|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 March, 2012

தொடர் மின்தடையால் மாணவர் தேர்ச்சி குறையும்: மருத்துவர்கள்!


தொடர் மின்தடையால், மாணவர்களின் உடல்நலன் பாதிக்கப்பட்டு, அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறையும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர், இரவில் சரியான தூக்கமின்றி சோர்வுடன் காணப்படுகின்றனர்; ஞாபக மறதி, படபடப்புடன் தேர்வு எழுதுகின்றனர். இதனால், கோவையில் இந்தாண்டு பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர், கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.
தமிழக அரசு பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, மின்தடை நேரத்தை அறிவித்துள்ளது. அறிவித்த நேரம் தவிர, கூடுதலாக நான்கு மணி நேரம் இரவிலும் மின் தடை ஏற்படுகிறது. கோவையில் பகலில் ஏற்படும் ஆறு மணி நேர மின் தடையை, சகித்துக்கொண்டாலும், இரவில் ஏற்படும் நான்கு மணி நேர மின்தடையால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்வெட்டால், தற்போது மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருப்பவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்தான். இரவில் 7.00 முதல் காலை 6.00 மணி வரை, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மின் தடை ஏற்படுகிறது. இதனால், ஏற்படும் தூக்கமின்மையால், மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவ, மாணவியர், மறுநாள் தாங்கள் எழுதவிருக்கும் தேர்வை நினைத்து பயம் கொள்கின்றனர்.
சரியான தூக்கமின்றி தவிக்கும் இவர்களின் நிலை குறித்து, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாவது: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, குறைந்தது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். அப்போதுதான், மறுநாள் புத்துணர்ச்சியுடன் தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட முடியும். தற்போது பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடக்கின்றன. இந்நேரத்தில் மாணவ, மாணவியர் தேர்வுக்கு தயாராக மாலை முதல் இரவு வரை பாடங்களை படித்தாலும், சரியான தூக்கமின்மையால் மறுநாள் காலை தேர்வு எழுதச் செல்லும்போது, சோர்வடைகின்றனர்.இதனால் வெறுப்பு, படபடப்பு, ஞாபக மறதி, கோபம், மன உளைச்சலுக்குள்ளாகின்றனர். தேர்வு எழுதும் அறையில் கேள்வித்தாளை பார்த்ததும், ஓராண்டாக பள்ளியில் கற்ற சாதாரண கேள்விக்குக்கூட, பதட்டத்துடன் பதில் எழுதுகின்றனர். முன்தினம் இரவு படித்து மனப்பாடம் செய்திருந்த பதிலை, ஞாபக மறதியால், கோர்வை இல்லாமல் எழுதும் நிலைக்கு ஆளாகின்றனர்.
இவ்வாறு எழுதும்போது, முழுமதிப்பெண் கிடைக்காது. வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியரே, தற்போதைய நிலையில் மதிப்பெண் குறைவாக பெறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வாறு, மருத்துவர்கள் தெரிவித்தனர். பகலில் மின்தடையை குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, மாணவ, மாணவியரின் எதிர்காலம் கருதி இரவிலாவது தடையின்றி மின் வினியோகம் செய்ய, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...