|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 September, 2011

தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டன!


உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. இதன்முலம் 10 மாநகராட்சி மேயர்கள், 755 மாநகராட்சி கவுன்சிலர்கள், 125 நகராட்சி தலைவர்கள், 3697 நகராட்சி வார்டு கவுன்சிலர்கள், 529 பேரூராட்சி தலைவர்கள், 8303 பேரூராட்சி கவுன்சிலர்கள், 31 மாவட்ட ஊராட்சி தலைவர்கள், 655 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 385 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 6470 ஊராட்சி கவுன்சிலர்கள், 12,524 கிராம ஊராட்சி தலைவர்கள் அதற்குட்பட்ட 99,333 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி விட்டது. இம்மாதம் 29ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 30ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். அக்டோபர் 3ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள். 
அக்டோபர் மாதம் 17 மற்றும் 19ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டன.

சென்னை மாநகராட்சியில் மேயர், துணை மேயர், ஆளுங்கட்சி தலைவர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கு அரசு கார்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால், மேயர் மா. சுப்பிரமணியன், துணை மேயர் சத்யபாமா, ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி ஆகியோர் அரசு கார்களை மாநகராட்சியிடம் திரும்ப ஒப்படைத்து விட்டனர்.

இதேபோல் 155 கவுன்சிலர்களுக்கு அவர்களது வார்டுகளில் அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களை அவர்கள் காலி செய்ய ஆரம்பித்துள்ளனர். அதே போல பிற மாநகராட்சிகளின் மேயர்களும் கார்களை திருப்பித் தர ஆரம்பித்துள்ளனர்.கடும் கட்டுப்பாடுகள்-சுவர் விளம்பரம் எழுத தடை: இந் நிலையில் சட்டசபை தேர்தலைப் போலவே, உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேட்பாளர்கள் சாதி-மத பிரச்சனை உருவாகும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது, வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது, அரசு, தனியார் நிலம், கட்டிடம், சுவர்களில் விளம்பரம் செய்யக்கூடாது, சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது, பிரசாரம் செய்வதற்கு செல்லும் இடம் குறித்து முன்னதாகவே அனுமதி பெற வேண்டும். முன் அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்யக் கூடாது, பிரச்சாரத்துக்கு அனுமதி பெற்று செல்லும் இடங்களில் போக்குவரத்து இடையூறு செய்யக்கூடாது,அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பிரச்சார கூட்டம் நடத்தவேண்டும். இதில் தேர்தல் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும், அரசு சார்ந்த இடங்களை கட்சி சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது. தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது முதல், அமைச்சர்களோ, அதிகாரிகளோ, அவர்களுடைய பிரதிநிதிகளோ, அரசு உதவிகளையோ, மானியங்களையோ வழங்ககூடாது, பிரச்சாரத்துக்கு செல்லும் அமைச்சர்கள் அரசு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது,அரசு திட்டங்களை தொடங்குதல், சாலை, குடிநீர் வசதி, தெருவிளக்கு அமைத்தல் போன்ற பணிகளை செய்யக்கூடாது, ஓட்டுப் போட பணம் கொடுப்பது, வாக்காளர்களை திரட்டுவது, ஆள் மாறாட்டம் செய்து ஓட்டுப் போடுவது போன்றவை கடும் குற்றமாக கருதப்படும்.ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள், வாங்குபவர்கள் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்கும். வாக்குச் சாவடியில் இருந்து 100 அடி தூரத்துக்குள் நின்று ஆதரவு கேட்பதும், வாக்காளர்களை ஓட்டுப்போட வாகனங்களில் அழைத்து செல்வதும் ஊழல் குற்றமாக கருதப்படும்.வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் செலவுக் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும், வாக்காளர் பட்டியலில் பெயர் படம் இருந்தாலும், மத்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள வாக்காளர் அடையாள அட்டை, அல்லது மாநில தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளில் ஒன்றும் இருந்தால் மட்டுமே ஓட்டு போட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...