|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 February, 2012

இந்தியாவில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் பயிற்சி பெற தடை!


 வெளிநாட்டை சேர்ந்த வழக்கறிஞர்கள் இந்தியாவில் சட்டப்பயிற்சி பெற தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த பல சட்டத் தொழில் நிறுவனங்கள் இந்திய நீதிமன்றங்களில் செயல்பட துவங்கின. இதனால் இந்தியாவில் உள்ள சட்டத் தொழில் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய நீதிமன்றங்களில் சட்டத் தொழிலில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏ.கே.பாலாஜி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரசன்னா உட்பட பலரும் வாதாடினார்கள். வெளிநாட்டில் இந்திய வழக்கறிஞர்கள் தொழில் செய்ய அனுமதி மறுக்கப்படுகின்றது. ஆனால் இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் சட்டத் தொழிலில் ஈடுபடுகின்றன. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

விசாரணைக்கு பிறகு நேற்று அளிக்கப்பட்ட 77 பக்கம் கொண்ட தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது, இந்திய வழக்கறிஞர்கள் அனைவரும் இந்திய வழக்கறிஞர்கள் சட்டம் -1961 மற்றும் இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்த சட்டப்படி இந்தியர்களைத் தவிர வெளிநாட்டு சட்ட நிறுவனங்களோ அல்லது வெளிநாட்டு வழக்கறிஞர்களோ தங்கள் பெயர்களை பதிவு செய்ய முடியாது.இந்திய வழக்கறிஞர்கள் சட்டத்தின்படி தங்கள் பெயர்களை பதிவு செய்யாத வழக்கறிஞர்கள் இந்திய நீதிமன்றங்களில் பயிற்சி மேற்கொள்ள முடியாது. ஆனால் இந்தியாவுக்கு வந்து சட்ட ஆலோசனைகள் வழங்கலாம்.

சர்வதேச வழக்குகள், நாட்டு பிரச்சனைகள், வெளிநாட்டு விவாகரத்து வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளில் வெளிநாட்டு வழக்கறிஞர்களும், நிறுவனங்களும் ஆலோசனை வழங்கலாம். மேலும் நாட்டு பிரச்சனைகள் தொடர்பான தீர்வுக்காக மத்தியஸ்தம், சமரசம் ஆகியவற்றில் ஆஜராகலாம். ஆனால் வழக்கை தடுக்க முடியாது.சர்வதேச வர்த்தக சமரச வழக்குகளில் வெளிநாட்டு நிறுவனங்கள், மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடத்த தடை இல்லை. ஆனால் பி.பி.ஓ. மூலம் சட்ட சேவைகள் நடத்த அனுமதி இல்லை. இச்சட்டத்தை மீறி சட்ட சேவைகள் நடத்துவது தெரிய வந்ததால் இந்திய பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க அனுமதி உண்டு என்று அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...