|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 February, 2012

மின்சார பற்றாக்குறை 4000 மெகாவாட்



தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழகத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி ஆலைகளிடம் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் மின்சாரத்தை வாங்கி அதனை பொதுவிநியோகத்திற்கு பயன்படுத்தி வருகிறது. ஆனால், வரும் கோடைக் காலத்திற்குத் தேவையான மின்சாரத்தை வாங்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது என்ற மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள 20 தனியார் மின்சார உற்பத்தி மையங்கள் 800 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இதில்லாமல் வெளிமாநிங்களிடம் இருந்தும் தமிழக மின்சார வாரியம் மின்சாரத்தை பெறுவதற்கு கோரிக்கை விடுக்கும். பொதுவாக தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் 5 முதல் 15 ரூபாய்க்கு வாங்கப்படும். இப்படி வாங்கும் மின்சாரமே தமிழகத்தின் தேவைக்கு போதுமானதாக இருந்து வந்தது. ஆனால் 2008ம் ஆண்டில் இருந்து மின்சார பற்றாக்குறை ஏற்படத் துவங்கியது. அந்த ஆண்டுகளில் கூட மின்சார பற்றாக்குறை என்பது 2000 மெகா வாட்டாகவே இருந்தது.


 இந்நிலையில் 2011ம் ஆண்டில் பற்றாக்குறையின் அளவு 3,000 மெகாவாட்டாக உயர்ந்தது. மேலும், இந்த ஆண்டு அந்த பற்றாக்குறை 4,000 மெகாவாட்டாக உயர்ந்துவிட்டது. இன்னும் கோடைக்காலம் துவங்கிவிட்டால் இந்த அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று மின்சாரத் துறை மேலாளர் கூறியுள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையை மின்சார வாரியம் எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்று இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு மின் பற்றாக்குறை ஏற்பட்டபோது 1,500 மெகாவாட் மின்சாரத்தை மிக அதிக விலை கொடுத்து வாங்கி நிலையை சரி செய்தோம். ஆனால் இம்முறை யாரிடமும் மின்சாரத்தை வாங்க முடியாது. ஏனெனில் இதுவரை நமக்கு மின்சாரம் அளித்தவர்களுக்கு 10,000 கோடி பாக்கி வைத்துள்ளோம்.


தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தால் வெறும் 150 மெகாவாட் மின்சாரத்தையே பெற முடியும். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம், அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க இயலாத சூழ்நிலையில் உள்ளது. ஒரு யூனிட் 4 ரூபாய்க்குக் கிடைத்தால் மட்டுமே வாங்கக் கூடிய சூழ்நிலை நிலவுகிறது. இன்னும் ஒரு சில மாதங்கள் இந்த மோசமான நிலைமையை தாங்கிக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். மே மாதத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துவிடும். வல்லூர், மேட்டூர், வடசென்னைப் பகுதிகளில் அமைக்கப்படும் மின் உற்பத்தி ஆலைகளும் இந்த ஆண்டில் செயல்படத் துவங்கிவிட்டால் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து விடலாம். இப்போது நமது தேவை 11,500 மெகாவாட்டாகவும், உற்பத்தியின் அளவு வெறும் 7,500 மெகாவாட்டாகவும் உள்ளது. கோடைக் காலத்தில் இரவில் மக்கள் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்துவதால்தான் அதிகளவில் மின்சாரம் தேவைப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...