|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 March, 2012

தமிழகமெங்கும், சமமான அளவுக்கு, பாரபட்சமில்லாத மின்வெட்டை அமல்படுத்த வேண்டும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு.


சென்னை உட்பட தமிழகமெங்கும், சமமான அளவுக்கு, பாரபட்சமில்லாத மின்வெட்டை அமல்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மின்வெட்டு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தை, வரும் ஜூன் வரை நீட்டிக்க அனுமதி கோரி, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில், கடந்த ஜூன் மாதம், தமிழக மின்வாரியம் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீது, பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பு நுகர்வோரின் கருத்துகளை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கேட்டதில், பலரும் மின்வெட்டை குறைக்க வலியுறுத்தினர். இந்நிலையில், இந்த மனுவை, மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்கள் வேணுகோபால் மற்றும் நாகல்சாமி விசாரித்து, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தனர். அதன் விவரம்: மின் தட்டுப்பாட்டை சமாளிக்க, புதிய மின் திட்டங்கள் வரும்; ஜூன் 2012 முதல், மின்வெட்டை நீக்கி விடுவதாக, மின்சார வாரியம் கூறியுள்ளது. இதற்கான மின் உற்பத்தி திட்டங்கள், வரும் ஜூன் மாதத்திற்குள் வராது என்ற நிலை உள் ளது. எனவே, முழுமையாக மின்சார தட்டுப்பாட்டை போக்கும் அளவுக்கு, மின்சாரம் கிடைத்தால் மட்டுமே, மின்வெட்டு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத் தை, மின்வாரியம் நீக்க வேண்டும்.

கட்டளைகள்: அதை விடுத்து, ஜூன் மாதத்திற்குள் நீக்கினால், மின்சார தட்டுப்பாடு மற்றும் அதை சமாளிக்க முடியாத பிரச்னையால், பல்வேறு குளறுபடிகள் ஏற்படும். எனவே, ஜூன் மாதம் முதல் படிப்படியாக நிலைமைக்கு ஏற்ப, மின்வெட்டை அமல்படுத்த, ஒழுங்குமுறை ஆணையத்தின் யோசனைகளை மின்வாரியம் பின்பற்ற வேண்டும்.  மே மாதம் முதல் காற்று சீசன் வந்து விடுவதால், காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரிக்கும். அதனால், காற்றாலைகளை சொந்தமாக கொண்ட தொழிற்சாலை மற்றும் வணிக மின் இணைப்புதாரர்கள், அந்த மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

* மற்ற உயரழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக இணைப்பு நுகர்வோருக்கு, தற்போது அமலாகும், 40 சதவீத கட்டுப்பாட்டால், 800 மெகாவாட் தட்டுப்பாடு சமாளிக்கப் படுகிறது. புதிய மின் உற்பத்தி திட்டத்தில், ஒவ்வொரு, 400 மெகாவாட்டும் கூடுதலாக கிடைக்கும் போது, 40 சதவீத கட்டுப்பாட்டிலுள்ள இணைப்புதாரர்களுக்கு, 200 மெகாவாட் கூடுதல் வினியோகம் தர வேண்டும்.  ஒவ்வொரு 400 மெகாவாட் கூடுதலாக சேரும் போது, 10 சதவீத கட்டுப்பாடு குறையும். இந்த அடிப்படையில் கூடுதலாக 1,600 மெகாவாட் கிடைக்கும் போது, மொத்தமுள்ள, 40 சதவீத மின்கட்டுப்பாடும் குறைக்கப்பட வேண்டும்.

பாரபட்சமில்லா மின்வெட்டு  மாலை 6 மணி முதல், 10 மணி வரையுள்ள, 90 சதவீத கட்டுப்பாட்டில், 700 முதல் 800 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகிறது. இதற்கு ஒவ்வொரு கூடுதல், 400 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் போது, 200 மெகாவாட் மின்சாரத்தை, இந்த இணைப்புதாரர்களுக்கு தர வேண்டும். இதன் மூலம் படிப்படியாக இரவு நேர மின்சார கட்டுப்பாடு குறைக்கப்பட்டு, கூடுதலாக 1,600 மெகாவாட் கிடைக்கும்போது, மொத்தமாக 90 சதவீத கட்டுப்பாடையும் குறைக்க வேண்டும்.  தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் பாரபட்சமில்லாத, மிகவும் சமமான மின்வெட்டை அமல்படுத்தும் வகையில், தற்போதைய மின்வெட்டு திட்டத்தை, மறுசீரமைக்க வேண்டும். இந்த வகையிலான மின்வெட்டு ஓரளவு நியாயமானதாக இருக்கும் என, ஆணையம் கருது கிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பால் சென்னைக்கான மின்வெட்டு, இரண்டு மணி நேரத்திலிருந்து, மூன்று அல்லது நான்கு மணி நேரமாக அதிகரிக்கப்படும் என தெரிகிறது. இந்த உத்தரவுப்படி, சென்னைக்கு மின்வெட்டை இன்னும் அதிகரித்து, அதை மின்வாரியம் குளறுபடி இல்லாமல், சரியான முறையில் அமல்படுத்தினால், எட்டு மணி நேர மின்வெட்டு மாறி, சென்னை உட்பட அனைத்து இடங்களிலும், நான்கு மணி நேரம் முதல் ஆறு மணி நேரத்திற்குள் மின்வெட்டு இருக்கும் என தெரிகிறது. பாரபட்ச சலுகை மாறுமா? ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய உத்தரவால், சென்னைக்கும் மற்ற பகுதிகளுக்கும், மின்வெட்டு நேரத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு, மின்வாரியம் தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அமல்படுத்தினாலாவது, எட்டு மணி நேர மின்வெட்டு வேதனையை மின்சார வாரியம் குறைக்குமா அல்லது அப்போதும் அதே எட்டு மற்றும் பத்து மணி நேர மின்வெட்டை அமல்படுத்தி விட்டு, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும், மின்வாரியம் சலுகை வழங்குமா என்ற எதிர்பார்ப்பு, பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...