|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 March, 2012

காரடையான் நோன்பு!

காரடையான் நோன்பு! சுமங்கலி பெண்கள், மாங்கல்ய பாக்கியத்திற்கும், கன்னியர்கள் சிறப்பான வாழ்க்கைத் துணை அமையவும், வரம் கோரி மகாலட்சுமியை நோக்கி வேண்டும் காரடையான் நோன்பு இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. பங்குனியை புருஷனாகவும், மாசியை பெண்ணாகவும் கொண்டு, இரண்டும் கூடும் காலத்தில், மகாலட்சுமியை நோக்கி நோன்பு இருப்பது காரடையான் நோன்பு. நோன்பின்போது பெண்கள் செய்யும் பிரார்த்தனை இதுதான்,  *உருகாத வெண்ணெய்யும், ஓரடையும் நான் செய்தேன் ஒருகாலும் என் கணவர் என்னை விட்டு பிரியாத வரம் வேண்டும். மகாலட்சுமியை நோக்கி இந்த பிரார்த்தனை நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது. இளம்பெண்கள் சிறப்பான வாழ்க்கைத் துணை வேண்டும் எனவும், நோன்பு இருக்கின்றனர். காரடையான் நோன்பை மகாலட்சுமியே இருந்ததாக ஐதீகம். காரடையான் நோன்பு நன்நாளில்தான், சாவித்திரி, கணவனின் உயிரை எமனிடமிருந்து மீட்டதாக நம்பிக்கை உள்ளது. அவரின் கணவர், மாமியார், மாமனாருக்கு உரிய கடமையைச் செய்பவர்களும், பிறந்த வீட்டிற்கு பெருமையைப் பெற்றுத்தருபவர்களும் பதிவிரதையாகின்றனர். அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது இந்தநாள். மாமியாருக்கு சேவை செய்யும் மருமகள்களுக்கான விரதம் மட்டும்மல்ல, மருமகளை தங்கள் மகளாக எண்ண வேண்டும் என்று மாமியாருக்கும் உணர்த்துகிறது இந்த விரதம்.  *கார்காலத்தில் (முதல்போகம்), விளையும் நெல்லை குத்தி, மாவாக்கி அதில் வெல்லம் அல்லது காரம், தட்டாம்பயிறு (காராமணி) சேர்த்து, காரடை தயார் செய்யப்படுகிறது. இந்த நைவேத்தியத்தின் பெயரால் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பு எனவும் அழைக்கப்படுகிறது. பெண்கள் தனது கணவர் அல்லது பெரியவர்கள் கையால் சரடு (நோன்பு கயிறு) பெற்று கட்டிக்கொள்வார்கள். இன்று காரடையான் நோன்பு அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று காலை 9.25 மணி முதல் 9.45 மணிவரை நோன்பு அனுஷ்டிக்கலாம்.  விரதமுறை: விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை காமாட்சியாக அல்லது சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும். அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். மாசிக்கயிறு பாசி படியும் என்று, பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது.  பலன்: காரடையான் விரதம் இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...