|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 March, 2012

சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்!

திருச்சி அருகே திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், சிவலிங்கத்தை சூரியக்கதிர்கள் வழிப்பட்டதை தரிசித்து பக்தர்கள் பரவசமடைந்தனர். பொன்னி நதியாம் காவிரி பாயும் சோழவளநாட்டின் மையப்பகுதியான திருச்சியின் வடக்கே 25 கி.மீ., தூரத்தில், சென்னை பை-பாஸ் அருகே உள்ள திருப்பட்டூரில் பிரம்ம சம்பத் கௌரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. உலகிலுள்ள படைப்புகளுக்கு எல்லாம் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பிரம்மனுடைய தலையெழுத்தை மாற்றி எழுதி, தன்னை நோக்கி தவமிருந்த பிரம்மனுக்கு சிவன் அருள்பாலித்த திருத்தலம். இதன்மூலம் இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தெல்லாம், திருமால், பதஞ்சலி, வியாக்கிரபாதர், சூரியபகவான் ஆகியோரால் மங்களகரமாக மாற்றியருள பிரம்மனுக்கு சிவன் வரம் அளித்த ஸ்தலம். இத்தகைய புராண சிறப்புப்பெற்ற திருத்தலத்தில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில், சூரியபகவான் தனது சூரியக்கதிர்கள் மூலம் மூலவர் பிரம்மபுரீஸ்வரை வழிபடுவது வழக்கம். சூரியக்கதிர் வழிபாடு நடக்கும் முதல்நாளான நேற்று காலை ஏராளமான பக்தர்கள் சிவனை வழிபட அதிகாலையில் இருந்து காத்திருந்தனர். காலை 6.21 மணிக்கு, சிவலிங்கத்தின் மீது சூரியக்கதிர்கள் பற்றி படர்ந்தது. சூரியக்கதிர் பட்டு சிவலிங்கம் பிரகாசித்த காட்சியை கண்டு பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். "தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று கோஷம் எழுப்பி மகிழ்ந்தனர்.  * அம்மன் வழிபாடு: மூலவர் பிரம்மபுரீஸ்வரரை சூரியக்கதிர்கள் வழிபட்ட அதேநேரத்தில், பிரம்ம சம்பத் கௌரி அம்மனின் பாதங்களில் சூரியக்கதிர்கள் பணிந்த காட்சி பக்தர்களை பரவசமடைய செய்தது.  * திருத்தேர்: பிரம்மபுரீஸ்வர் கோவிலில் பங்குனித் திருத்தேர் விழா கடந்த 26ம் தேதி துவங்கியது. முக்கிய விழாவான பங்குனித்தேரோட்டம், வரும் ஏப்ரல் நான்காம் தேதி காலை 6.30 மணிக்கு நடக்கிறது. கோவிலின் தேர் பழுதடைந்ததால், கோவிலுக்கு பாத்தியப்பட்ட கிராம மக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் செலவில் புதிய தேர் செய்யப்பட்டு, கடந்த 25ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது. 25 ஆண்டுக்கு பின், இக்கோவில் தேரோட்டம் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...