|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 January, 2012

நிவாரணம் வேண்டாம்; வாழ்வாதாரம் வேண்டும் தங்கர் பச்சான்

திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,   ‘’தானே புயலால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டுள்ளதை, நேரடியாக சென்று மக்களை சந்தித்து வந்ததையும், அதன் தொடர்பான பிரச்சனைகளில் தீர்வு காணவும் பத்திரிகையாளர்களான உங்களை சந்திக்க ஒரு விவசாயின் மகனாக வந்திருக்கிறேன். ஏற்கனவே பின்தங்கிய மாவட்டங்களான விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் இனி மீண்டும் பழைய வாழ்கைக்கு எழவே வாய்ப்பில்லாத அளவுக்கு தானே புயலால் சேதம் அடைந்துள்ளது. உயிர்ச்சேதம் அதிகம் இல்லை என்பதால் யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். உயிர்ச்சேதம் என்பதை விட இரு மாவட்டங்களின் வாழ்வாதாரமான பயிர்ச்சேதம், பொருள் சேதம், வாழ்வாதார சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் தாக்கி 5 நாட்கள் ஆகியும், இன்றும் அங்குள்ள மக்கள் குடிக்க நீரீன்றி, உண்ண உணவின்றி, படுக்க இடமின்றி கேட்பாரற்று கிடக்கிறார்கள்.
 
அவர்களுடைய எல்ல வளங்களும் பறிபோய் விட்டன.  அம்மாவட்டங்களிலுள்ள விவசாயிகள் புயல் தாக்கிய அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமல் இருக்கிறார்கள். அப்பகுதி மக்களின் குரலாக தமிழக அரசிடமும், மத்திய அரசிடமும் சில கோரிக்கைகளை வைக்கிறேன். அழிந்து போன பயிர்கள் எல்லாம் நெல், கரும்பு போன்ற குறுகியகாலப் பயிர்கள் இல்லை. நட்டு வைத்த பிறகு 12 ஆண்டுகள் கழித்து ஆயுள் வரை பலன் தரக்கூடிய மரப்பயிர்களான முந்திரி, பலா, மா போன்றவைகளெல்லாம் அழிந்து போய்விட்டன. தமிழக முதல்வர் அவர்கள் ஒருமுறை நேரில் சென்று அம்மாவட்டங்களை சுற்றிப்பார்க்க வேண்டுகிறேன். இப்பகுதி மக்கள் உங்களைத்தான் நம்பியிருகிறார்கள். மத்திய அரசிடம் தேவையான நிதியை கேட்டு பெற்று இம்மாவட்டத்தை வளப்படுத்த வேண்டும். அவர்களிடம் இனி இழப்பதற்கு உயிரைத் தவிர வேறேதும் இல்லை. நிவாரணம் என்ற பெயரில் அம்மக்களுக்கு பண உதவி கொடுக்கவேண்டாம். அவர்களுக்கு வேண்டிய வாழ்வாதாரங்களை உடனே செய்து தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். புயல் பாதித்த அன்றே 150 கோடி ஒதுக்கியது நமது மாநில அரசு. ஆனால் அதன் பலன் இன்றுவரை அப்பகுதி மக்களுக்குப் போய் சேரவில்லை. மத்திய அரசோ துளியும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.
 
வெறும் நிவாரணம், மானியம், கடன் தள்ளுபடியால் மட்டும் விவசாயிகளின் வாழ்வு உயர்ந்து விடாது.  நமது அரசு விவசாயம் குறித்து நன்கு அறிந்த முதல் நிலை அமைச்சர்களையும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் நியமித்து துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஐந்து நாட்களாகியும் அடிப்படைத் தேவைகளில் 5 சதவீதம் கூட தீர்க்க முடியாத அம்மாவட்ட ஆட்சியரை மாற்றி செயலில் இறங்க வேண்டும்.  பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வேலை வாய்ப்பையும் மற்றும் மாற்றுப் பயிர் திட்டத்தையும், விவசாய உற்பத்திக்கான அனைத்து இடுபொருட்களையும் தந்து வருமானம் பெறும்படி அரசு செயல்படுத்துமானால் தற்கொலைகளும், வறுமையும், பஞ்சமும் காணாமல் போய்விடும்.
 
அப்பகுதி விவசாய மக்களுக்கு தண்ணீர் வசதியை அரசு செலவில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். விவசாயத்திற்கான பொருட்களை அரசே குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களின் பிள்ளைகளுக்கு, வரும் பத்தாண்டுகளுக்கான அரசு மற்றும் தனியார் பள்ளி,  கல்லூரிகளின் படிப்பு செலவுகள் முழுவதையும் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.  அத்துடன் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை தகுதியுள்ளவர்களுக்கு உடனடியாக ஏற்படுத்தித் தரவேண்டும். பள்ளிகளில் காலை, பிற்பகல் என இரண்டு வேளைகளிலும் உணவு தரவேண்டும். மேலும் மேலும் மக்களை சிந்திக்க விடாத, சோம்பேறிகளாக, ஏழைகளாக, உயிர்கொல்லிகளாக மாற்றும் மதுக்கடைகளை உடனே அகற்றிட வேண்டும். அம்மாவட்ட மக்களின் மனதில் உள்ள வேதனைகளைத் தீர்க்க முதலமைச்சர் அவர்கள் உடனடியாக, மத்திய அரசிடம் நிதியைக் கேட்டு பெற்று அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்’’’என்று வேண்டுகோள் விடுத்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...