|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 November, 2011

ரூ.2.75 கோடி செலவில் “சுற்றுச்சூழல்” சுற்றுலா தலமாகும் கொல்லிமலை!


 பல அருவிகள், கோவில்கள், தாவரவியல் பூங்கா, மூலிகை பண்ணைகள் ஆகியவற்றை கொண்ட கொல்லிமலையை அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு சிறந்த “சுற்றுச்சூழல் சுற்றுலா” தலமாக மாற்றியமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாட்டின் வளர்ச்சிக்கு உந்துகோலாகவும், பொருளாதார மேம்பாட்டிற்கு ஊக்க சக்தியாகவும் சுற்றுலா வளர்ச்சி விளங்குகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தினை பன்னாட்டு அளவில் சிறந்த சுற்றுலா இடமாக மாற்ற முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சுற்றுலா வளம் நிறைந்து இருந்தும், அதிகம் பிரபலமாகாத காரணத்தால் குறைவான பயணிகள் வருகை தரும் சுற்றுலா இடங்களை தேர்ந்தெடுத்து, அவைகளை அதிக பயணிகளை கவரும் சுற்றுலாத்தலமாக மாற்றியமைக்கும் வகையிலான மேம்பாட்டு நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. இந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் பல அருவிகள், கோவில்கள், தாவரவியல் பூங்கா, மூலிகை பண்ணைகள் ஆகியவற்றை கொண்ட கொல்லிமலையை அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு சிறந்த “சுற்றுச்சூழல் சுற்றுலா” தலமாக மாற்றியமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி கொல்லிமலையில் உள்ள செம்மேடு பகுதியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.49 லட்சம்; வசலூர் பட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவை நல்ல முறையில் செயல்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.53 லட்சம்; வசலூர்பட்டியில் உள்ள படகு குழாமை நன் முறையில் செயல்படுத்த ரூ.56 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. கொல்லி மலையிலுள்ள அரப்பளேஸ்வரர் கோவிலுக்கு தேவையான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ரூ.30 லட்சம்; மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க ஏதுவாகவும் அவற்றில் நீராடுவதற்கான அனைத்து வசதிகளை மேற்கொள்வதற்காகவும் ரூ.86 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடியே 75 லட்சம் ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...