|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 June, 2011

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தங்களது செலவு கணக்கை தேர்தல் கமிஷனிடம், கடந்த 13ம் தேதிக்குள் தாக்கல்!


தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தங்களது செலவு கணக்கை தேர்தல் கமிஷனிடம், கடந்த 13ம் தேதிக்குள் தாக்கல் செய்தனர். சுயேச்சைகள் 223 பேர் மட்டும் கணக்கு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் இரண்டாவது, மூன்றாவது இடங்களை பிடித்த வேட்பாளர்களின் செலவு கணக்கை, தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், தி.மு.க., சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின், வெறும், 3 லட்சத்து 32 ஆயிரத்து 709 ரூபாய் மட்டுமே செலவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் சைதை துரைசாமி, 6 லட்சத்து 11 ஆயிரத்து 659 ரூபாய் செலவழித்ததாக கணக்கு காட்டியுள்ளார். தி.மு.க.,வின் பொதுச் செயலர் அன்பழகன், தான் போட்டியிட்ட வில்லிவாக்கம் தொகுதியில், 8 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவழித்ததாக குறிப்பிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, தான் போட்டியிட்ட திருவாரூர் தொகுதியில் 4 லட்சத்து 47 ஆயிரத்து 615 ரூபாய் 97 காசு செலவழித்ததாக கணக்கு காட்டியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதியில் 9 லட்சத்து 60 ஆயிரத்து 52 ரூபாய் செலவழித்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ரிஷிவந்தியம் தொகுதியில் 7 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செவழித்ததாக குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ், தே.மு.தி.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர், தேர்தல் செலவுக்கு கட்சி சார்பில் பணம் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தங்களுக்கு கட்சி சார்பில் பணம் தரப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். தி.மு.க., வேட்பாளர்கள் மட்டும், தங்களுக்கு கட்சி சார்பில் பிரசார பொருட்கள் வழங்கப்பட்டதாகவும், இதற்கு மதிப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். போஸ்டர்கள், தொப்பி, ஸ்டிக்கர்கள், "சிடி'க்கள், தேர்தல் அறிக்கை, மப்ளர், பேட்ஜ், பனியன் போன்ற பிரசார பொருட்களை, கட்சித் தலைமை வழங்கியதாக இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தே.மு.தி.க., வேட்பாளர்களை பொறுத்தவரை, கட்சி சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இதுதவிர, இவர்கள் வாங்கிய நன்கொடையையும் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக, சென்னை எழும்பூர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் நல்லதம்பி, அபிராமி மால் நிறுவனத்திடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார். இவர் மொத்தம் 3 லட்சத்து 43 ஆயிரத்து 262 ரூபாய்க்கு செலவு கணக்கு காட்டியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்கள், தங்களுக்கு கட்சித் தலைமையிடம் இருந்து தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இதில், ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட சிவராஜ், கட்சியில் இருந்து 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், இவர் செலவு செய்தது, 7 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் தான். இதேபோல, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தனக்கு கட்சித் தலைமை 10 லட்சம் ரூபாய், கார்த்திக் கிரானைட்ஸ் நிறுவனம் ஐந்து லட்சம் ரூபாய் என பணம் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், இவரது செலவு கணக்கு மொத்தமே 4 லட்சத்து 4,809 ரூபாய் தான். காங்கிரஸ் வேட்பாளர்களில் பெரும்பாலானோர், கட்சித் தலைமை வழங்கிய தொகையை கூட செலவழிக்கவில்லை என்று தெரிகிறது.

சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் அன்பழகன், சோனியா கலந்து கொண்ட பொதுக் கூட்டத்துக்காக 74 ஆயிரத்து 850 ரூபாய் செலவழித்ததாக கணக்கு காட்டியுள்ளார். பா.ம.க., வேட்பாளர்களில் சிலர், உண்டியல் வசூல் மூலம் பணம் வந்ததாக கணக்கு காட்டியுள்ளனர். கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை பொறுத்தவரை, கட்சியில் இருந்து பணம் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக, மதுரவாயல் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் பீமாராவ், மொத்தம் 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவழித்ததாக கணக்கு காட்டியுள்ளார். ஆனால், தனக்கு கட்சியில் இருந்து 8 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டதாகவும், இதுதவிர, மற்றவர்களிடம் 30 ஆயிரம் ரூபாய் வசூலித்தது, டாக்சி டிரைவர்கள் சங்கத்திடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய், விமான நிலைய குடியிருப்போர் நலச் சங்கத்திடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் என வாங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள், தங்களுக்கு கட்சித் தலைமை பணம் வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...