|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 October, 2011

எதிர்ப்புகளை சமாளிக்க ஹசாரே ஆலோசனை!


ஊழலுக்கு எதிரான எங்கள் அமைப்பு மிகவும் பலமாக உள்ளது. எந்தவித குற்றச்சாட்டுக்களை கூறினாலும், எங்கள் அமைப்பை உடைக்க முடியாது. இந்த அமைப்புக்கு, சட்ட விதிகள் மற்றும் நெறிமுறைகளை உருவாக்க முடிவு செய்துள்ளோம். அதற்கு பின், உயர்மட்டக் குழு மாற்றி அமைக்கப்படும்' என, அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக போராடிவரும் அன்னா ஹசாரே குழுவில் உள்ள முக்கிய நபர்கள் மீது, சமீபகாலமாக தொடர்ந்து புகார் கூறப்பட்டது. பிரசாந்த் பூஷன், காஷ்மீர் விவகாரம் பற்றி பேசியதற்காக, தாக்குதலுக்கு ஆளானார்.  விமான பயணத்துக்காக அளிக்கப்பட்ட சலுகையை, முறைகேடாக பயன்படுத்தியதாக, கிரண்பேடி மீது புகார் கூறப்பட்டது. வருமான வரித்துறை சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதைத் தொடர்ந்து, ஹசாரே குழுவைச் சேர்ந்த மேதா பட்கர், குமார் விஸ்வாஸ் ஆகியோர், ஹசாரேயின் உயர்மட்டக் குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என, வலியுறுத்தினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஹசாரே தரப்பின் உயர்மட்டக் குழு கூட்டம், காஜியாபாத்தில் நேற்று முன்தினம் கூடியது. இதில், உயர்மட்டக் குழுவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என, முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவை, மகாராஷ்டிர மாநிலம், ராலேகான் சித்தியில் மவுனவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரேயிடம் தெரிவிப்பதற்காக, அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன், கிரண்பேடி ஆகியோர், நேற்று அங்கு சென்றனர்.

சந்திப்புக்கு பின், எழுத்து மூலமாக அளித்த பதிலில் ஹசாரே கூறியதாவது:ஊழலுக்கு எதிரான எங்கள் அமைப்பு பலமாக உள்ளது. யாராலும் இந்த அமைப்பை உடைக்க முடியாது. எங்களின் உயர்மட்டக் குழுவை கலைக்கப் போவதாக, தவறான தகவல்கள் வெளியாகின்றன. சிலரின் குற்றச்சாட்டுகளுக்காக, குழுவை கலைத்து விட்டால், ஊழலுக்கு எதிரான எங்களின் போராட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டு விடும். மேலும், எங்கள் அமைப்பின் மீதான நம்பகத்தன்மையும் சீர்குலைந்து விடும். எனவே, குற்றச்சாட்டுகளை கண்டு பயப்பட மாட்டோம்.உயர்மட்டக் குழுவில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து, சவாலை சந்திப்போம். ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். ஜன் லோக்பால் மசோதா நிறைவேறும்வரை, எங்களின் போராட்டம் தொடரும். எதிர்காலத்தில், எங்கள் அமைப்புக்காக, சட்ட விதிமுறைகளையும், நெறிமுறைகளையும் உருவாக்குவோம். அதன்பின், இந்த குழுவில் மாற்றம் மேற்கொள்ளப்படும்.


உயர்மட்டக் குழுவின் உறுப்பினர்கள் யார், செயற்குழுவில் யார் இடம் பெறுவர் என்பது பற்றிய விவரங்கள், விதிமுறைகளில் இடம் பெற்றிருக்கும். எங்களின் போராட்டம், எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் எதிரானது அல்ல.
லோக்பால் மசோதாவை பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றாவிட்டால், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, நாடு முழுவதும் யாத்திரை நடத்துவேன். ஒரு சிலர், எங்களின் போராட்டத்தை சீர்குலைப்பதற்காக, எங்கள் மீது தவறான புகார்களை தெரிவிக்கின்றனர். இந்த புகார்கள், எங்களை எந்தவிதத்திலும் பாதிக்காது. எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை.


எங்கள் அமைப்புக்கு வந்த நன்கொடை பற்றிய விவரங்கள் முழுவதும், இணையதளத்தில் வெளியிடப்படும். எங்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு. காஷ்மீர் பற்றிய விஷயத்தில், பிரசாந்த் பூஷன், தன் கருத்தை தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் ஒருவர் தெரிவிக்கும் கருத்து, எங்கள் குழுவின் கருத்தாகாது. சுவாமி அக்னிவேஷ் விவகாரம் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். எங்கள் அமைப்புக்கு, அறிமுகம் இல்லாத வட்டாரத்தில் இருந்து, வங்கி மூலமாக 40 லட்சம் ரூபாய் நன்கொடை வந்துள்ளது. இதுபோன்ற நிதியை, திரும்ப அளிக்க உத்தரவிட்டுள்ளோம். ராம்லீலாவில் நடந்த போராட்டத்துக்கு பின், நன்கொடை வசூலிப்பதையும், காசோலைகள் பெறுவதையும் நிறுத்தி விட்டோம். இதன்மூலம், நாங்கள் பணத்துக்காக போராட்டம் நடத்தவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

பாபா ராம்தேவ், யோகா குரு.:"" தங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளால், ஹசாரே குழுவினர், மனம் உடைந்துவிடக் கூடாது. அதிலிருந்து மீண்டு, ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எந்தவித சர்ச்சைக்கும் ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஊழல் மற்றும் கறுப்புப் பண பதுக்கலுக்கு எதிரான போராட்டத்துக்கு, நாட்டு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...