|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 August, 2011

ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஷூட்டிங் இந்தியாவில்!

உலகப் புகழ் பெற்ற ஒற்றன் ஜேம்ஸ் பாண்ட் விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளார். அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஷூட்டிங்கை இந்தியாவில் நடத்தத் திட்டமிட்டுள்ளனராம்.டெல்லியின் சரோஜினி நகர் மார்க்கெட் மற்றும் அகமதாபாத்தின் நவகாம் நகர் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெறவுள்ளதாம். மேலும் மும்பை மற்றும் கோவா கடற்கரைப் பகுதிகளிலும் ஷூட்டிங் நடைபெறும் என்று தெரிகிறது.

இந்தியாவில் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஷூட்டிங்கை நடத்தத் தேவையான அனுமதியை மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஏற்கனவே கொடுத்து விட்டதாம். பாண்ட் பட வரிசையில் இது 23வது படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் டெல்லியில் தொடங்கவுள்ளது. சரோஜினி நகர் மார்க்கெட் தவிர அன்சாரி சாலை, தார்யாகஞ்ச் ஆகிய பகுதிகளிலும் ஷூட்டிங் நடைபெறவுள்ளது. சாம் மென்டிஸ் படத்தை இயக்குகிறார். 2012ல் இப்படம் திரைக்கு வரும். பாண்ட் பட நிறுவனம் மற்றும் அப்படத்தின் முக்கிய கேரக்டரான டாக்டர் நோ ஆகியோருக்கு இது 50வது வருடம் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி தவிர வடக்கு கோவா, தென் கிழக்கு ரயில்வேயின் கீழ் வரும் துத்சாகர் சுரங்கப் பாதை, ஜூவாரி ரயில் பாலம் ஆகியவற்றிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது. வெளிநாட்டுப் படம் ஒன்றின் ஷூட்டிங் இந்தியாவில் நடைபெறுவது இது முதல் தடவையல்ல. ஏற்கனவே டாம் க்ரூஸ் நடித்த மிஷன் இம்பாசிபிள் உள்பட இதுவரை 22 வெளிநாட்டுப் படங்களுக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்துள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் 007, ஒரு கற்பனைக் கதாபாத்திரமாகும். இயான் பிளமிங் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் 1953ல் இந்த கதாபாத்திரத்தை வைத்து நூல்களை எழுதினார். மொத்தம் 12 நாவல்களையும், 2 சிறுகதைத் தொகுப்புகளையும் பாண்ட் கேரக்டரை வைத்து அவர் உருவாக்கியுள்ளார். அதை அடிப்படையாக வைத்துத்தான் இதுவரை 22 படங்கள் உருவாகி உலகெங்கும் பாண்ட்டுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களைத் தேடிக் கொடுத்துள்ளன.

1962ம் ஆண்டு முதல் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளியாகத் தொடங்கின. முதல் படத்தின் பெயர் டாக்டர் நோ. இது ஜேம்ஸ் பாண்ட் கதைகளில் இடம்பெறும் முக்கிய கேரக்டராகும். 1964ல் பிளமிங் மரணமடைந்தார். இதையடுத்து பின்னர் வெளியான பாண்ட் கதைகளை கிங்ஸ்லி அமிஸ், ஜான் கார்டினர், ரேமான்ட் பென்சன், செபாஸ்டியன் பால்க்ஸ், ஜெப்ரி டீவர் ஆகியோர் எழுதினர்.

ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்த முதல் நடிகர் சீன் கானரி. மொத்தம் 6 படங்களில் அவர் நடித்துள்ளார். அதிகபட்ச ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்தவர் ரோஜர் மூர். மொத்தம் 7 படங்களில் இவர் நடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்து, அதிகபட்சமாக 4 படங்கள் வரை பியர்ஸ் பிராஸ்னன் நடித்துள்ளார்.

தற்போது ஜேம்ஸ் பாண்ட் வேடங்களில் நடித்து வருபவர் டேணியல் கிரேக். இவர்தான் இதுவரை நடித்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர்களிலேயே அதிக அளவில் பிரபலமாகாத பாண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்ட் வேடங்களுக்கு நடிக்கப் பொருத்தமில்லாதவர் என்று ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டவர் கிரேக்.

இயான் புரடக்ஷன்ஸ் நிறுவனம்தான் இப்படங்களைத் தயாரித்து வருகிறது. கடைசியாக வெளியான ஜேம்ஸ் பாண்ட் படம் குவான்டம் ஆப் சொலஸ். 2008ல் இது வெளியானது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...