|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 March, 2011

தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் பேசாவிட்டால் வேறு எங்கு போய் நாம் தமிழ் பேசுவது?


சென்னை: தாய் மொழியான தமிழ்மொழிக்குப் பிறகுதான் மற்ற மொழிகளை மாணவ மாணவியர் கற்க வேண்டும். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தமிழ் பேசாவிட்டால் வேறு எங்கு போய் தமிழ் பேசுவது, என்றார் கவிஞர் வைரமுத்து.


சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவை நிறைவு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் மு.தவமணி தலைமை தாங்கினார். கல்லூரி அறக்கட்டளை தலைவர் சுவாமிநாதன் ஐ.ஏ.எஸ். முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு ஆய்வு நூலை வெளியிட்டார்.

இந்த விழாவில் வைரமுத்து பேசியதாவது:

தமிழ் மணக்கும் இந்த மேடையில் ஆண்டறிக்கை ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டது. இனிமேல், ஆண்டறிக்கையையும் தமிழிலேயே வாசிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் பேசாவிட்டால் வேறு எங்கு போய் நாம் தமிழ் பேசுவது? எந்த மொழிக்கும் நான் எதிரி அல்ல. ஆனால், தாய்மொழியை கற்றுக்கொண்ட பிறகு எந்த மொழியை கற்றுக்கொள்வதிலும் எனக்கு முரண்பாடு கிடையாது.

இன்னும் சொல்லப்போனால் உலகில் அதிக மக்களால் பேசப்படுகிற சீன மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். ஆங்கிலத்துக்கு அடுத்து அமெரிக்காவை ஆளப்போகும் ஸ்பானிஷ் மொழியை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

எத்தனை அறிவு பெற்றாலும், எத்தனை கண்டங்கள் கடந்தாலும் தாய்வழி பண்பாடு, தாய்மொழி நாகரிகம் என்ற இரண்டையும் மறந்து விடாதீர்கள்.

மேல்நாட்டுக்காரர்கள் இந்தியாவுக்கு வந்து வியப்பது பனி படர்ந்த இமயமலையை அல்ல. பளிங்கு தாஜ்மகாலை அல்ல. மூன்று கடல்கள் கூடிக் கும்மி அடிக்கும் குமரி முனையை அல்ல. இந்திய பண்பாட்டின் குடும்பம் என்ற கட்டமைப்பைத் தான் அவர்கள் வியந்து பார்க்கிறார்கள்.

ஐம்பது வயது மகளை எழுபது வயது தாய் அணைத்துக் கொள்வதும், நாற்பது வயது பேரனை எண்பது வயது பாட்டன் தழுவிக்கொள்வதும் நமது பண்பாட்டில் மட்டுமே காணக்கூடிய சிறப்பம்சமாகும்.

நமது பண்பாட்டின் உறவுகளின் வழியே உரிமைகளும், கடமைகளும் தொடர்கிற ஒரு மனிதச் சங்கிலி அமைப்பு முறை பேணப்படுகிறது. இந்த பண்பாட்டிற்கு அடிநாதமாக இருப்பவர்கள், பெண்களாகிய நீங்கள் (கல்லூரி மாணவிகள்).

வேலையே உடற்பயிற்சி...

எங்கள் பாட்டிமார்களும், எங்கள் அன்னைமார்களும் தனியாக எந்த உடற்பயிற்சியும் மேற்கொண்டது இல்லை. உலக்கை பிடிப்பதும், அம்மி அரைப்பதும், கோலமிடுவதும், வீட்டுக் கடமையாற்றுவதும் அவர்களுக்கு எப்போதுமே உடற்பயிற்சிகளாக அமைந்தன.

கம்ப்யூட்டர் முன்பும், டி.வி. முன்பும் வாழ்வின் பெரும்பகுதியை செலவிடுகிற இந்த கால பெண்கள், உடலுக்கு பயிற்சி இல்லாமல் போனார்கள். உங்கள் வேலையை உடற்பயிற்சியாக மாற்றிக்கொண்டால் தனியாக உடற்பயிற்சி தேவையில்லை.

உழைக்கும் பெண்கள் அதிகமாக உள்ள தேசம் இந்தியாதான் என புள்ளி விவரம் கூறுகிறது. ஆனால், ஆண்டுக்கு 39 ஆயிரம் கற்பழிப்புகளும், 42 ஆயிரம் வரதட்சணை சாவுகளும், 27 ஆயிரம் பாலியல் கொடுமைகளும் இந்த மண்ணில்தான் நிகழ்கின்றன என அதே புள்ளி விவரம் கூறுகிறது. எனவே, இன்னும் முழுமையான முன்னேற்றத்தை நோக்கி பெண் குலம் முன்னேற வேண்டும்.

உங்களில் யாரோ ஒரு இந்திரா காந்தி, யாரோ ஒரு கல்பனா சாவ்லா, யாரோ ஒரு மேடம் கியூரி, யாரோ ஒரு சானியா மிர்சாவாக இருக்கலாம். உங்களுக்குள் உள்ள ஆற்றலை தட்டியெழுப்புங்கள். இன்னும் பத்து, பதினைந்து ஆண்டுகள் கழித்து என்னை எங்கே சந்தித்தாலும் தேடி வந்து பேசுங்கள், 'நீங்கள் விதைத்த லட்சிய விதையில் முளைத்தவள் நான்' என்று உங்களில் யாராவது வந்து என்னிடம் சொன்னால் அதுவே எனது பேச்சால் விளைந்த பெரும் பேறாக கருதுவேன்...", என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...