|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 May, 2011

வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகள் கொலை - கோதபயவுக்கு எதிராக பொன்சேகா சாட்சியம்

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை கொன்று விடுமாறு அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோதபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார் என்று அந் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் அவர் இவ்வாறு சாட்சியளித்துள்ளார்.

வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொன்சேகா நீதிமன்ற விசாரணையின்போது கூறுகையில், வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்து விடுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்ததாக இறுதிக் கட்ட யுத்தத்தில் ராணுவத்தினருடன் தங்கியிருந்த பத்திரிக்கையாளர்கள் இருவர் மூலமாக நான் கேள்விப்பட்டிருந்தேன்.

ஆனால் அதற்கு மேல் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. மேலும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் யாரும் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்ததாக நான் அறியவுமில்லை. மேலும் ராணுவத் தளபதி என்ற வகையில் அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள எனக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை.

இந்த விவரங்களை நான் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸிடமும் தனிப்பட்ட முறையில் உரையாடும் போது தெரிவித்திருந்தேன். போர் காலத்தில் என்னால் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ராணுவத் தளபதியே என்னை கைது செய்தார்.

முன்பு விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற போரில் பின்னடைவு ஏற்பட்டபோது, மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் இருந்த ஒரு அதிகாரி கோழைத்தனமாக கண்ணீர் விட்டு அழுதார். இதனால் படையின் கட்டளை பிறப்பிக்கும் பொறுப்பில் இருந்து அவரை நீக்கினேன். ஆனால், 2010 ஜனவரி மாதம் அந்த அதிகாரி மூலமாகவே என்னை கைது செய்ய வைத்தனர்.

நாட்டுக்காக நான் ஏராளமான தியாகங்களைச் செய்துள்ளேன். ஆனால், என்னை கோதபய நம்பவே இல்லை. என் மீது அவருக்கு எப்போதுமே சந்தேகம் இருந்து வந்தது. மேலும் ராணுவ வீரர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை இலங்கை அரசு மதிப்பது தற்போது குறைந்துவிட்டது.

மேலும் போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களையும் போரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் மறுவாழ்வு அளிக்க நான் முன் வைத்த திட்டத்தையும் அதிபர் ராஜபக்சேவும் கோதபயவும் ஏற்க மறுத்துவிட்டனர் என்று கூறியுள்ளார். மேலும் புலிகளுக்கு எதிராக தான் தலைமை தாங்கி நடத்திய தாக்குதல்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...