|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 February, 2014

“மினரல் வாட்டர் குடித்தால் நாம் உருப்படவே மாட்டோம்!

இந்த உலகம் தோன்றக் காரணமானதும், இயங்க அடிப்படையானதுமான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்கள்தான் இந்த நிகழ்வின் கருப்பொருள்.நிலத்தின் தொன்மை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களின் தன்மையில்  முல்லை நிலத்தில்தான் சிறு கலப்பை உருவானது என்பதையும், மருத நிலத்தில் சற்றே பெரிய கலப்பை உருவானது என்பதையும் சங்க இலக்கியத்தில் இருந்து அவர் விவரித்தார். அரச்சலூர் செல்வம், இந்த உலகம் எப்படி நீரால் சூழப்பட்டுள்ளது என்பதையும், சிறு துண்டு நிலத்தைத்தான் மனிதகுலம் பங்கிட்டு வாழ்கிறது என்பதையும் எளிமையாகப் புரியவைத்தார்.
நெருப்பு என்ற தலைப்பில் உரையாற்றிய  ம.செந்தமிழன், ''அண்டமே பிண்டம், பிண்டமே அண்டம் என்பதே இந்த உலகின் இணையற்ற தத்துவம்'' என்றார். மேலும், ''புலனறிவால் உணரக்கூடிய நெருப்பு என்பது வேறு. நெருப்பின் சாரமான வெப்பம்தான் அதன் குணம். இந்த வெப்பம்தான், உலகத்தை இயக்குகிறது; உயிர்களை இயக்குகிறது. ஒரு மனிதனின் உடல், எப்போது வெப்பத்தைத் தக்கவைக்கும் திறனை இழந்து சில்லிட்டுப் போகிறதோ... அப்போது அவன் இறந்துவிட்டான் என்று பொருள். இந்த உலகத்துக்கும் அது பொருந்தும்''
எளிய பேச்சுத் தமிழில் நீர் அரசியல் குறித்த சாளரங்களைத் திறந்துவிட்டார் கவிஞர் நக்கீரன். ''அமீனா புகுந்த வீடும், ஆமை புகுந்த வீடும் உருப்படாதுன்னு சொல்வாங்க. நான் சொல்றேன், உலக வங்கி புகுந்த நாடும், ஐ.எம்.எஃப். (சர்வதேச நாணய நிதியம்) புகுந்த நாடும் உருப்படாது. உலக வங்கி என்பது, உலக அளவிலான வட்டிக் கடை. ஐ.எம்.எஃப். என்பது ஓர் உலகக் கந்துவட்டிக் கடை'' என்றவர், அந்த வட்டிக் கடையின் உதவியுடன் சென்னையின் சதுப்புநிலமான பள்ளிக்கரணையை எப்படிக் குப்பைக் கொட்டும் இடமாக மாற்றினார்கள் என்பதை நெஞ்சம் பதைபதைக்க விவரித்தார். இறுதியில், ''இவ்வளவையும் கேட்டுவிட்டு வெளியில் சென்று தாகமாக இருக்கிறது என ஒரு மினரல் வாட்டர் பாட்டிலை வாங்கினால், நம்மால் உருப்படவே முடியாது என்று சொல்லி விடைபெறுகிறேன்'' என்று விடைபெற்றபோது, கைதட்டல் அடங்க வெகுநேரம் ஆனது.
காற்று எனும் தலைப்பில் பேச வந்த கி.வெங்கட்ராமனின் பேச்சு, முக்கியத்துவம் உடையது. அவர், இந்த ஐம்பூதங்களை மீட்டெடுக்க வேண்டிய அரசியல் தளத்தின் அவசியத்தைப் பேசினார். ''காற்றுக்கும் நீருக்கும் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் பேசப்பட வேண்டியவை என்பதை ஏற்கிறேன். ஆனால், அரசியல்ரீதியாக அதிகாரத்தை வென்றெடுக்காமல் உங்களால் ஐம்பூதங்களைக் காப்பாற்ற முடியாது. நமது முதன்மை நோக்கமாக இருக்க வேண்டியது, அரசியல் தளத்தில் மேற்கொள்ள வேண்டிய போராட்டங்களே'' என்றார். தமிழ்நாட்டின் வானிலை, காலநிலை குறித்து அனுதினமும் மக்களுக்கு அறிவிக்கும் சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் ஆகாயம் குறித்தும், புவி வெப்பமயமாதல், அதன் பாதிப்புகள், மாற்று வழிமுறைகள் குறித்தும் பேசினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...