|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 April, 2012

7 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் 48 மணி நேரம் கெடு!

 தூக்கு தண்டனை அளிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்கள் தொடர்பான விவரங்களை 48 மணி நேரத்துக்குள்ளாக சமர்ப்பிக்க வேண்டும் என்று 7 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.அந்தந்த மாநில ஆளுநர்களின் பரிசீலனையில் உள்ள இந்த மனுக்கள் பற்றிய விவரங்களை 48 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் உள்துறை செயலர்கள் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே. முகோபாத்யாய அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை வெளியிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த உத்தரவை, சில மாநிலங்கள் கடைபிடிக்காததை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரின் ராவல், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து இந்த உத்தரவு அளிக்கப்பட்டது.நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த உத்தரவை பஞ்சாப், ஹரியாணா, மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழகம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் நிறைவேற்றவில்லை.மரண தண்டனை அளிக்கப்பட்டு குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரிடம் கருணை மனுக்கள் அனுப்பியுள்ள, அதே நேரத்தில் பல்வேறு காரணங்களால் உச்ச நீதிமன்றத்தை அணுகாத அவர்களது வழக்குகளை ஆராய விரும்புவதாக இருவர் பெஞ்ச் தெரிவித்தது.


"அவர்களது வழக்குகள் ஊடகங்களால் பேசப்படவில்லை.நாட்டிற்கு வெளியில் உள்ளவர்களின் ஆதரவைப் பெற்ற அரசியல் பின்னணி கொண்ட வழக்குகளைத்தான் ஊடகங்கள் பேசுகின்றன' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.மரண தண்டனை அளிக்கப்பட்ட வழக்குகளில் காலதாமதம் ஏற்பட்டதற்கு நீதித்துறை எந்த அளவுக்கு பொறுப்பாளியாக உள்ளது என்பதை ஆராய விரும்புவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.


18 கருணை மனுக்கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு ஏப்ரல் 3-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.குண்டு வெடிப்பு வழக்கில் மரண தண்டனை பெற்ற தேவேந்திர பால் சிங் புல்லரின் புகார் மனுவை விசாரித்தபோது இவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.தான் சமர்ப்பித்த கருணை மனு தொடர்பாக இறுதி முடிவெடுப்பதில் குடியரசுத் தலைவர் அளவுக்கு அதிகமான காலம் எடுத்துக் கொண்டதாக புல்லர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...