|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 August, 2011

பதவி ஆசையே இல்லாத பாமக தலைவர் அவர்களே..!


அன்புமணி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி சொன்னதற்கு நான் அளித்த பதிலால் அவருக்குக் கூட வராத கோபம், கோ.க.மணிக்கு வந்திருப்பது ஏன் என யோசித்தேன். பிறகு தான் புரிந்தது, தன்னுடைய மகன் தமிழ்க் குமரனை சட்டமன்ற இடைத்தேர்தலில் நிற்க வைத்து அழகு பார்த்தவருக்குக் கோபம் வராதா என்ன? என் மனைவியோ, பிள்ளைகளோ அன்றும் - இன்றும் - என்றும் திமுகதான்.

கட்சிக்காக பணியாற்றுபவர்கள்தான். நல்ல வேளையாக யாரோ வற்புறுத்துகின்றார்கள் என்று சொல்லி என் பிள்ளை சட்டமன்றத்திற்கும் நிற்க வைக்கவில்லை. பாராளுமன்றத்திற்கும் நிற்கவைக்கவில்லை. உங்களுக்கு என்று வந்து விட்டால் அது அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பம். 75 ஆண்டு கால பொது வாழ்க்கைச் சொந்தக்காரரான கலைஞர் குடும்பம் என்றால் பாரம்பரியம் இல்லையா? ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாக செஞ்சியாரைப் பற்றியும், எ.ஜி.சம்பத்தைப் பற்றியும் திடீர் சமுதாய அக்கறையோடு பேசும் அன்பிற்குரிய கோ.க.மணி அவர்களே,

அருள் கூர்ந்து உங்கள் கட்சியில் முதல் முதலாக வெற்றி பெற்று யானை மேல் அம்பாரி போன பண்ருட்டி ராமச்சந்திரன் - உங்கள் கட்சி வேட்பாளராக என்னை எதிர்த்து விழுப்புரம் சட்டமன்றத் தேர்தலில் நிறுத்தினீர்களே - நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி - நண்பர் தீரன் - பூ.தா.இளங்கோவன், பூ.தா.அருள்மொழி இவர்கள் எல்லாம் எந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று விரட்டினீர்கள்.

அவ்வளவு ஏன்? டாக்டர் அய்யாவின் சொந்தத் தம்பி சீனுக்கவுண்டர் அவர்கள் வெளியேறக் காரணம் என்ன? தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியை மாற்றிக் கொள்ளும் பதவி ஆசையே இல்லாத பாமக தலைவர் அவர்களே யாரையோ திருப்திப்படுத்துவதற்காக மனசாட்சியை மறந்துவிட்டுப் பேசாதீர்கள் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...