|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 August, 2011

சுதந்திரம்...

இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடியிருக்கிறோம். யோசித்தால், ஒன்றுமே செய்யாமல் வீட்டில் ‘சிறப்ப்ப்ப்ப்புத் திரைப்படங்களை’ மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்ததுதான் மிச்சமாய் இருக்கும். நம்மூர் செய்தித் தொலைக்காட்சிகள் வெவ்வேறு ஊர்களில், திரும்பத்திரும்ப கொடி ஏற்றியதையும், முட்டாய் கொடுத்ததையும் சொல்லிக்கொண்டிருந்தன. அதே நேரத்தில் அன்னா ஹசாரே என்ற அந்தத் தனி மனிதன் ராஜ் காட்டில், மழைத்தூறலில் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். பார்த்துக்கொண்டே இருந்தபோது கண்கள் மறைத்து அவர் போட்டிருந்த வெள்ளை உடை மங்கலாகத் தெரிய ஆரம்பித்தது. அழுதிருக்கிறேன். 

நாளை அவர் உண்ணாவிரதம்  இருப்பதற்குத் அனுமதியும் மறுத்து, அந்தப்பகுதிக்கு 144 தடை உத்தரவையும் விதித்திருக்கிறது திருடர்களைப் பாதுகாப்பதில் முனைப்புடன் இருக்கும் ’மண்’மோகன் அரசு! இதற்கிடையில் அன்னாவின் அறக்கட்டளை பற்றி விமர்சனங்கள் வேறு! அவர் தவறு செய்திருக்கிறார் என்றால் இவ்வளவு ஆண்டுகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? இப்போது நோண்டக்காரணம் அவர் உங்கள் உயிர்நாடியான ஊழலை எதிர்க்கிறார் என்றுதானே? அடிமைப்பட்டிருந்த காலத்தில் பிறந்து , அஹிம்சையால் சுதந்திரமடைந்த ஒரு நாட்டில், ஊழலின் வேர் ஆழமாக ஊன்றியிருக்கும் வேளையில் , அதைக் கொஞ்சமாவது வெட்டவேண்டுமென்று நினைத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அஹிம்சை வழியில் போராடும் ஒரு மனிதனை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்துகிறார்கள்?வெட்கமாக இருக்கிறது!இப்படி யோசித்துப்பார்த்தேன்.

மேடையில் சுதந்திரமடைந்ததற்கு பெருமைப்பட்டு தேசியக்கொடியை ஏற்றிவிட்டு வாய்கிழியப் பேசிவிட்டு, கீழிறங்கியவுடனேயே , ஒரு கூட்டம் நாட்டு நலனுக்காகப் போராட இருப்பதை ஒடுக்க சதித்திட்டம் தீட்டும் பிரதமர் வேலை தேவையா மிஸ்டர். சோனியா? ஒருவேளை சோறின்றி பட்டினியாகக் கிடக்கும் அத்தனை ஏழைகளையும் ஒன்றுதிரட்டினால், இந்தியாவில் தினசரி நடக்கும் சாதாரண நிகழ்வுதான் உண்ணாவிரதம்! அதற்கு என்ன தடை போடுவார்களாம்? அப்படித்தான் போடுங்களேன். பட்டினிச்சாவுகள் நிற்கும்!! 

திருட்டை ஒழிக்கவேண்டுமென்பதற்காக, அதற்கான சட்டத்தை திருடர்களை விட்டே இயற்றச்சொன்னால் இப்படித்தான் நடக்கும்! நாளை அன்னாவை கைது செய்தாலோ, அவர் உண்ணாவிரதத்தை ஒடுக்கினாலோ நாம் மெரினாவில் ஒன்றுகூடுவோமா? – அன்னாவை ஆதரிக்கிறோமோ இல்லையோ இந்த சமுதாயம் ஊழலை ஆதரிக்கவில்லை என்ற ஒற்றை மனநிலையையாவது காட்டலாம்.

நன்றி: சுரேகா.  


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...