|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 September, 2011

நிர்வாகத் திறமையில் நரேந்திர மோடி 'கிங்': அமெரிக்க!

இந்தியாவில் ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும், ஒரு அரசு நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும், ஆளுமை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு குஜராத் மாநிலம் மிகச் சிறந்த உதாரணமாக திகழ்கிறது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தியாவிலேயே மிகச் சிறந்த நிர்வாகியாக திகழ்கிறார். அவரைப் பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் பாடம் கற்றுக் கொள்ளலாம் என்று அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுக் குழு ஒன்று மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆய்வுக் குழு இந்தியா தொடர்பான பல்வேறு அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் மோடியை வெகுவாகப் புகழ்ந்து ஒரு முழு நீள அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்; இந்தியாவில் சிறந்த நிர்வாகம், ஆட்சி புரிதல், வளர்ச்சி ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த உதாரணமாக குஜராத் மாநிலமும், அதன் முதல்வர் நரேந்திர மோடியும் திகழ்கின்றனர். மோடியின் ஆட்சியின் கீழ் குஜராத் மாநிலம் பிரமிக்கத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு குஜராத்தின் பங்கு மிகப் பெரிதாகவும், முக்கியமானதாகவும் மாறியுள்ளது.

பிரதமர் பதவிக்கான பாஜகவின் முக்கிய வேட்பாளர்களில் மிக முக்கியமானவராக மோடி உருவெடுத்துள்ளார். இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மிகச் சிறந்த நிர்வாகியாக அவர் உருவெடுத்துள்ளதால் அந்தப் போட்டிக்கு தானாகவே அவரது பெயரும் வந்து நின்று விட்டது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தையும் விட குஜராத்தில் மிகப் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் மோடி. அதேசமயம், 2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான மிகப் பெரிய வன்முறை மற்றும் தாக்குதல் சம்பவம் இன்னும் மோடி மீதான பெருங்கறையாக நிற்கிறது.

அதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், குஜராத்தில் மிகச் சிறந்த நிர்வாகத்தை நடத்தி வருகிறார் மோடி. சிறப்பான பொருளாதார வளர்ச்சி, மக்களுக்குத் தேவையான திட்டங்களை விரைவாக செயல்படுத்துதல், தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த அதிகாரமட்டத்தில் உள்ள தடங்கல்களை நீக்குவது, ஊழலற்ற நிர்வாகம், விவேகத்துடன் கூடிய வேகம் என அனைத்திலும் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார் மோடி.

மோடியின் சிறந்த ஆட்சி முறை, இந்தியாவின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. சமீப ஆண்டுகளில் குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதத்தையும் தாண்டியிருப்பது வியப்பாக உள்ளது. அடிப்படைக் கட்டமைப்பு, மின்சாரம், சாலை வசதிகள் ஆகியவற்றுக்கு மோடி அரசு மிகுந்த முன்னுரிமை கொடுக்கிறது.

உலக அளவில் முன்னணியில் உள்ள பல்வேறு மோட்டார் தொழில் ஜாம்பவான்களை குஜராத் தன் பக்கம் ஈர்த்துள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், 5 சதவீதத்தை கொண்டுள்ள குஜராத், இந்தியாவின் ஏற்றுமதியில், ஐந்தில் ஒரு பங்கை தன் வசம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்துக்கு அடுத்து குறிப்பிடத்தக்க நிர்வாகத்துடன் கூடிய மாநிலமாக பீகார் விளங்குகிறது. இங்கு முதல்வர் நிதீஷ் குமார் சிறப்பான நிர்வாகத்தை நடத்தி வருகிறார். இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மாநிலம் என்றநிலையிலிருந்து அந்த மாநிலத்தை மீட்டு கொண்டு வர அவர் கடுமையாக பாடுபட்டு வருகிறார். அதற்கு நல்ல பலன்களும் கிடைக்க ஆரம்பித்துள்ளன.

இவரும் மோடியைப் போலவே சிறந்த நல்லாட்சியைத் தந்து வருகிறார். ஜாதிய அரசியலையும் தாண்டி இவரது செயல்பாடுகள் மிகச் சிறப்பாக உள்ளன. சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வந்தது இவரது முக்கியச் சாதனைகளில் ஒன்றாகும். கல்வி, அடிப்படைக் கட்டமைப்பு ஆகியவற்றுக்கும் நிதீஷ் குமார் முக்கியத்துவம் கொடுக்கிறார். சாதாரண மக்கள் பலன் அடையும் வகையிலான திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். மோடியைப் போலவே சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவராக நிதீஷ் குமார் உள்ளார்.

மோடி பாஜகவைச் சேர்ந்தவராக உள்ள நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை நடத்தி வருபவர் நிதீஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி மற்றும் நிதீஷ் குமாருக்குக் கிடைத்துள்ள வெற்றியைப் பார்த்து வெகுவாக ஈர்க்கப்பட்டுள்ளார் உ.பி.முதல்வர் மாயாவதி. அவர்களைப் போலவே தானும் செயல்பட அவர் முயற்சிக்க ஆரம்பித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடியை தேசிய அரங்குக்கு கொண்டு வந்து காங்கிரஸுக்கு பெரும் சிரமத்தைக் கொடுக்க பாஜக முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ள நிலையில் அமெரிக்க நாடாளுமன்றக் குழு மோடியை வெகுவாகப் புகழ்ந்து அறிக்கை அளித்துள்ளது பாஜகவுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும் என்று கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...