|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 January, 2014

இது மட்டும் நடந்தா, உலகம் அழிஞ்சுடுமா?

ல வருடங்களுக்குப் பிறகு கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரே முடிவை எடுத்திருக்கிறார்கள். காங்கிரஸ், பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து நிற்பது என்பதே அது. இப்படி ஒரு விஷயத்தில் ஒற்றுமையா இருக்கிற இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்துக்கொண்டால்...? அதைவிட தமிழர்களுக்கு என்டர்டெயின்மென்ட் இருக்க முடியுமா என்ன? வாங்க, என்ன நடக்கும்னு பார்ப்போம்!
ஜெயலலிதா, திருவாரூரில் உதயசூரியன் சின்னத்தில் நிற்பார். கருணாநிதி, ஸ்ரீரங்கத்தில் இரட்டை இலையில் நிற்பார். 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லைனு புரட்சித்தலைவரே பாடிய சின்னம்’ என்று ஜெயலலிதாவும், 'இல்லை என்ற சொல்லையே இல்லாமல் ஆக்குவதுதான் இலை, இரட்டை இலை’ என்று கருணாநிதியும் பிரசாரம் செய்து பீதியைக் கிளப்புவார்கள்.
'கருணாநிதி என்றாலும் உதடுகள் ஒட்டாது, ஜெயலலிதா என்றாலும் உதடுகள் ஒட்டாது’னு முரசொலியில் கவிதை எழுதுவாரே கலைஞர்.
'சோனியாவை சொக்கத் தங்கம் என்று சொன்னேன். அன்புத் தங்கை ஜெயலலிதாவோ எனது வசனத்தில் 'எங்கள் தங்கம்’ படத்தில் நடித்த உங்கள் தங்கம்’ என்று கூட்டத்தில் பேசுவார். அப்புறம் என்ன, தங்கத்தின் விலையெல்லாம் தாறுமாறாக் குறையும்.
ஜெயலலிதா முதல்வர் ஆவார். ஸ்டாலின் துணை முதல்வர் ஆவார்.
இதுவரை அமைச்சர்களையே மாற்றிக்கொண்டிருந்த ஜெயலலிதா, துணை முதல்வரையும் மாற்றி 'பகீர்’ கொடுப்பார்.
'தமிழகத்தில் நிதிப் பற்றாக்குறை என்கிறார்கள். அன்பு அண்ணன் கலைஞர் கருணாநிதி குடும்பத்திலேயே அருள்நிதி, உதயநிதி, கலாநிதி, தயாநிதி என்று ஏகப்பட்ட நிதிகள் இருக்கும்போது, எப்படி வரும் தமிழகத்தில் நிதிப் பற்றாக்குறை?’ என்று கூட்டங்களில் ஆவேசமாகப் பேசுவார் ஜெயலலிதா.
அழகிரி, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ஆவார். ஆங்கிலத்தில் பேசும் அதிகாரிகள், அந்தமான் தீவுக்கு டிரான்ஸ்ஃபர் ஆவார்கள்.
கலைஞர் வசனத்தில், ராமராஜன் சரித்திரப் படத்தில் நடிப்பார். டவுசர் அணிந்த ஒரே தமிழ் மன்னன் ராமராஜன்தான். போர்க்களத்தில் யானைப் படை, குதிரைப் படை மத்தியில் பாட்டுப் பாடியே யானை, குதிரைகளிடம் பால் கறப்பார் கிராமத்து நாயகன்.
கலைஞர் நாள் தவறாமல் சட்டசபைக்கு வருவார். ஜெயலலிதாவைப் புகழ்ந்து துரைமுருகனும், கலைஞரைப் புகழ்ந்து ஓ.பன்னீர்செல்வமும் பாராட்டு மழை பொழிவார்கள். தேவைப்பட்டால், சட்டசபைக்கு வெளியேயும் பாராட்டு விழாக்கள் நடக்கும்.
வருடத்துக்கு 300 பாராட்டு விழாக்கள் நடைபெறும் என்பதால், நிஜமாகவே கமல்ஹாசன் வெளிநாட்டில் குடியேறிவிடுவார்.
என்ன ஒண்ணு, டாஸ்மாக் சேல்ஸ் மட்டும் கன்னாபின்னானு எப்பவுமே ஏறிக்கிட்டேதான் இருக்கும்!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...