு நீதிபதி கே. சுகுணா முன்னிலையில்  திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
 அப்போது, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...