|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 January, 2013

அரசியல் பழிவாங்கல்களை முடிவுக்கு கொண்டுவர விஸ்வரூபமெடுக்க வேண்டும்!

கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்துக்கான தடையின் பின்னணி தொடர்பாக எராளமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் நிஜம் என்ன என்பதை கற்பனை கதைகளால் மறைத்துவிட முடியாது. விஸ்வரூபம் திரைப்படத்துக்கான தடை என்பது இந்த நாட்டின் சகிப்புத் தன்மை எப்படி குறைந்து வருகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. அண்மைக்காலமாக நடிகர்கள், எழுத்தாளர்கள் என பலரும் இலக்கு வைக்கப்பட்டு கருத்து சுதந்திரத்தை கேள்விக்குள்ளாகி வருவது அதிகரித்து வருகிறது. மதச்சார்பற்ற மாண்புகள் கொண்ட ஒரு ஜனநாயக குடியரசில் இத்தகைய போக்குகள் ஆரோக்கியமானது அல்ல. தமிழகத்தில் பல ஆண்டுகாலமாக கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் மிகவும் அதிகரித்தே இருக்கின்றன. 
 
தமிழகத்தில் திரை உலகத்தை சேர்ந்தவர்கள் அரசியல்வாதிகளாக உருவெடுப்பதும் ஏன் முதல்வர் பதவியில் அமருவதும் நடந்து கொண்டு இருக்கிறது. 1960களுக்குப் பிந்தைய காலத்தில் திமுகவும் அதிமுகவும் ஏராளமான கதாநாயன்கள், வில்லன்கள், நகைச்சுவை நடிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி கட்சி சார்ந்து அரசியல் இருக்கும் திரை உலகத்தினர் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும்போது வேட்டையாடப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதுதான் கடந்த காலத்திலும் சரி நிகழ்காலத்திலும் சரி ஏன் எதிர்காலத்திலும்கூட இது தொடரவே செய்யப் போகிறது. தற்போது பிரபல நடிகரான கமல்ஹாசன் இப்படி புதிய பலிகடாவாகியிருக்கிறார்.

ரசிகர்களின் மனோநிலை என்ன என்பதை உணர்ந்து அதை திரையில் படைக்கக் கூடியவர் கமல்ஹாசன். தமிழ்த் திரை உலகில் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டவர் வேறு யாரும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு நட்சத்திரத்துக்கு அரசியலின் பெயரால் நெருக்கடியை கொடுத்திருப்பது தமிழகத்துக்கு மாபெரும் அவமானம். கமல்ஹாசனே சொல்வதைப் போல தனது சொத்து முழுவதையும் விற்று ரூ100 கோடி அளவில் முதலீடு செய்து விஸ்வரூபத்தை உருவாக்கியுள்ளார். தற்போது அவரது திரை உலக சகாக்கள் பலரும் கூட அவரிடமிருந்து விலகி இருக்கவே செய்கின்றனர். எங்கே தாங்களும் இலக்கு வைக்கப்பட்டு விடுவோமோ என்று அவர்கள் அச்சப்படுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பெரியார் சுயமரியாதை இயக்கத்தைக் கட்டி எழுப்பினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சமமான உரிமைகள் இருக்கின்றன என்பதை நிலைநாட்டினார் அவர். அவரது அரசியல்தான் தமிழகத்து அரசியலை ஒழுங்கமைத்தது. அத்தகைய ஒரு தேவை தற்போது உருவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகரிக்கும் அரசியல் பழிவாங்கல்கள், வேட்டையாடுதல்களை முடிவுக்குக் கொண்டு வர அத்தகைய ஒரு இயக்கம் தற்போது அவசியம்!
 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...