|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 January, 2014

கருணாநிதி பிரதமரானால்...?

னித்தே நின்று 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பிரதமர் ஆவேன்’ என்கிறார் ஜெயலலிதா. தி.மு.க-வோ, தே.மு.தி.க. கூட்டணிக்கு வர வேண்டும் என்று பிடிவாத ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுக்கும் நிலையில் இருக்கிறது. தமிழ்நாட்டின் மூத்த தலைவர் கலைஞர் பிரதமர் ஆனால், என்னவெல்லாம் நடக்கும்? தமிழர்களே, தமிழர்களே வாருங்கள். அந்த காமெடிகளைப் பார்ப்போம்.
கலைஞர் பிரதமரானதும் முதல்ல வர்றது குழப்பம்தான். நமக்கு இல்லைங்க, அவருக்கு. முதல்வரா இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவரா இருந்தாலும் மாஞ்சு மாஞ்சு பிரதமருக்குத்தான் கடிதம் எழுதுவார். அவரே பி.எம் ஆகிட்டா, அப்புறம் யாருக்குக் கடிதம் எழுதுறது?
இந்தக் குழப்பத்தை இப்படித்தான் தீர்ப்பார். மாநில முதல்வர்கள்தான் பிரதமருக்குக் கடிதம் எழுதணுமா? பிரதமர், முதல்வர்களுக்குக் கடிதம் எழுதலாமே? 'உ.பி முதல்வர் உடன்பிறப்பே அகிலேஷ் யாதவ், முஸாபர் நகர் கலவரம், எப்படி இருக்கு நிலவரம்?’ என்று ஆரம்பிப்பவர் அப்படியே இந்தியாவில் உள்ள எல்லா மாநில முதல்வர்களுக்கும் 'மானே, தேனே, பொன்மானே’ போட்டுக் கடிதம் எழுத ஆரம்பிச்சிடுவார்.
பி.எம். ஆனதும் செய்கிற முதல் வேலை தந்திச் சேவையை மறுபடியும் தொடங்குவதுதான். முதல் தந்தி யாருக்கு? அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு. 'சிரியா என்றால் உதடுகள் ஒட்டாது, ஒபாமா என்றாலும் உதடுகள் ஒட்டும், அமெரிக்கா என்றாலும் உதடுகள் ஒட்டும்’னு டெய்லி ஒரு தந்தி. ஒபாமா பதறிப்போய், 'அமெரிக்கர்களே, அமெரிக்கர்களே, என்னைக் கடலில் தூக்கிப் போடுங்கள்’னு கதற ஆரம்பிச்சிடுவார்.
டெல்லியில் மாதத்துக்கு இரண்டு முறை நடக்கும் பாராட்டு விழாக்களில், கலை நிகழ்ச்சிகளில் குத்தாட்டம் போடுவது யார் என்று நமீதா, ராக்கி சாவந்த், மல்லிகா ஷெராவத் இவர்களுக்குள் போட்டா போட்டி நடக்கும்.

அப்புறம் என்னங்க, வைரமுத்து இல்லாத பாராட்டு விழாவா? 'டெல்லி... இந்தியாவின் உச்சி. உச்சியிலேயே உட்கார்ந்த தமிழன் நீ. ஆக்ரா தாஜ்மகால் உன்னை அண்ணாந்து பார்க்கிறது’ னு ஐஸ் கவிதைகளாகப் பொழிய ஆரம்பிச்சிடுவாரே.
வாலி விட்ட இடத்தைப் பிடிக்கணும்ல. உடனே களம் இறங்குவார் வித்த கவிஞர், ஸாரி, வித்தகக் கவிஞர் பா.விஜய், 'நீ டெல்லியையே பிடித்த கில்லி’ அப்படினு மொக்கைக் கவிதையை அள்ளிவிடுவார்.
'வேட்டி கட்டிய தமிழன்தான் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்று அன்று நான் சொன்னதால், பல இடையூறுகளைச் சந்தித்தேன். தமிழன் வேட்டி கட்டுவது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் தமிழே வேட்டி கட்டினால், அதுதான் என் தமிழ் ஆசான் கலைஞர்’ னு கமலும் கொழகொழன்னு பேசுவார்.
வழக்கமா தமிழ்நாட்டில் இருந்து எஸ்கேப் ஆக இமயமலைக்குப் போவார் ரஜினி. ஆனா டெல்லியில்தான் கலைஞர் இருக்கிறார், பாராட்டு விழாக்கள் நடக்குதுனு கேள்விப்பட்டதும் இமயமலைக்குப் பதிலா மாலத்தீவு, அந்தமான், நிக்கோபார்னு ரவுண்ட்லேயே இருப்பார் ரஜினி.
அழகிரிதான் வெளியுறவுத் துறை அமைச்சர். பாகிஸ்தான் அதிபர், சீன அதிபர்னு எல்லோரிடமும் தப்புத்தப்பா இங்கிலீஷ் பேசி, அவங்க ஆத்திரப்பட்டு அடிக்கடி இந்தியா மேல போர் தொடுப்பாங்க.
கனிமொழிதான் நிதியமைச்சர். பட்ஜெட்ல பாதியை டெல்லி சங்கமம் நிகழ்ச்சிக்கு ஒதுக்கிடுவாங்க.
அப்பவும் ஸ்டாலின் துணைப் பிரதமர். 'காது எப்போ குத்துவாய்ங்க, கெடா எப்போ வெட்டுவாய்ங்க’னு கவுண்டமணி மாதிரி 'எப்போதான் தலைவர் ஆக்குவாங்க’னு வெயிட்டிங்லேயே இருப்பார்.
ஆனா ஒண்ணுங்க... பிரதமரே ஆனாலும் கலைஞர் பழசை எல்லாம் மறக்க மாட்டார். கச்சத்தீவை மீட்போம், தமிழ் ஈழம்தான் ஒரே வழி, தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக்குவோம்’னு அப்பவும் தீர்மானம் போடுவார், தி.மு.க பொதுக் குழு, செயற் குழுக்களில் மட்டும்!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...