|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 March, 2012

ஏழைகள் யார்?

 மத்திய அரசு வெளியிட்டுள்ள வறுமைக்கோடு பற்றிய புதிய வரையறை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ22.42 செலவிடுவோரும் நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ28.65 செலவிடுவோரும் ஏழைகள் அல்ல என்கிறது மத்திய திட்டக் குழு. இதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 
திட்டக் குழு சொல்வது என்ன? - கிராமங்களில் ஒரு மாதத்துக்கு ரூ672.8 செலவிடும் சக்தி படைத்தோர் ஏழைகள் அல்ல. நகர்ப்புறங்களில் ஒரு மாதத்துக்கு ரூ859.6 செலவிடும் சக்தி படைத்தோரும் ஏழைகள் அல்ல. - இந்தியாவில் வறுமை என்பது படிப்படியாகக் குறைந்து வருகிறது. 2004-05ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2009-10ஆம் ஆண்டில் 5 கோடிப் பேர் வறுமையிலிருந்து "விடுதலை" பெற்றுவிட்டனர். அதாவது 2004-05ல் 40 கோடியே 72 லட்சமாக இருந்த ஏழைகளின் எண்ணிக்கை 2009-10ம் ஆண்டில் 34 கோடியே 47 லட்சமாக குறைந்துவிட்டதாம்..
நகர்ப்புறங்களைவிட கிராமங்களில்தான் வறுமை "வேகமாக" குறைந்து வருகிறது. இத்ற்குக் காரணம் அரசின் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்தான். 2004-05ம் ஆண்டில் 37.2 சதவீதமாக இருந்த தனி நபர் செலவு விகிதம், 2009-10ல் 7.3 சதவீதம் குறைந்து 29.8 சதவீதமானது. அதில் கிராமங்களில் ஒரு நாளைக்கு தனி நபர் செலவு விகிதம் என்பது 8 சதவீதம் குறைந்து 33.8 சதவீதமானது. நகரங்களில் 4.8 சதவீதம் குறைந்து 20.9 சதவீதமானது. - வடகிழக்கு மாநிலங்களில் வறுமை அதிகரித்து வருகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு புள்ளிவிவரங்களை திட்டக் குழு வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில்.... நாடாளுமன்றத்தில் திட்டக் குழுவின் இந்த அறிக்கை விவகாரம் எதிரொலித்தது. திட்டக் குழு அறிக்கை மீது விவாதம் நடத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது. ஒருநாளைக்கு ரூ22ஐ வைத்துக் கொண்டு ஒருவேளை உணவு கூட உண்ணமுடியாத நிலையில் திட்டக் குழுவின் வரையறையை ஏற்க முடியாது என்பது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வாதம். ஆனால் இது பற்றி விவாதிக்க மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி மறுத்துவிட்டார்.
முந்தைய சர்ச்சை கடந்த ஆண்டு ஜூன் மாதம் உச்சநீதிமன்றத்தில் திட்டக் குழு தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில், நகரங்களில் ஒரு நாளைக்கு ரூ32 செலவு செய்வோரும் கிராமங்களில் ரூ26 செலவு செய்வோரும் ஏழைகள் அல்ல என்று கூறியபோதே கடும் கண்டனங்களும் சர்ச்சைகளும் வெடித்துக் கிளம்பின. இந்நிலையில் கடந்த ஆண்டைவிட இம்முறை மிகவும் குறைத்து மதிப்பிட்டு ஏழைகள் யார் என வரையறை செய்துள்ளது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...