|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 June, 2011

முதல் தலைமுறை பொறியியல் மாணவர்களுக்கான கல்வி கட்டண சலுகை தொடரும்!


பொறியியல் கல்விக்கான பொதுப் பிரிவு கவுன்சிலிங், அடுத்த மாதம் 8ம் தேதி துவங்கும். முதல் தலைமுறை பொறியியல் மாணவர்களுக்கான கல்வி கட்டண சலுகை தொடரும் என, உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார். அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், 2011-12ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, 10 இலக்க, ரேண்டம் எண் வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை அண்ணா பல்கலை, தேர்வு மைய வளாகத்தில் நடந்தது. கணினிவழி, ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சியை, உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் துவக்கி வைத்து, இரண்டு மாணவர்களுக்கு, ரேண்டம் எண்ணை வழங்கினார். இணையதளத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப எண்ணை, டைப் செய்து, தங்களின், ரேண்டம் எண்ணை பெறலாம்.

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள அனைவருக்கும், ரேண்டம் எண் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை செயலர் கண்ணன், தொழில்நுட்ப கல்வி கமிஷனர் குமார் ஜெயந்த், அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர், பொறியியல் கல்வி சேர்க்கை பிரிவு இயக்குனர் நாகராஜ், செயலர் ரேமண்ட் உத்தரியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இந்நிகழ்ச்சிக்கு பின், அமைச்சர் பழனியப்பன், நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டு பொறியியல் கல்விக்கு, 1 லட்சத்து, 63 ஆயிரத்து, 509 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 1 லட்சத்து, 48 ஆயிரத்து, 353 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், மொத்தம், 494 உள்ளன. இவற்றில், அரசு ஒதுக்கீடான, 1 லட்சத்து, 25 ஆயிரம் இடங்களுக்கான கவுன்சிலிங்கிற்கு, வரும் 24ம் தேதி, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இப்பட்டியலின்படி, வரும் 30ம் தேதி துவங்கும் கவுன்சிலிங், 35 நாட்கள் வரை நடைபெறும். சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மட்டும் கவுன்சிலிங் நடக்கும்.

முதல் தலைமுறை பொறியியல் மாணவர்களுக்கு கல்வி கட்டண சலுகை வழங்கும் திட்டம் தொடரும். புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகளை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். அன்னை தெரசா, மதுரை காமராஜர் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் ஆகிய பல்கலைகளுக்கு விரைவில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த நியமனம் வெளிப்படையான முறையில் இருக்கும். கலை, அறிவியல் கல்லூரிகளின் பாடத்திட்டத்தை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக வெளியிட ஆவன செய்யப்படும். இவ்வாறு பழனியப்பன் கூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...