|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 March, 2012

தமிழர்கள் என்றாலே இந்திய அரசு தொடர்ந்து அலட்சியம் திருமாவளவன்.


பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை முற்றிலும் தமிழினத்திற்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேரவை தலைவரின் இருக்கைக்கு எதிரே சென்று அறிக்கையை கிழித்தெறிந்தார். அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் ஜனாதிபதி உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் திருமாவளவன் அப்போது அவர்,  ‘’குடியரசு தலைவரின் உரையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடந்த இரண்டரை ஆண்டுகால சாதனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் செயல் திட்டங்கள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

ஆனால், தலித் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு தொடர்பாக குறிப்பிடும்படியான கருத்துக்கள் ஏதும் இடம் பெறவில்லை என்பது வேதனை அளிக்கிறது. குறிப்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஆவன செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் அதுபற்றி எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. தனியார் துறைகளில் இடஒதுக்கீடு இல்லாமல் தலித்துகள் சிறுபான்மையினர் மற்றும் இதர விளிம்புநிலை மக்கள் வாழ்வில் மேம்பாடு அடைய முடியாது. ஆகவே தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தனிச்சட்டம் ஒன்றை இந்த அரசு இயற்றவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். 

அடுத்து குடியரசு தலைவரின் உரையில் ஈழத் தமிழர்கள் குறித்து ஒரே ஒரு வரிச்செய்தி மட்டுமே இடம் பெற்றுள்ளது. அங்கே ஒவ்வொரு நாளும் தமிழ் மக்கள் மீது சிங்களப்படையினர் அடக்குமுறைகளை ஏவி வருகின்றனர். தமிழர்களின் தாயகத்தை சிங்கள ராணுவம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவிகள் பல்லாயிரக்கணக்கில் பாலியல் வல்லுறவுக்களாக்கப்பட்டு கர்ப்பமடைந்துள்ளனர் என்கிற தகவல்கள் நெஞ்சை பதற வைக்கின்றன. இத்தகைய அரசு பயங்கரவாதத்தில் இருந்தும், கலாச்சார சீரழிவிலிருந்தும் தமிழ் மக்களை இந்திய அரசு பாதுகாத்திட வேண்டும். 

இன்னொரு நாட்டின் விவகாரத்தில் இந்தியா தலையிடுவதில்லை என்று இந்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் தென்னாப்பிரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக இந்திய அரசு ஏற்கனவே உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து பங்காளதேசத்தை உருவாக்கியுள்ளது. சீனாவுக்கு எதிராக தலாய்லாமாவுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்துள்ளது. பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்பட்டுள்ளது. ஆனால் ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் மட்டும் இன்னொரு நாட்டின் விவகாரத்தில் தலையிட முடியாது என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

தமிழர்கள் என்றாலே இந்திய அரசு தொடர்ந்து அலட்சியம் செய்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை சிக்கல், காவிரி நீர் சிக்கல், பாலாற்று அணை சிக்கல், தமிழக மீனவர்கள் பிரச்சினை போன்ற அனைத்திலும் தமிழர்களுக்கு எதிராகவே இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனை இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.தமிழினத்துக்கு எதிரான இந்திய அரசின் இத்தகைய போக்கை விடுதலை சிறுத்தைகளின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.   இந்நிலையில் ஜெனிவா தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காத நிலை எடுத்தாலோ அல்லது நடுநிலை வகித்தாலோ ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தொடர்வது பற்றி மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்பதை தெரிவித்துக் கொண்டு நிறைவு செய்கிறேன்’’ என்று கூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...