|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 July, 2011

தீயை விடப் புகை ஆபத்தானது! ப்ரியா ரவிச்சந்திரன்!

- இந்த ஒற்றை எழுத்துக்குப் பரபரக்காதவர்களே கிடையாது. ஆனால் இந்த ஒற்றை எழுத்தால் விளையும் அழிவுகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. தீபாவளி போன்ற பண்டிகைகளின் போதும், பல்வேறு சமயங்களிலும் திடீர் திடீரென நடக்கும் தீ விபத்துக்களைத் தீரமுடன் எதிர்கொள்பவர்கள் தீயணைப்பு வீரர்கள். அவர்களின் சார்பாக தீயணைப்புப் பணியில் எதிர்கொள்ளும் சவால்களைச் சுட்டும் விழிச் சுடராய் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் தீயணைப்புத் துறையின் மத்திய சென்னை, கோட்ட அலுவலர் ப்ரியா ரவிச்சந்திரன். இந்திய அளவில் தீயணைப்புத் துறையில் பயிற்சி பெற்ற பெண் அதிகாரிகள் இருவர். அதில் ப்ரியா ரவிச்சந்திரனும் ஒருவர்.


 எப்போதாவதுதானே தீயணைப்புத் துறை வீரர்களுக்கு வேலை இருக்கிறது. மீதி நேரமெல்லாம் ஓய்வாகத்தானே இருக்கிறார்கள் என்ற ஒரு கருத்து  நிலவுகிறதே...!  எப்போதாவதுதான் போர் நடக்கிறது. அதற்காக ராணுவ வீரர்கள் அனைவரும் ஓய்வெடுக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா? வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போதும், பெரும் விபத்துகளின் போதும் ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதைப் போன்றே, தீயணைப்பு வீரர்களும் ஈடுபடுவார்கள். எப்போது வேண்டுமானாலும் தீ விபத்துகள் ஏற்படலாம் என்ற நிலையில், நாங்கள் எப்போதும் தீயை அணைப்பதற்காகத் தயார் நிலையிலேயே இருக்கிறோம். எங்களுக்கு விபத்து பற்றிய முதல் தகவல் வந்த ஓரிரு மணித்துளிகளுக்குள் தீயணைப்பு வண்டி நிலையத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்ற விதியெல்லாம் இருக்கின்றது. மற்ற வேலைகளைப் போல் இது காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை செய்யும் வேலை கிடையாது. 24 மணிநேரமும் தீயை அணைப்பதற்குத் தங்களை எந்நேரமும் விழிப்புடன் வைத்திருக்கும் வேலை.
 
தீ விபத்துகள் எல்லாம் ஒரே தன்மை
 யுடையவையா? 
 சாதாரணமாக அடுப்பிலிருந்து தீ பற்றிப் பரவுவது ஒரு வகை. இதுதவிர, மின் கசிவால் ஏற்படும் தீ, ரசாயனப் பொருட்கள் பற்றிக் கொள்வதால் உண்டாகும் தீ எனப் பல வகைகள் உண்டு. தீ விபத்துகளின் தன்மையைக் கொண்டே அதை அணைக்கும் முறைகள் வேறுபடும். கெமிக்கல்களால் உண்டாகும் தீயை அணைக்க நீரைப் பயன்படுத்த மாட்டோம். நுரை கலவை ஊர்தியைப் பயன்படுத்துவோம்.

 விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்கு நீங்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் எவை?  ஈஆர்டி எனப்படும் அவசர கால மீட்பு ஊர்தியைக் கொண்டு மிக உயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தீ விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்போம். இந்த வாகனத்தில் பல வசதிகள் இருக்கும். ஸ்கை-லிஃப்ட் போன்ற பல நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி மீட்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம். இது தவிர குறுகிய சந்துகளில் புகுந்து தீயை அணைப்பதற்கு உதவும் சிறப்பு மோட்டார் பைக்குகள் போன்ற உபகரணங்களை வாங்கிப் பயன்படுத்துவதற்கு எங்களின் உயர் அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகின்றனர்.

 தீ விபத்துகளில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?  பேருந்துகளில் பயணிக்கும்போதும், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், திருமணக் கூடங்கள் போன்ற இடங்களிலும் விபத்து ஏற்படும் நேரங்களில் தப்பிக்கப் பயன்படும் வழிகள் எங்கே இருக்கின்றன் எனப் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுக்கு மாடி வீடுகளில், ஷாப்பிங் மால்களில் தீ விபத்து ஏற்பட்டால், தப்பிப்பதற்கு லிஃப்டையோ, எக்ஸலேட்டர்களையோ பயன்படுத்தக் கூடாது. படிக்கட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது மிகவும் முக்கியம். தீயணைப்புப் பாதுகாப்பு வாரமான ஏப்ரல் 14 முதல் 21 வரை இதுபோன்ற செய்திகளைப் பள்ளிகள் தோறும் சென்று சொல்கிறோம். அடிப்படையில் தீ விபத்து பற்றி பள்ளிக் குழந்தைகளுக்கு இருக்கும் தெளிவுகூட பெரியவர்களுக்கு இல்லை என்பதுதான் சோகம்.
 
நெருக்கமாக இருக்கும் குடிசைப் பகுதிகளில் தீ பற்றியவுடன் வேகமாகப் பரவும். இதுபோன்ற சமயங்களில் அடுத்து இருக்கும் குடிசையில் தீ பரவாமல் தடுப்பதற்கு வழி செய்ய வேண்டும். தீப்பிடித்த இடத்திலிருந்து உடனே அகன்றுவிடவேண்டும். உடைகளில் தீப்பற்றினால், போர்வையை உடலில் சுற்றித் தரையில் உருண்டு தீயை அணைக்கவேண்டும்.  கேஸ் சிலிண்டர் லீக் ஆகியிருந்தால், மின்சார விளக்கு, ஃபேன் போன்றவற்றின் ஸ்விட்சுகளை ஆன் செய்யக்கூடாது. ரசாயனத்தால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் இடங்களில் புகை கடுமையாக இருக்கும். இதுபோன்ற சமயங்களில் வேகமாகத் தவழ்ந்து புகை படிந்த இடத்தை விட்டு அகல வேண்டும். தீயை விடப் புகை ஆபத்தானது!
 
உங்களை மேம்படுத்திக் கொள்ள துறை சார்ந்த சிறப்புப் பயிற்சி ஏதாவது எடுத்து வருகிறீர்களா? இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 தீயணைப்புத் துறை அலுவலர்களைச் சிறப்புப் பயிற்சிக்காகக் கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு அனுப்பினர். இதில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற மூவரில் நானும் மீனாட்சி விஜயகுமாரும் இருந்தோம். அங்கு தீயணைப்புத் துறையில் நவீன உபகரணங்களைப் பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி முகாமில் பங்கேற்றோம். இதேபோல், ஜெர்மனியில் நடந்த "இண்டஸ்ட்ரி ரிஸ்க் மேனேஜ்மென்ட் ஸ்டடி' பயிற்சி முகாமில் பங்கேற்றது நல்ல அனுபவமாக இருந்தது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...