|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 January, 2012

படுக்கையறை, பொருட்கள் போன்றவற்றை சுத்தமாக வைத்துக்கொண்டால் ஆஸ்துமா நோய் தாக்காமல் பாதுகாக்கலாம்!

மாசடைந்த சூழலும், தூசி, அலர்ஜி, போன்றவைகளினாலும் எண்ணற்ற குழந்தைகள் ஆஸ்துமா நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அவர்கள் உபயோகிக்கும், படுக்கையறை, பொருட்கள் போன்றவற்றை சுத்தமாக வைத்துக்கொண்டால் ஆஸ்துமா நோய் தாக்காமல் பாதுகாக்கலாம் என்கின்றனர் குழந்தை மருத்துவர்கள்.குழந்தை பருவத்தில் ஏற்படக்கூடிய ஆஸ்துமா நோய் பரம்பரை நோயல்ல. அதிகபட்சமாக குழந்தை பருவ ஆஸ்துமா நோய் அலர்ஜியால் ஏற்படக்கூடியது. பூக்களின் மகரந்த தூள்கள், வீட்டுத்தூசு, மிருகக்கழிவு, போன்றவற்றால் இது ஏற்படுகிறது.

இயல்பான ஆஸ்துமா மூன்று வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமாவை இயல்பான ஆஸ்துமா என்று குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோயெதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளை இந்த ஆஸ்துமா தாக்குகிறது. குளிர்காற்று, வீரியம் மிக்க வாசனை, புகை போன்றவற்றாலும் வைரஸ் நுண்கிருமிகள் மூலம் ஏற்படும் தொற்று நோயாலும் ஏற்படக்கூடும். சில குழந்தைகளுக்கு மூன்று வயதிற்குப் பிறகே ‘ வீசிங்’ என்னும் மூச்சுத் திணறல் ஏற்படத் தொடங்குகிறது. இது சாதாரணமாக 8 வயதிற்கு முன்பாக குணமாகிவிடும். லேசான விட்டு விட்டு ஏற்படும் ஆஸ்துமா வருடத்திற்கு 3 அல்லது 4 முறை ஏற்படும். 10 முதல் 12 வயதிற்குள் சரியாகிவிடும். நடுத்தர கடுமையான ஆஸ்துமாவில் குழந்தைகளுக்கு நோயின் அறிகுறிகள் 2 வயதிற்கு முன்னரே ஆரம்பிக்கும்.நோயின் கடுமை அதிகாமாகவும், நீடித்தும் இருக்கும். இந்நோய் முழுமையாக குணமடையாது பிற்காலத்திலும் நீடிக்கும்.

சுத்தமான சூழல் குழந்தைகளின் படுக்கை அறையினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மெல்லியதாக இருந்தால் அதை அடிக்கடி சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். திரைச் சீலைகளுக்கு மெல்லிய துணிகளே நல்லது. ஏனெனில் மொத்தமான வேலைப்பாடுடன் இருக்கும் துணிகளில் தூசி அதிகமாய் படியும் என்பதால் அதுவே குழந்தைகளை பாதிக்கும். குழந்தைகளின் படுக்கை அறையில் உள்ள புத்தகங்கள், சுவர்களில் தொங்கும் படங்களில் தூசிகள் தங்கியிருக்க வாய்ப்புண்டு. எனவே அவற்றை ஈரமான துணி கொண்டு துடைப்பது நல்லது. வீட்டில் நாய், பூனைகள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றின் ரோமங்களினால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. புகை பிடிப்பவர்கள் அருகில் போக அனுமதிக்க கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சத்தான உணவு குழந்தைகளுக்கு சத்தான உணவு அளிக்கவேண்டும். அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பிட்ட உணவினால் அலர்ஜி ஏற்படுகிறது என்று தெரிந்தால் அவற்றை தவிர்க்கலாம் என்கின்றனர் குழந்தை மருத்துவ நிபுணர்கள். ஆஸ்துமாவை எளிதில் குணப்படுத்தி விடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூச்சுப்பயிற்சி போன்றவற்றை சிறு வயது முதலே பழக்கப்படுத்தினால் ஆஸ்துமா நோயை தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மனோ தத்துவ முறைப்படி அளிக்கப்படும் சிகிச்சையும் பலன் அளிக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...