|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 September, 2013

இன்று பாரதியின் 92ம் ஆண்டு நினைவு நாள்..

பாரதி தமிழ்க் கவிஞனாய், தேசியக் கவியாய், சுதந்திரக் கனல் பொங்கும் எழுத்தைத் தந்த எழுத்தாளனாய் அறியப்பட்டாலும், ஒரு சிறந்த பத்திரிகையாளராக பாரதி எடுத்த அவதாரம், வேறு யாரும் எடுத்திராதது. அவருடைய அந்த சாதனைகள்தான் என்னென்ன.?

* ஒரு கவிஞனாகப் பெரும்பாலானவர்களால் இனம்காணப்பட்ட சுப்பிரமணிய பாரதிக்கு, புரட்சிகள் பல செய்த பத்திரிகையாளன் என்ற மற்றொரு முகமும் உண்டு. பாரதி தனது பத்திரிகைப் பணியை 1904 நவம்பரில் சுதேசமித்திரனில் துணையாசிரியராகத் துவக்கினார். அதன்பிறகே தமிழ்ப்பத்திரிகையுலகுக்கு ஒரு உத்வேகம் கிடைத்தது.

* தமிழ்ப் பத்திரிகை உலகில் முதன் முதலில் கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர் பாரதி. "இந்தியா' (1905) பத்திரிகைக்கே அந்தப் பெருமை சேரும்.

* பத்திரிகை சந்தாவில் புதுமையை அறிமுகப்படுத்தினார். வாசகர்களின் வருமானத்துக்கு ஏற்றவாறு சந்தா விகிதம் நிர்ணயித்த பாரதியை இன்றும்கூட யாரும் எட்ட முடியாது.

* பத்திரிகையுடன் இலவச இணைப்பாக சிறுபுத்தகம் வழங்குவதை அறிமுகப்படுத்தினார்.

* ஒரே நேரத்தில் பல பத்திரிகைகளில் பணிபுரிந்தவர். சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா, பாலபாரதா அல்லது யங் இந்தியா, விஜயா, சூர்யோதயம், கர்மயோகி, தர்மம் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றினார்.

* பத்திரிகைகளில் நேரடியாகப் பணிபுரிந்தது மட்டுமன்றி சுதந்திர இதழாளராகவும் பல பத்திரிகைளுக்கு தம் படைப்புகளை அனுப்பியிருக்கிறார். விவேகபானு, சர்வஜன மித்திரன், ஞானபானு, காமன்வீல், நியூ இண்டியா ஆகிய பத்திரிகைகளிலும் பாரதியின் எழுத்துகள் அணி செய்துள்ளன. புனை பெயர்களை (காளிதாஸன், ஷெல்ன்தாஸ், சாவித்திரி, நித்யதீரர், உத்தம தேசாபிமானி) அதிகம் பயன்படுத்தியவரும் பாரதியே.

* செய்திப் பத்திரிகையில் வாசகரின் ஆர்வத்தைக் கூட்ட கதை, கவிதைகளை வெளியிட்டார். வாசகர்களை விவாதத்திலும் பங்கேற்கச் செய்தார்.

* முதன் முதலில் தமிழ்ப் பத்திரிகையில் தமிழ் ஆண்டு, மாதம் குறித்தவர் ("இந்தியா', "விஜயா') பாரதியே. "விஜயா' இதழில் தமிழ் எண்களையும் பயன்படுத்தி புரட்சி செய்தார்.

* "பழைய பத்திரிகைகளில் வெளிவந்த விஷயங்களை எடுத்துக் கோர்த்தால் நல்ல வசனநூல் கட்டலாம்'' என்று பத்திரிகை உலகுக்கு வழிகாட்டியவர் பாரதி. "எங்கள் காங்கிரஸ் யாத்திரை' போன்ற சிறு நூல்களை தனது பத்திரிகை அலுவலகத்திலிருந்து வெளியிட்டார்.

* செய்தி அனுப்புவோருக்கு பணம் தரும் முறையை நூறு ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தினார்.

* சித்திரங்களை மட்டுமே கொண்ட ""சித்ராவளி'' என்ற பத்திரிகையை நடத்தத் திட்டமிட்டார். ஆனால் அது இயலாமல் போனது.

* லண்டன் "டைம்ஸ்' முதல் கொல்கத்தாவின் "அமிர்தபஜார் பத்ரிகா' வரை 50 -க்கும் மேற்பட்ட பிறமொழிப் பத்திரிகைகள் பற்றியும், பிறமொழிப் பத்திரிகை ஆசிரியர்கள் பற்றியும் தனது பத்திரிகையில் செய்தி வெளியிட்டார்.

* மகாத்மா காந்தி இந்தியாவில் அறியப்படுவதற்கு முன்னரே 1909 ல் ""காந்திபசு'' என்ற கருத்துப் படத்தை "இந்தியா'வில் வெளியிட்டார்.

* தமிழுக்கு பொதுவுடைமை என்ற புதிய சொல்லை வழங்கியதோடு, வன்முறை மூலம் உருவாக்கப்படும் ரஷ்யாவின் சோஷலிஸ சமுதாயம் நிலைக்காது என்று 1920 லேயே தீர்க்க தரிசனமாக எழுதினார்.

* நாட்டின் முந்நாள்பெருமையும் இந்நாள் சிறுமையும் எதிர்கால வறுமையும் கருதாத கல்வியால் பலனில்லை என்று கூறி சுதேசிக் கல்வியை வலியுறுத்தினார்.

* மகளிரின் விடுதலைக்காக பத்திரிகையில் குரல்கொடுத்து பாலின சமத்துவத்துக்கு தமிழ்நாட்டில் வித்திட்டார்.

* தமிழின் பழம்பெருமையை பேசியபடியே ஆங்கில மோகத்தில் வீழ்வதால் அன்னைத் தமிழ் அவலத்தில் தாழும் நிலையை எடுத்துக்கூறி அன்றே எச்சரித்தவர் பாரதி. அதேசமயம் கிணற்றுத் தவளையாக இல்லாமல் ஆங்கிலம், இந்தி, சம்ஸ்க்ருத மொழிகளையும் அறிந்து அதனை தனது இதழியல் பணிக்கு பயன்படுத்தியவர் பாரதி.

"உள்ளத்தில் உண்மையொளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்'' என்ற தனது அமுதமொழிக்கு தானே உதாரணமாக பாரதி வாழ்ந்ததை இந்த தீர்க்கதரிசனங்கள் காட்டுகின்றன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...