|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 April, 2012

பாரதிதாசன் பிறந்த நாள்...


தமிழ் மக்களுக்குப் பாடல்கள் வழியாக உணர்ச்சியூட்டித் தமிழ் உணர்வுபெறச் செய்தவர் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார்.பாவேந்தர் பிறந்த புதுவை மண்ணில் ஒவ்வொரு ஆண்டும் புதுவை அரசின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இன்று(29.04.2012) காலை பதினொரு மணியளவில் புதுவை சட்டப்பேரவையின் எதிரில் உள்ள பாவேந்தர் சிலைக்குப் புதுச்சேரி முதல்வர் ந.அரங்கசாமி, சட்டப்பேரவைத்தலைவர் சபாபதி, அமைச்சர்கள் இராசவேலு, தியாகராசன், அரசுகொறடா நேரு ஆகியோர் மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தனர். பிற தமிழமைப்புகளைச் சார்ந்தவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.புதுவையில் உள்ள பாவேந்தர் இல்லத்துக்கு நான் காலை 10 மணிக்குச் சென்றேன். மன்னர் மன்னன் ஐயா எங்களுக்கு முன்னதாக நினைவில்லத்தில் குடும்பத்தினருடன் இருந்தார்கள். பாவேந்தர் சிலைக்கு மாலை அணிவிக்கும் இடத்துக்குப் புறப்படுவோம் என்றார்.

பாவேந்தர் பெயரன் கோ.பாரதியின் வண்டியில் மன்னர்மன்னன் அவர்கள் அமர்ந்துகொண்டார். நான் என் வண்டியில் பாவேந்தர் சிலை அமைவிடத்திற்குச் சென்றேன். அங்குப் பொதுவுடைமை இயக்கத்தவர்களும், திராவிடர் கழகத்தினரும் பாவேந்தர் சிலைக்கு மாலை அணிவித்து உரையாடிக்கொண்டிருந்தனர். பல்வேறு இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடினர்.புதுவை முதல்வர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும் ஆர்வமுடன் வந்து மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் பாவேந்தரின் நினைவில்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலக்கிய நிகழ்வுகளை அமைச்சர் பெருமக்கள் பார்வையிட்டு வாழ்த்தினர்.பாவேந்தரின் குடும்பத்தினர், பாவேந்தர் பற்றாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக ஒன்றுகூடித் தமிழ்ச்சமூக வளர்ச்சிக்குப் பாடல்வழி பாடுபட்ட மாபெரும் பாவலரை நினைவுகூர்ந்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...