|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 October, 2011

எரிச்சல் போக்கும் வாழைப்பூ ஒத்தடம்!


அன்றாடம் நாம் உணவுப்பொருளாகப் பயன்படுத்தும் வாழைப்பூவானது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. துவர்ப்பு மிக்க இந்த வாழைப்பூவை கறியாக சமைத்து உண்ணலாம். பருப்புடன் கூட்டாக செய்தோ, கடலைப்பருப்புடன் சேர்த்து உருண்டை சேர்த்து வடையாகவோ சமைக்கலாம். 
வாழைப்பூ எவ்வாறு சமைத்துச் சாப்பிட்டாலும் அதன் மருத்துவ குணம் மாறுவதில்லை. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், நன்மை தரும் கொழுப்பு அமிலங்களும் உள்ளன. புரதச் சத்து நிறைந்த வழைப்பூவில் வைட்டமின் ஈ மற்றும் ப்ளேவனாய்டுகளும் காணப்படுகின்றன.

கரு உண்டாகும்: நரம்பு நீக்கப்பட்ட வாழைப்பூ ஒரு கைப்பிடியளவு எடுத்து பச்சையாக அரைத்து அரை டம்ளர் அளவிற்கு சாறு எடுத்து சாப்பிட மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படும். வாழைப்பூவைத் தோலோடு இடித்து சாறு எடுத்து ஒரு டம்ளர் சாற்றினை மாதவிலக்கான மூன்று நாட்களுக்குபின் தொடர்ந்து மூன்று நாட்கள் பருகிவர திருமணமான பெண்ணுக்கு கரு உண்டாகும். வாழைப்பூச்சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து உட்கொண்டால் வெள்ளைப்படுதல், வயிற்றுக்கடுப்பு நீங்கும். இளம்பூவை புட்டுபோல அவித்து சாறு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து உட்கொள்ள பெரும்பாடு குணமாகும்.
வயிற்றுவலி நீங்கும்: வாழைப்பூவானது மடலுக்குள் சீப்பு, சீப்பாக அமைந்திருக்கும் ஒவ்வொரு பூவிலும் உள்ள நடு நரம்பையும், கண்ணாடி போன்ற சிறு மடலையும் நீக்கிவிட்டு, பூவை பயன்படுத்த வேண்டும். நரம்பு நீக்கிய வாழைப்பூவுடன் துவரம் பருப்பு சேர்த்து கூட்டாக சமைத்து உண்டு வந்தால் வயிறு தொடர்புடைய கோளாறுகள் நீங்கும். சூதக வயிற்றுவலி, பெருங்குடல்புண், ரத்த பேதி நீங்கும்.

மூலநோய் நீங்கும்: மூலநோய் உள்ளவர்கள் இப்பூவை அடிக்கடி சமைத்து உண்ணவேண்டும். வாழைப்பூ சாறு அரை ஆழக்கு காலை, மாலை சாப்பிட்டு வரவேண்டும். அந்த சமயத்தில் புளி, காரம் தவிர்த்து வந்தால் மூலநோய் மட்டுப்படும். வாழைப்பூச்சாறு நூறு மில்லி எடுத்து எடுத்து பாக்கு அளவிற்கு சீரகம் சேர்த்து அரைத்து கலக்கி குடித்துவர ரத்த மூலம் குணமடையும்.
காசநோய் குணமடையும்: அரை டம்ளர் வாழைப்பூச்சாறுடன் சிறிதளவு தேன், சிறிதளவு நெய் சேர்த்து மாலை நேரத்தில் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர காசநோய் குணமடையும். வாழைப்பூவையும், ஒரு தேக்கரண்டியளவு மிளகையும் சேர்த்து இடித்து சாறு பிழிந்து காலை மட்டும் ஒரு டம்ளர் சாறு பருகி வர இருமல் குணமடையும். கைகால்களில் எரிச்சல் இருந்தால் வாழைப்பூவை இடித்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்து எரிச்சலை தணிக்கலாம். வாழைப்பூச்சாறுடன் கடுக்காய்த்தூள் கலந்து பருகினால் ஆசனக்கடுப்பு நீங்கும். வாழைப்பூ கூட்டு, வாழைப்பூ வடை தொடர்ந்து சாப்பிட்டு வர குடல்புண் குணமடையும். வாழைப்பூவை எண்ணெய் சேர்க்காமல் சமைத்து உண்பது மிகவும் நல்லது. மொந்தன் வாழைப்பூ அதிக நன்மை தரும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...