|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 March, 2012

இடஒதுக்கீடு வேண்டுமெனில் சாதி சான்றை இணைக்க வேண்டும்.


இடஒதுக்கீட்டின் கீழ் சலுகை கோரும் விண்ணப்பதாரர்கள், ஜாதிச் சான்றிதழை விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்பவில்லை என்றால், அந்த விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2010ம் ஆண்டு ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. இதில் பமிலா என்பவர், தேர்வில் கலந்து கொண்டார். தனது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இவர் இணைக்கவில்லை. இவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு ஆகஸ்டில் நேர்முகத் தேர்வு நடந்தது. சான்றிதழ் சரிபார்க்கப்பட்டபோது, ஜாதிச் சான்றிதழை இணைக்காதது தெரிய வந்தது. எனவே, அனைவருக்குமான பொதுப் பிரிவாக இவர் கருதப்பட்டார். தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து, ஐகோர்ட்டில் இவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின், அப்பீல் மனுவைத் தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பாணையின்படி, இடஒதுக்கீட்டின் கீழ்வரும் விண்ணப்பதாரர்கள், ஜாதிச் சான்றிதழை இணைக்கவில்லை என்றால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டும். ஆனால், டி.என்.பி.எஸ்.சி., உத்தரவில் உள்ள ஒரு பிரிவின்படி, விண்ணப்பதாரருக்கு தகுதியிருந்தால், அவர்களை அனைவருக்குமான பொதுப் பிரிவாகக் கருதி, தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இன்னொரு பிரிவின்படி, சான்றிதழ்கள் உரிய அதிகாரியிடம் சென்றடையவில்லை என்றால், அதைச் சமர்ப்பிக்க, 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என உள்ளது. இந்த இரண்டு பிரிவுகளும், ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன.எனவே, விண்ணப்பதாரர்களின் நலன் கருதி, இந்த இரண்டு பிரிவுகளையும் ரத்து செய்ய வேண்டும். 2006ம் ஆண்டு நவம்பரில், பிறப்பிக்கப்பட்ட இந்த நிபந்தனை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இது பொதுக் கொள்கைக்கு, நலன்களுக்கு எதிராக உள்ளதால் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...