|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 May, 2012

அணுகுண்டு தாக்குதல் காரணமாக வரும் கேடுகளை விட மிக கொடூரமானது !


நாட்டில் சாதாரணமாக பயன்பாட்டிற்கு வந்துள்ள பிளாஸ்டிக் பைகள் பெரும் கேட்டை ஏற்படுத்தும் என்றும், இதனை இப்படியே விட்டு விட்டால் எதிர்கால சந்ததியினரையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கும் என்றும், அணுகுண்டு தாக்குதல் காரணமாக வரும் கேடுகளை விட மிக கொடூரமானது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இதனால் இந்த பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பில் மத்திய ,மாநில அரசின் நடவடிக்கைகள் எந்த அளவிற்கு உள்ளது என விளக்கம் அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்று நோட்டீஸ் அனுப்பியது.எந்த வொரு பொருளை எடுத்தாலும் பிளாஸ்டிக் கவரேஜ் இல்லாமல் இல்லை என்ற அளவிற்கு இது மக்கள் பயன்பாட்டில் ஆக்கிரமித்துள்ளது. இதன் காரணமாக நீர்நிலைகள், பூமியின் ஆதாரம் சீரழியும் என பல்வேறு நிபுணர்கள் எடுத்து சொல்லியும் யாரும் இதனை அலட்சியமாகவே எடுத்து கொள்கின்றனர். பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க நாட்டில் விழிப்புணர்வு பிரசாரம் கடலில் கரைத்த காயமாகவே இருக்கிறது. 

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலவழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞரும், சமூகஆர்வலருமான ஷியான்திவான் ஆஜராகி வாதிட்டார். இவரது வாதுரையில் ; இந்த பிளாஸ்டிக் பைகள் மூலம் ஏற்படும் கெடுதல் குறித்த ஆய்வு அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளேன். சாதாரணமாக பொதுமக்கள் உணவு பொருட்கள் வாங்கும் போது இந்த பிளாஸ்டிக் பயன்பாடுகள் அதிகம் உள்ளன. மக்கள் சாப்பிடும் போது இதில் உள்ள கண்ணுக்கு தெரியாத கிருமிகள் பல்வேறு கொடூர நோய்களை உருவாக்குகிறது. சாப்பிட்டு முனிசிபால் குப்பை தொட்டியில் வீசி விடுகின்றனர். இதனை உண்ண வரும் கால்நடைகள் வயிற்றுக்குள் இந்த பிளாஸ்டிக் சென்று விடுகிறது. சமீபத்திய கால்நடை ஆராய்ச்சியில் மொத்தம் ஆடு மாடுகள் வயிற்றில் இருந்து 30 முதல் 50 கிலோ வரை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். சிங்வி மற்றும் முகோபாத்யயா இது குறித்து மத்திய மாநில அரசுகள் தங்களின் நிலைப்பாட்டை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினர். மேலும் தங்களுடைய கருத்தில் அவர்கள் கூறுகையில்; இந்த பிளாஸ்டிக் உபயோகம், நகர் மற்றும் கிராம பகுதிகளை நாசமடைய செய்கிறது. குளம், ஆறு மற்றும் நிலத்தடி நீர் கடும் பாதிப்புக்குள்ளாகிறது. இதனை தற்போது ஒழிக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இது எதிர்கால சந்ததியினரையும் கடுமையாக பாதிக்கும். அணு குண்டு சேதத்தை விட கொடூரமானதாக அமையும் என்றும் எச்சரித்தனர். மேலும் மொத்தமாக ஒழித்தால் மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும் என்றும் தங்களுடைய கருத்தில் நீதிபதிகள் தெரிவித்தனர்,

54 வகை கேன்சர் வரும் : சமீபத்திய அமெரிக்க நிபுணர்கள் ஆராய்ச்சியில் பிளாஸ்டிக் பை உபயோகத்தின் மூலம் 54 வகை கேன்சர் நோய்கள் மனிதர்களுக்கு வரும் வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...