|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 November, 2011

கோவில் நிலங்களை இனி விற்பதில்லை அறநிலையத்துறை!

கோவில் சொத்துக்களை, குடியிருப்போருக்கு விற்பது, ஓர் ஆபத்தான முயற்சியாகவே கருதப்படுகிறது. எனவே, இனி, கோவில் நிலங்களை விற்பதில்லை என, இந்து சமய அறநிலையத் துறை, அதிரடி முடிவை எடுத்துள்ளது. கோவில் நிலத்தை விற்பனை செய்யலாமா, கூடாதா என முடிவு செய்யும் அதிகாரத்தை, அறநிலையத் துறைச் சட்டம், 1959ன் பிரிவு 34, அத்துறை ஆணையருக்கு அளிக்கிறது. அந்த விற்பனையும், கோவிலின் நலன் கருதி, மிக மிக அவசியமாகக் கருதப்பட்டால் மட்டுமே, மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், எப்போதுமே, சட்டத்துக்கு மாறாகத் தானே நடைமுறை இருக்கும். உள்ளூர் பலம், அரசியல் பின்புலம் மூலம், சட்ட ரீதியாகவே வாங்கி, கோவில் சொத்துக்களை, "ஸ்வாகா செய்வோர் அதிகரித்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முக்கியத்துவம் வாய்ந்த முடிவை, இந்து சமய அறநிலையத் துறை எடுத்துள்ளது.

குறைந்த விலை: சென்னையின் பிரபலமான கோவில்களில் ஒன்று, பாடி திருவல்லீஸ்வரர் கோவில்; பல்லவர்கள் காலத்துக்கும் முந்தையது. புண்ணியாத்மாக்கள் பலரின் முயற்சியால், இந்தக் கோவிலுக்கு, பாடியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், 55 ஏக்கருக்கும் மேல் நிலம் உள்ளது. இதில், 125 கிரவுண்டு மற்றும் 751.75 சதுர அடி நிலத்தில், 126 பேர் வரை குடியிருந்து வந்தனர். இவர்கள் அனைவரும், "ஜெகதாம்பிகை நகர் கூட்டுறவு வீட்டு மனை சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கத்தைத் துவக்கி, "நாங்கள் குடியிருக்கும் அடிமனையை எங்களுக்கே விற்று விடுங்கள் என, கோரிக்கை வைத்தனர். அப்போதிருந்த கோவில் நிர்வாகமும், அறநிலையத் துறையும் அதை ஏற்று, 66 பேருக்கு, அடிமனையை கிரையம் செய்து கொடுத்துவிட்டன. இது நடந்தது 1984ல். அப்போது, ஒரு கிரவுண்டு, வெறும் 12 ஆயிரம், 15 ஆயிரம் மற்றும் 16 ஆயிரம் என விற்கப்பட்டது. ஆரம்பித்தது பிரச்னை: ஒரு பாதிப் பேருக்குக் கிடைத்துவிட்டால், மறு பாதியினர் விடுவரா? தங்களுக்கும் விற்பனை செய்ய வேண்டும் என, விடுபட்டவர்களுடன் புதிதாகச் சிலரும் சேர்ந்து, மொத்தம் 135 பேர், சட்டப் போராட்டத்தைத் துவக்கினர். சென்னை ஐகோர்ட்டில் வழக்கு, தள்ளுபடி, உத்தரவு, ரத்து என, அத்தனை அத்தியாயங்களும் அரங்கேறின. கடைசியாக, கடந்த ஜூலையில், "இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்பதா, மறுப்பதா என்பது குறித்து, பரம்பரை அறங்காவலர் மற்றும் பொதுமக்களின் ஆலோசனை, ஆட்சேபனைகளைப் பெற்று, எட்டு வாரத்துக்குள், அறநிலையத் துறை ஆணையர் இறுதி முடிவெடுக்க வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய அறநிலையத் துறை அதிகாரிகளும், ஆணையரும், விரிவான ஆலோசனை மேற்கொண்டனர். வழக்கு யுத்தம் துவங்கிய 25 ஆண்டுகளில், எல்லாமே தலைகீழாக மாறிவிட்டிருந்தது. பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள அம்பத்தூர், முகப்பேர், அண்ணா நகர் மேற்கு, கிழக்கு போன்ற பகுதிகளில், ஒரு கிரவுண்டு நிலத்தின் விலை, ஒரு கோடி ரூபாயை எட்டிவிட்டது. வாடகை, பூஜை கட்டணங்கள், உண்டியல் வருவாய், நன்கொடைகள் என, கோவிலின் வருவாயும் அதிகரித்து விட்டது. திருவல்லீஸ்வரரின் அருளால், வங்கியில் ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகை இருக்குமளவு, கோவிலின் நிதிநிலை உயர்ந்து விட்டது. ""முன்னோர், கோவிலைப் பரிபாலனம் செய்வதற்குக் கொடுத்த சொத்துக்களை அபிவிருத்தி செய்யலாமே தவிர, விற்கக் கூடாது என, அக்கோவிலின் பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரம், கடுமையாக வாதிட்டார்.

உருப்படியான முடிவு: நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவு: கோவில் இடத்தில் குடியிருந்து வருவோருக்கு, அந்த நிலத்தை விற்பனை செய்வது, ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து, தமிழகம் எங்கும் உள்ள கோவில் சொத்துக்கள், பராதீனம் அடையும் சூழ்நிலையை ஏற்படுத்தும். மேலும், பணவீக்கத்தின் காரணமாக, ரூபாயின் மதிப்பு ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது; அசையாச் சொத்துக்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது. இன்றைய நில விற்பனைத் தொகை, நாளை எவ்விதத்திலும் கோவிலுக்குப் பயன்படாத நிலையாக மாறும். எனவே, கோவில் சொத்துக்களை, குடியிருப்போருக்கு ஒட்டுமொத்தமாக விற்பது, ஓர் ஆபத்தான முயற்சியாகவே கருதப்படுகிறது. எதிர்காலத்தில், கோவில்களின் நலன் பாதிக்கும் என்பது, தொலைநோக்குப் பார்வையில் புலப்படும். இவ்வாறான விற்பனை முடிவுகள், இதர கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களில் குடியிருப்போருக்கும், ஒரு தூண்டுகோலாக அமைந்து, கோவில் நிலங்களுக்கு, ஒரு பொதுவான ஆபத்து ஏற்படும். எனவே, திருவல்லீஸ்வரர் கோவில் மனைகளை விற்க முடியாது. இவ்வாறு, ஆணையர் உத்தரவிட்டார். அறநிலையத் துறை ஆணையரின் இந்த அதிரடி உத்தரவால், இனி, தமிழகத்தில் உள்ள எந்தக் கோவிலின் சொத்துக்களும், விற்பனை செய்யப்பட முடியாத, ஆரோக்கியமான நிலை உருவாகியுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...