|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 March, 2011

பணிந்தார் ஜெயலலிதா, பயணம் தள்ளிவைப்பு

தனது கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னமும் முடியாததால், நாளை தொடங்க இருந்த தனது பிரச்சார பயணத்தை தள்ளிவைப்பதாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. போட்டியிடும் 160 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை நேற்று இரவு வெளியிட்ட ஜெயலலிதா, வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதாகவும் கூறி, பயண விவரத்தையும் அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.

ஆனால, தாங்கள் வெற்றி பெற்ற, விரும்பிக் கேட்ட தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதை கண்ட அவரது கூட்டணிக் கட்சிகள், ஒன்றிணைந்து 3வது அணி அமைக்க திட்டமிட்டன. இந்திய, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில செயலர்கள் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அலுவலகத்திற்குச் சென்று அவருடன் ஆலோசனை நடத்தினர். 3வது அணி உருவாக்குவது பற்றி நாளை இறுதி முடிவு எடுத்து அறிவிப்பதாக செய்தியாளர்களிடம் விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இதுவரை வாய் திறக்காத இருந்த அ.இ.அ.தி.மு.க. தலைமை, இன்று மாலை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், “கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் முடியாததால், வெள்ளிக்கிழமை தொடங்குவதாக இருந்த புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தேர்தல் பிரச்சார பயணம் தள்ளிவைக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

ஆக, நாளை முதல் மீண்டும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...