|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 March, 2012

ஒரு மாணவனும், மாணவியும்? இதெல்லாம் ஒரு குற்றமா?


ஒரு மாணவனும், மாணவியும் சாதாரண காரணங்களுக்காக, ஒரு தன்னாட்சி கல்லூரியால் நீக்கம் செய்யப்பட்டதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. BCA முதலாமாண்டு படிக்கும் அந்த மாணவனும், மாணவியும், கல்லூரி வளாகத்திற்குள் மொபைல் போன் வைத்திருந்ததோடு, அவர்கள் இருவரும் கல்லூரி முடிந்ததும், ஒன்றாக பேருந்தில் சென்றனர் என்பதும் குற்றமாக சுமத்தப்பட்டது.
ஆனால், இந்த தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அம்மாணவர்களின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த கோர்ட், அம்மாணவர்களின் நீக்கத்தை(dismissal) ரத்துசெய்து, அவர்களை மீண்டும் கல்லூரியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென உத்தரவு பிறப்பித்தது. தனது உத்தரவில் சென்னை ஐகோர்ட் கூறியிருப்பதாவது: ஒரு நாகரீகமான மற்றும் முன்னேற்றமடைந்த சமூகத்தில், ஒரு மாணவனும், மாணவியும் சகஜமாகப் பழகுவதை, ஒரு கல்வி நிறுவனம், குற்றமாகப் பார்க்க முடியாது. இதுபோன்ற அம்சங்களை குற்றமாக பார்க்க ஆரம்பித்தால், அது, மாணவ, மாணவியரின் அன்றாட செயல்பாடுகளை பாதித்துவிடும்.
கல்வி நிறுவனங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்தும் வகையில், நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். ஆனால், வெறுமனே, மொபைல் போன் வைத்திருந்தார்கள் என்ற காரணத்திற்காக மட்டும், அவர்களை நீக்கம் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. கல்வி என்பது ஒவ்வொரு மாணவரின் அடிப்படை உரிமை. ஒரு தொழில்நுட்ப சாதனைத்தை வைத்திருந்தார்கள் என்பதற்காக, யாருக்கும் அந்த உரிமையை, யாரும் மறுக்க முடியாது.
அந்த 2 மாணவர்களும், தங்களது தரப்பு வாதத்தை எடுத்துரைக்க வாய்ப்பு தரப்படவில்லை. கருத்தை கேட்காமலேயே தண்டனை வழங்கியது முதல் குற்றம். மேலும், அந்த கல்வி நிறுவனத்தின் இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கையானது, சாதாரண மற்றும் இயற்கையான நீதியை மறுப்பதாகும். எனவே, அந்த மாணவர்களை உடனே கல்லூரியில் சேர்த்து, அவர்கள் தேர்வெழுதுவதற்கு பிரச்சினை ஏற்படாத வகையில், நீக்கம் செய்யப்பட்ட காலத்தையும் அவர்களின் வருகைப் பதிவாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...