|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 September, 2011

நேருவின் ஆடம்பரத்தால் அரசுக்கு பல கோடி இழப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி!

போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் ஆடம்பரச் செலவுகளால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார். இது தொடர்பான ஆதாரங்களை புத்தகமாக அச்சிட்டு அனைத்து எம்.எல்.ஏ.களுக்கும் வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் சனிக்கிழமை அவர் பேசியது: போக்குவரத்துக் கழகங்கள் அதிமுக ஆட்சியில் லாபத்திலும், திமுக ஆட்சியில் நஷ்டத்திலும் இயங்கி வருகின்றன.


கடந்த அதிமுக ஆட்சியில் 90 சதவீத பஸ்கள் சாதாரண கட்டணத்தில் இயக்கப்பட்டன. திமுக ஆட்சியில் 40 சதவீத பஸ்கள் மட்டுமே சாதாரண கட்டணத்தில் இயக்கப்பட்டன. கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கே.என். நேருவும், திமுகவினரும் போக்குவரத்துத் துறையின் பணத்தை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியுள்ளனர். போக்குவரத்துத் துறையின் பணத்தில் 17 சொகுசு கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த கார்கள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, முன்னாள் அமைச்சர்கள் க. பொன்முடி. ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சட்டப் பேரவை முன்னாள் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளன.

நேரு தனக்காக மட்டும் 8 சொகுசு கார்களை பயன்படுத்தியுள்ளார். அவரது 3 உதவியாளர்களுக்காக 6 கார்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த சொகுசு கார்கள் அனைத்தும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் திமுகவினரின் குடும்பத்தினர், உறவினர்கள் போன்றோர் பயன்படுத்தி வந்தனர். இதன் மூலம் போக்குவரத்துத் துறைக்கு ரூ. 5 கோடி விரயம் ஏற்பட்டுள்ளது.
ஜவாஹர்லால் நேரு, அவரது தந்தை வாங்கிக் கொடுத்த 4 கார்களை மட்டுமே பயன்படுத்தினார். ஆனால், இந்த கே.என். நேரு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் உழைப்பால் கிடைத்த பணத்தில் 8 கார்களை வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார். கடந்த திமுக ஆட்சியில் அமைச்சரின் அலுவலகச் செலவு என்ற வகையில் ரூ. 36 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள நேருவின் வீட்டுக்கு வரும் திமுகவினர், உறவினர்களுக்காக இந்தத் தொகை செலவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரின் அலுவலகம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கும்போது, திருச்சியில் உள்ள அமைச்சரின் வீடு முகாம் அலுவலகம் என்று கூறப்பட்டு இந்தச் செலவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல அமைச்சரின் வருகை செலவு என்ற வகையில் ரூ. 35 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. ஆனால்,  குறிப்பட்ட நாளில் பணிமனைகள், அலுவலகங்களுக்கு அமைச்சர் வருகை தந்ததாக குறிப்பேட்டில் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த திமுக ஆட்சியில் நல்ல நிதியுடன் கவனித்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுநர், நடத்துநர் போன்ற பணிகள் வழங்கப்பட்டன. தருமபுரி மண்டலத்தில் பணத்தைப் பெற்றுக் கொண்டு தேவைக்கும் அதிகமாக 687 ஓட்டுநர்கள், 964 நடத்துநர்களை நியமித்துள்ளனர். இவர்களுக்கு பணி கொடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டது. இவ்வாறு தேவைக்கு அதிகமான நியமனங்களால் அரசுக்கு ரூ. 70 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. திருச்சி அருகே உள்ள தனது தோட்டத்துக்கு நேரு செல்லும்போது போக்குவரத்து நெரிசலால் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்படுகிறது. உடனே அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என உத்தரவிடுகிறார். அதன் காரணமாக அரசு பஸ்கள் 2 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் வகையில் திருப்பி விடப்பட்டன. இதனால் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ. 51 லட்சம் விரயம் ஏற்பட்டுள்ளது.

2010-11-ம் ஆண்டில் மட்டும் திமுகவினர் மற்றும் வேண்டியவர்களுக்காக மட்டும் நேரு 540 இலவச பஸ் பாஸ்களை வழங்கியுள்ளார். இதன் மூலம் ரூ. 4 கோடி விரயம் ஏற்பட்டுள்ளது. திமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பலர் வேலைக்கு செல்லாமல் சம்பளம் பெற்றதன் மூலம் சுமார் ரூ. 23 கோடி விரயம் ஏற்பட்டுள்ளது.

அதுபோல நேருவின் உறவினர் நிறுவனங்களின் விளம்பரங்கள் பஸ்களில் அதிகமாக இடம் பெற்றதால் போக்குவரத்து கழகத்துக்கு கிடைக்க வேண்டிய விளம்பர வருவாய் கிடைக்கவில்லை. கடந்த 3 மாத அதிமுக ஆட்சியில் விளம்பரம் மூலம் ரூ. 1.17 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
போக்குவரத்து கழகங்களுக்கு ரூ. 2,017 கோடி கடன் நிலுவையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் ஆடம்பரச் செலவுகளும், லஞ்ச முறைகேடுகளுமே இதற்கு  காரணம். நேரு செய்த செலவுகளை ஆதாரத்துடன் இரண்டு புத்தகங்களாக அச்சிடப்பட்டுள்ளன. அவை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும். இந்தத் துறை சீர் செய்யப்பட்டு லாபத்துடன் இயங்கும் துறையாக மாற்றப்படும். பஸ் வசதி இல்லாத அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி ஏற்படுத்தப்படும் என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...