|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 May, 2012

கேரளாவின் குப்பை மேடா? தமிழகம்??

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே கொட்டப்பட்ட கேரள தொழிற்சாலையின் ரசாயன கழிவுகளை 24 மணி நேரத்துக்குள் அகற்ற கெடு நிர்ணயிக்கப்பட்டது.பொள்ளாச்சியை அடுத்த கோபாலபுரம் சோதனை சாவடியில் கடந்த 17ம் தேதி அதிகாலை கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட ரசாயன கழிவை ம.தி.மு.க.,வினர் மடக்கி பிடித்தனர்..

ஆனால், கழிவு கொண்டு வந்த லாரி ஓட்டுனர் மற்றும் சிலர் ம.தி.மு.க.,வினருக்கு போக்கு காட்டிவிட்டு லாரியை பொள்ளாச்சி அருகே உள்ள செடிமுத்தூரில் கொண்டுவந்து நிறுத்தி லாரியில் இருந்த கழிவுகளை கொட்டினர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும், பொள்ளாச்சி சுற்று வட்டார ம.தி.மு.க.,வினர் செடிமுத்தூரில் திரண்டனர். அதிகாரிகள் யாரும் இப் பிரச்னைக்கு தீர்வு காண முன்வராததால் போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.அதற்குள், பொள்ளாச்சி தாலுகா இன்ஸ்பெக்டர் மகேந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று, ம.தி.மு.க.,வினரிடமும், கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ரசாயன தொழிற்சாலை (நிட்டா ஜெலடின்) நிர்வாகத்தையும் தொடர்பு கொண்டு பேசினார். தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் ம.தி.மு.க இருதரப்புக்கும் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் நேற்று மதியம் 2.00 மணிக்கு பேச்சு நடத்தினர்.தொழிற்சாலை நிர்வாகத்தரப்பில் பேசிய அமீர் என்பவர், "கேரள மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், "இக்கழிவுகளை வைத்து இயற்கை உரம் தயாரிக்க பயன்படுத்தலாம். இந்த கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்று சான்று கொடுத்துள்ளார். எனவே நாங்கள் இந்த கழிவுகளை உலர வைத்து இயற்கை உரம் தயாரிக்க திட்டமிட்டும்ளோம்' என்றார். 

ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் பேசும்போது, "இயற்கை உரம்” தயாரிக்க இக்கழிவுகளை பயன்படுத்துவதாக இருந்தால் கேரளாவிலேயே அதை செய்யட்டும். தமிழகத்துக்கு எதற்காக கொண்டு வர வேண்டும். இந்த கழிவுகள் அபாயகரமான ரசாயனகழிவுகள் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது.
எனவே, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் கேரளா உள்ளாட்சித்துறை மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்பாக இந்த கழிவை கேரளாவுக்கு எடுத்து செல்ல வேண்டும்'' என்றார்.பொள்ளாச்சியில் கொட்டப்பட்ட கழிவு 24 மணி நேரத்துக்குள் அப்புறப்படுத்தி கேரளாவுக்கு கொண்டு செல்ல வேண்டும். இனிமேல் கேரளா தொழிற்சாலை கழிவை கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானித்து இரு தரப்பிலும் கையெழுத்தை போலீசார் பெற்றனர். இதையடுத்து கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான முயற்சியில் தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.அதேபோல, கேரள மாநிலம் தத்தமங்கலத்தில் இருந்து 1,1/2 டன் ஆடு, மாட்டு, கோழி இறைச்சி கழிவுகளை ஏற்றிக் கொண்டு மினி டோர் ஆட்டோ ஓன்று நேற்று முன்தினம் ஆனைமலை நோக்கி வந்தது.

செமனாம்பதி சோதனை சாவடியில் நின்ற தமிழக போலீசார் அந்த மினிடோர் ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். அதனை ஓட்டி வந்த டிரைவர் வினை மற்றும் புரோக்கர் பாலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இறைச்சி கழிவு ஏற்றப்பட்ட மினிடோர் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு ஆனைமலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டது.ஏற்கனவே மக்கிப்போய் இருந்த அந்த கழிவுகள் துர்நாற்றம் வீசியதால் போலீசார் அந்த மினிடோர் ஆட்டோவை கொண்டுபோய் ஒதுக்குப்புறமான பகுதியில் நிறுத்தினர். நேரம் போக போக நாற்றம் அதிகமானது.வேறு வழியில்லாமல், இரவு 7 மணி அளவில் ஆனைமலை பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் கொண்டுபோய் குழி தோண்டி புதைக்க போலிசார் முயன்றனர்.இதை அறிந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். கேரள கழிவுகளை கொண்டு வந்து இங்கு புதைக்க ஆனைமலை என்ன குப்பைக்காடா ? என்று போலீசாரிடம் எதிர்ப்பு தெரிவித்தனர். 

கேரளாவின் இறைச்சி கழிவுகளை இங்கு புதைக்க கூடாது என வலியுறுத்தி சின்னப்பம் பாளையம் செல்லும் சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த தமிழக அரசு பேருந்தை சிறை பிடித்தனர். தகவல் அறிந்ததும் ஆனைமலை பேரூராட்சி தலைவர் சாந்து விரைந்து வந்து சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். எக்காரணம் கொண்டும் கேரள இறைச்சி கழிவுகளை இங்குள்ள குப்பை குழியில்  புதைக்க விடமாட்டோம் என்று பொதுமக்கள் கூறிவிட்டனர். இதைத் தொடர்ந்து இறைச்சி கழிவு ஏற்றப்பட்ட மினிடோர் ஆட்டோ கேரள எல்லைப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு கேரளா எல்லைக்குள் அனுப்பிய பின்னரே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.பொதுமக்கள் நடத்திய சாலைமறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பொதுமக்களுக்கு உள்ள விழிப்புணர்வும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு வரவேண்டும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...