|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 April, 2012

சார்லி சாப்ளின் 123வது பிறந்த நாள்..

இன்று திரைப்படங்களில் வசனங்களைக் கேட்டு சிரிக்கிறோம் ஆனால் ஊமைப்படங்கள் மட்டுமே வெளிவந்த ஒரு கால கட்டத்தில் மொழியின் துணையின்றி வசனம் எதுவும் பேசாமால் தன் உடல் அசைவுகளாலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்தான் சார்லி சாப்ளின்.சார்லி சாப்ளினின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததே இல்லை. பிறந்ததில் இருந்தே துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள் தான் அவரின் நண்பர்கள். 1889ஆம் ஆண்டு லண்டன் நகரில் சாப்ளின் பிறந்து, ஓரிரு வருடங்களிலேயே பெற்றோரிடையே சண்டை வந்து டிவோர்ஸ் ஆகிவிடவே, பேசத்தொடங்கும் முன்பே, தாயுடன் சேர்ந்து மேடையில் பாடவேண்டிய நிர்ப்பந்தம். ஐந்து வயதுச் சிறுவனின் பாட்டுக்குக்கிடைத்த அமோக வரவேற்பு, ஏழு வயதிலேயே பறிபோனது. காரணம், அவரது தாயாரின் மனநிலை பாதிக்கப்பட்டதுதான். குடும்பத்தைக் காப்பாற்ற சலூன், கண்ணாடித் தொழிற்சாலை, மருத்துவமனை என எங்கெங்கோ வேலை பார்த்தவர், சில காலம் தந்தையுடன் சேர்ந்து மேடை நாடகங்களிலும் நடித்தார். ஆனால், தந்தை திடீரென இறந்துவிடவே, மீண்டும் தொய்வு!. 

1910ல் நாடகக் குழுவினருடன் அமெரிக்கா போனவருக்கு குறும்படங்களில் நல்ல பெயர் கிடைத்தது. அவரது முத்திரை கதாபாத்திரமான ‘டிராம்ப்’ (பேகி பேண்ட், தொப்பி, கைத்தடி, வளைந்த கால்கள்) பிரபலமானது. ‘திகிட்’, படத்தில் தொடங்கிய வரேவற்பு, ‘தி கிரேட் டிக்டேட்டர்’ வரை நீடித்தது. ஆனால், இந்த காலகட்டங்களில் குடும்ப வாழ்வு அவரை பாடாய்ப் படுத்தியது. 1918ல் நடந்த முதல் திருமணம், இரண்டு வருடம் மட்டுமே நீடித்தது. அதற்குப்பின் நடந்த இரண்டு திருமணங்களும்கூட சாப்ளினுக்குச் சோகத்தை மட்டுமே கொடுத்தன. 1942 ல் நான்காவது மனைவியாக ஓனெய்ல் அமைந்தபின் இல்லறத் தொல்லைகள் நின்றன. 1945ம் ஆண்டு. சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் தீவிரவாதி என அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது. இரண்டாவது மனைவி ஜோன் பெர்ரியும் சாப்ளின் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தார். அவர் தரப்பு நியாயங்களை அமெரிக்க அரசு கேட்காததால், வேறு வழியின்றி, 1952 ல் கனத்த இதயத்துடன் சுவிட்சர்லாந்தில் அடைக்கலமானார் சாப்ளின். 

1972 ஆம் ஆண்டு காலச் சக்கரம் சுழல, அதே அமெரிக்க அரசு, ‘உலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்’ விருது பெற சாப்ளினை அழைத்தது. பரிசினை ஏற்றுக்கொண்டாலும், அமெரிக்காவில் தங்க விருப்பமின்றி, மீண்டும் சுவிட்சர்லாந்து கிளம்பினார் சாப்ளின். விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து நின்று, "வாழ்நாள் முழுவதும் போர்க்களமாக இருந்தாலும் எப்படி ஜெயித்தீர்கள்? அது என்ன ரகசியம்?" எனக் கேட்டார்கள். சாப்ளின் சிரித்தார்... "இந்த நிலை மாறிவிடும் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி... மாறிவிடும்! இதோ இந்தக் கணத்திலும் கூட!" சாப்ளினின் கண்கள் நீல நிறத்தில் இருந்தன. கருப்பு வெள்ளைப் படங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்க்கும் பொழுது பெரிதும் வியப்புற்றனர். சாப்ளினின் புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பல நடத்தப் பட்டு வந்தன. சாப்ளின் ஒரு முறை அப்போட்டி ஒன்றில் ரகசியமாகப் பங்கு பெற்றார்.இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது.

இனப் படுகொலையாளி ஹிட்லரின் காலத்தில், ஹிட்லருக்கு எதிராக படமெடுத்த 'மக்களின் கலைஞன்' சார்லி சாப்ளின்  சொன்னது இது – "மனிதன் கொண்ட வெறுப்புகள் ஒரு நாள் மறையும், சர்வாதிகாரிகள் இறப்பார்கள், மக்களிடம் இருந்து அவர்கள் பறித்த அதிகாரம் மீண்டும் மக்கள் கைகளுக்கே திரும்பும், மனிதன் இறக்கும் வரை விடுதலை தாகம் மறையாது" –  உன் மனம் வலிக்கும்போது சிரி; பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை! இன்றும் உலக மக்களின் மனதில் சிரிப்பலைகளைத் தவழவிட்டு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கும் சார்லி சாப்ளின் மறைந்து  விட்டாரா என்ன? நம் நினைவலைகளில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...