|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 May, 2011

தூதரக அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கெல்லாம் சலுகை காட்ட முடியாது-அமெரிக்கா

தூதரக அதிகாரிகளுக்கு மட்டும்தான் தூதரக சலுகை தர முடியும். அவர்களது குடும்பத்தினர்களுக்கெல்லாம் தர முடியாது. அப்படி ஒரு விதிமுறையே இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.

நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் துணைத் தூதராக இருக்கும் தேபஷிஸ் பிஸ்வாஸின் மகள் கிருத்திகா பிஸ்வாஸ். இவரை சமீபத்தில் அமெரிக்க போலீஸார் திடீரென கைது செய்தனர். அவர் படித்து வரும் பள்ளியில் ஆசிரியர்களுக்கு ஆபாச இமெயில் வந்தது. அதை அனுப்பியவர் கிருத்திகாதான் என்று கூறி பள்ளி நிர்வாகம் அவரை நீக்கியது. அதைத் தொடர்ந்து கிருத்திகா கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டார்.

பின்னர்தான் அவரை விடுவித்தனர். மேலும் தவறு செய்தது கிருத்திகா இல்லை என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து அவரை மீண்டும் பள்ளியில் சேருமாறு நிர்வாகம் கடிதம் அனுப்பியது.

இந்த நிலையில் தன்னை அவமானப்படுத்தி, கைது செய்ததற்காக நியூயார்க் நகர மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் ரூ. 7.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி கிருத்திகா வழக்கு தொடர்ந்துள்ளார். இது அமெரிக்காவை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

மேலும், அமெரிக்க போலீஸாரின் மனிதாபிமானற்ற செயலையும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து கிருத்திகா கூறுகையில், நான் கைது செய்யப்பட்டு நீண்ட நேரமாகியும் என்னை கழிப்பறைக்குக் கூட செல்ல அனுமதிக்கவில்லை. நீண்ட நேரம் கழித்தே என்னை அனுமதித்தனர். அதுவும், பல கைதிகள் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையில் உள்ள கழிப்பறைக்குச் செல்ல பணித்தனர். இதனால் அத்தனை பேர் முன்னிலையிலும் நான் கழிப்பறையை பயன்படுத்த நேரிட்டது என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கிடையே, கிருத்திகாவுக்கு தூதரக சலுகையை அமெரிக்க நிர்வாகம் தரவில்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறுகையில், தூதரக அதிகாரிகளுக்கு மட்டுமே சலுகைகள் செல்லும். அவர்களின் குடும்பத்தினருக்கு அது கிடையாது.

தூதரக அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை, விசாரணை போன்றவற்றை எடுக்கக் கூடாது என்று வியன்னா மாநாட்டுத் தீர்மானம் கூறுகிறது. அதேசமயம், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த சலுகை கிடையாது என்பதையும் வியன்னா மாநாட்டுத் தீர்மானம் தெளிவாக குறிப்பிடுகிறது. தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினரிடம் தூதரக பாஸ்போர்ட் இருந்தாலும் கூட அவர்களுக்கு சலுகைகள் கிடையாது என்றார் அவர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...