|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 November, 2011

பத்மநாபசுவாமி கோயில் சொத்து பிரம்மாண்ட புராணத்தில் தகவல்!

சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் ஆபரணங்கள் உள்ளதாக பிரம்மாண்ட புராணத்தில் முன்பே கூறப்பட்டுள்ளதாகவும், இதில் 100 கோடி ரத்னங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்திய தேசியத்தின் முக்கிய அடையாளமான 18 புராணங்கள், 4 வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், 108 உபநிஷங்கள், இரண்டு காவியங்கள் உட்பட ஏராளமான ஏடுகள் உண்மையை பிரதிபலிப்பதாகவே உள்ளன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் புதைந்துள்ள பொக்கிஷங்கள் வெளி உலகத்திற்கு தெரிய வந்தன. இக்கோயிலிலுள்ள 5 அறைகளிலிருந்து 1.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஆபரணங்கள் எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. 6வது அறையான "பி அறையை திறப்பது குறித்து கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் இந்த ரகசிய அறையை திறக்கக் கூடாது என கோர்ட்டில் மனுதாக்கல் செய்து வழக்கும் நடந்து வருகிறது. இந்நிலையில் இக்கோயிலில் 100 கோடி ரத்னங்கள் வைக்கப்பட்டுள்ளதாக 18 புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. உலகம் உருண்டை என கலிலியோ கூறுவதற்கு முன்பே ஆயிரம் ஆண்டுகளை கடந்த கோயிலில் விஷ்ணு சுவாமியின் அவதாரங்களில் ஒன்றான மச்ச அவதாரத்தில் தன்னுடைய மூக்கின் மீது உலக உருண்டையை தூக்கி வரும் சிலைகள் இன்றும் உள்ளது. இந்நிலையில் பத்மபுராணம், சிவபுராணம், விஷ்ணு புராணம், தேவி புராணம், மல்ஷ புராணம், போன்ற புராண வரிசைகளில் வரும் பிரம்மாண்ட புராணத்தில் இச்சம்பவம் சொல்லப்பட்டுள்ளதாக சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் வழுப்பள்ளிமடம் ஸ்தானிகர் டாக்டர் சர்மா கூறுகிறார்.

கேரள மன்னர் குடும்பத்துடனும், அரசுடனும் நெருக்கமுள்ள இவர் இது குறித்து கூறும் போது:- கார்க்கி மகிரிஷி, தர்மபுத்திரரிடம் பேசக் கூடியதாக கூறப்பட்ட பிரம்மாண்ட புராணம், ஊர்களையும், ஊரின் வளத்தையும் பற்றி கூறுவதாகும். கடந்த ஆண்டுகளில் ஓலைச்சுவடிகளாக இருந்தவை 1912ம் ஆண்டு புத்தக வடிவில் அச்சிடப்பட்டது. கேரள மகாத்மியம் என்ற பகுதியில் 88வது அத்தியாயத்தில் அனந்தபுரவர்ணம் என்ற பகுதியில் 10 மற்றும் 11ம் பக்கங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் கருவறைக்கு அருகில் சுற்றுப்பிரகாரம் நடுவில் தனங்கள் வைக்கும் அறைகளில் 100 கோடி ரத்னங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதை பரசுராமன் ஆதித்ய மன்னனிடம் கூறியதாக, இதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆதித்ய மன்னனிடமிருந்து தற்போது வரை இந்த பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.இந்த வாக்கியத்தில் ஆதித்ய மன்னனாகிய நீயேதான் இதை பாதுகாக்க வேண்டும். ஸ்ரீபத்மநாபசுவாமி ஆலயம் பொக்கிஷம் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் குலசேகரன் என்ற பெயரில் அறியப்படுவாய் ஊரும், உலகமும் அறிய உன்னை போற்றுவார்கள் என இதில் கூறப்பட்டுள்ளது. இந்த மன்னனின் நினைவாகவே குமரி மாவட்டத்திலும், கேரளத்திலும் கூட குலசேகரன்புதூர், குலசேகரபுரம் என பல இடங்களில் குலசேகரன் பெயரிலேயே அமைந்துள்ளது. கேரள மகாத்யம் ஓலைச்சுவடி புத்தக வடிவில் அச்சடிக்கப்பட்ட காலமான 1912ல் சாமோதிரிபாடு மகராஜா கோழிக்கோட்டை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார். இந்த நூலை மலையாளத்தில் அச்சிட்ட பாலக்காட்டில் சேகரிபுரம் கிராமம் சேஷ்ட சாஸ்திரிகள் பிரம்மாண்ட புராணத்தை ஓலை சுவடியிலிருந்து புத்தக வடிவில் கொண்டு வந்தார் என அவர் கூறினார். புராணத்தில் கூறப்பட்ட சம்பவம் தற்போது உண்மையாக நடந்தேறியிருப்பதால் இந்த பிரம்மாண்ட புராணத்திலுள்ள மற்ற பகுதிகளும் உண்மையாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...