|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 March, 2011

தி.மு.க.,வை திணறடித்த காங்., மேலிடம்: அரசியல் களத்தில் அரங்கேறிய அடேங்கப்பா பின்னணி

கட்சியின் உயர் மட்டக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பிறகும், காங்கிரசுடன் தி.மு.க., கூட்டணி வைத்துக் கொண்டது, அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. மிகப்பெரிய அரசியல் நாடகத்தின் முடிவில் நடந்த புதிருக்கான விடை, சற்று மெல்ல விலகியுள்ளது. தி.மு.க.,வை வழிக்கு கொண்டுவர, காங்கிரஸ் எடுத்த பிரம்மாஸ்திரமும், அ.தி.மு.க., ஆடிய சதுரங்க ஆட்டமும் தான், தி.மு.க.,வை திணறடித்து, கடைசியில், கேட்டதற்கு அதிகமாகவே, 63 தொகுதிகளை கொடுத்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டது என்பது தெரியவந்துள்ளது.

தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை, ஆரம்பம் முதலே கடும் இழுபறியாக இருந்தது. ஐவர் குழு, பல முறை கூடி பேசியும், துளியும் முன்னேற்றம் இல்லை. இதனால், மேலிடத் தலைவரான குலாம்நபி ஆசாத்தே வந்து கருணாநிதியுடன் பேசினார். அப்போது, இருதரப்புக்கும் கடும் இறுக்கம் ஏற்படவே, அடுத்தநாளே, தி.மு.க., உயர்மட்டக்குழு கூடியது. ஐ.மு., கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாகவும், அடுத்தநாளே அமைச்சர்கள் ராஜினாமா கடிதங்களை அளிப்பர் என்றும் அறிவிக்கப்பட்டது. உயர்மட்டக்குழு என்பது, தி.மு.க.,வின் அதிகாரம் மிக்க அமைப்பு. அங்கு ஒரு முடிவு எடுக்கப்பட்டால், அதை மாற்ற வாய்ப்பே இருக்காது. 53லிருந்து 57 சீட் வரை மட்டுமே அளிக்க முடியும் என கறாராக பேசிவிட்டு, இரண்டு நாட்களாக, காங்கிரசிடம் இடைவிடாமல் பேசி பேசி, கடைசியில், 63 வரை காங்கிரசுக்கு அளிக்க முன்வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. என்ன நடந்துவிட்டது இடையில் என்ற கேள்விக்கும், எதற்காக இந்த முடிவை மாற்ற வேண்டுமென்றும் என்ற கேள்விக்கும், தற்போது விடை தெரியவந்துள்ளது.

தே.மு.தி.க., - அ.தி.மு.க., அணியில் சேர்ந்துவிட்டபிறகு காங்கிரசுக்கு வேறு வழியில்லை என தெரிந்த பின்னரே, தி.மு.க., தீர்மானத்தை நிறைவேற்றி, காங்கிரசுக்கு நெருக்கடி கொடுத்தது. ஆனால், அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்கு காங்கிரஸ் ஆயத்த வேலைகளை ஆரம்பிக்கப் போவதற்கான அறிகுறிகள் தென்பட துவங்கியதும், தி.மு.க., ஆடிப்போனது. தி.மு.க.,வின் இந்த தள்ளாட்டத்தை ரசித்துக் கொண்டே, வேண்டுமென்றே அ.தி.மு.க.,விடம் தூது பேசும் காட்சிகளை, காங்கிரஸ் அரங்கேற்றியது. டில்லியில் ம.நடராஜன் முகாம் அடித்து இருந்ததால், காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடப்பதை, தி.மு.க., கவனித்தது. அதற்கேற்ப, அன்றைய தினம் காலையில் பார்லிமென்டில் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் பலரும் குஷியாக இருந்தனர். குறிப்பாக, தம்பிதுரை, செம்மலை, பாலகங்கா போன்றவர்கள், மிகவும் பிசியாக இருந்தனர். அவர்களிடம் பேசியபோது, "அதெல்லாம் ஒன்றுமில்லை' என, மறுத்தனர். ஆனாலும், அவர்களின் முகபாவங்கள் மகிழ்ச்சி ஆகியவை எல்லாம், "ஏதோ நடக்கிறது' என்பதை மட்டும் உறுதிப்படுத்தியது.

அ.தி.மு.க., கூட்டணி பற்றி காங்கிரஸ் எம்.பி.,க்கள் மத்தியிலும் பலமான பேச்சு இருந்தது. இதை, காங்கிரஸ் வேண்டுமென்றே செய்தது. சென்னையிலும் ம.தி.மு.க., - இடதுசாரிகள் கட்சிகளுடன் அ.தி.மு.க., நடத்தியிருக்க வேண்டிய பேச்சுவார்த்தையும் தாமதமாகிக் கொண்டே இருக்கவே, தி.மு.க.,வுக்கு உச்சகட்ட டென்ஷன் ஆனதாக தெரிகிறது. இதையடுத்தே, எப்படியும் அ.தி.மு.க., பக்கம் காங்கிரஸ் சென்று விடாமல், தடுத்தே ஆக வேண்டுமென வியூகம் வகுக்கப்பட்டது. காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை அளிக்க தயாராக இருப்பதாகவும், குறிப்பிட்ட தொகுதிகளையும் கூட அளிக்க தயார் என, தி.மு.க., இறங்கி வந்ததாகவும் அடுத்தடுத்த பேச்சுவார்த்தையில் முடிவானது. பின்னர் ஒருவழியாக, 63 தொகுதிகள் என முடிவாகி அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தையை துவங்கி அதை காட்டி காட்டியே காங்கிரஸ், தி.மு.க.,விடம் தன் தொகுதிகளை கேட்டு வாங்கிக் கொண்டது.

ஆனால், காங்கிரஸ் வகுத்த வியூகத்திற்கு அ.தி.மு.க., ஏன் வளைந்து கொடுக்க வேண்டும், அதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது பற்றி விசாரிக்கையில், ஆச்சரியமான வியூகங்கள் அந்த பக்கம் இருந்தும் வருகின்றன. தற்போது, தே.மு.தி.க., இருப்பதால், இந்த கூட்டணியே போதுமான பலமுடன் இருக்கிறது. தேர்தலை சந்திக்க இதுவே போதும் என்பது அ.தி.மு.க.,வின் நிலை. காங்கிரஸ் வருமானால், அந்த கட்சிக்கு குறைந்தது 50 தொகுதிகள் வரை ஒதுக்கவேண்டும். அப்படி காங்கிரசும் சேரும்போது, அ.தி.மு.க.,வின் வெற்றி, 100 சதவீதமாகவிடும். அந்த சூழ்நிலையில், தே.மு.தி.க., - காங்கிரஸ் இரு கட்சிகளுமே தாங்கள் போட்டியிட்ட 90 தொகுதிகள் வரை வெற்றியை பெற்று இருக்கும் சூழ்நிலையில், முதல்வர் யார் என்ற கேள்வியும் கூடவே வரும். ஜெயலலிதா எளிதாக முதல்வராவதற்கு சிக்கல் உருவாகும். அந்த நிலை வருவதை அ.தி.மு.க., தலைமை விரும்பவில்லை. அதனால் தான், காங்கிரசை சேர்த்துக் கொள்ளும் எண்ணம் அ.தி.மு.க.,வுக்கு கிடையவே கிடையாது. தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்ற வேண்டுமென்பது மட்டுமே, அ.தி.மு.க.,வின் எண்ணம். அதற்காக, அ.தி. மு.க.,வும், காங்கிரஸ் நேற்று முன்தினம் நடத்திய நாடகத்திற்கு, தன் பங்கிற்கு காய் நகர்த்தி பரபரப்பை கிளப்பியது. இப்படி காங்கிரசும் அ.தி.மு.க.,வும் ஆடிய சதுரங்க ஆட்டத்தில், தி.மு.க., மிகுந்த தள்ளாட்டத்திற்கு ஆளாகி, இறுதியில், 63 தந்து தனது இடத்தை, ஐ.மு., கூட்டணியில் தக்க வைத்துக் கொண்டது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...