|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 April, 2012

இலங்கை செல்லும் இந்தியக் குழுவில் அ.தி.மு.க. இடம்பெறாது ஜெயலலிதா

இலங்கை செல்லும் இந்தியக் குழுவில் அ.தி.மு.க. இடம்பெறாது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான செயல்களில் அதிபர் ராஜபட்ச அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், இலங்கைத் தமிழர்கள் மீதான அணுகுமுறையில் அந்நாட்டு அரசிடம் எவ்விதமான மாற்றமும் தெரியாததாலும் இலங்கைக்குச் செல்லும் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் அ.தி.மு.க. இடம் பெறாது என அவர் கூறியுள்ளார்.இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இலங்கைத் தமிழர்களை மறு குடியமர்த்துவது, மறுவாழ்வு அளிப்பது, இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளைப் பார்வையிடுவதற்காக ஏப்ரல் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் 15 உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது. அதில் அதிமுக சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்புமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதற்கிணங்க அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வில்லியம் ரபி பெர்னார்டை அனுப்ப முடிவு செய்தேன்.


இலங்கையில் வாழும் தமிழர்கள், பெரும்பான்மையினரான சிங்களர்களுக்கு இணையாக முழு உரிமை பெற்ற குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்பதிலும், போரினால் இடம்பெயர நேர்ந்த தமிழர்களை அவர்கள் முன்னர் வசித்த இடத்திலேயே மீள்குடியமர்த்த வேண்டும் என்பதிலும் அதிமுக உறுதியாக உள்ளது.இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க ஐ.நா. சபையை இந்தியா வற்புறுத்த வேண்டும் என்றும், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரை மற்ற நாடுகளுடன் இணைந்து அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தேன்.


இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. சபை மனித உரிமைக் குழுக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் கடுமையைக் குறைத்து அதை நீர்த்துப்போகச் செய்வதற்கான முயற்சிகளை எடுத்து அதில் வெற்றி பெற்று பின் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது. இருப்பினும் இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்கு இது முதல் படியாக இருக்கும் என்பதால் அதை நான் பாராட்டினேன்.நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் இலங்கைப் பயணம் அங்குள்ள தமிழர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும், அவர்களோடு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகக் கலந்துரையாடினால் அது தமிழர்களுக்கு ஆறுதலாகவும், உண்மை நிலவரங்களைத் தெரிந்து கொள்ள உதவும் என்றும் நம்பினேன்.


அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மறுவாழ்வு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு அவற்றில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டவும் உதவும் என்ற எண்ணத்தில்தான் அதிமுக சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்ப சம்மதித்தேன். ஆனால், சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழுவினர் நேரிடையாக கலந்துரையாடவும், அவர்களின் உள்ளக் குமுறல்களைக் கேட்டு அறியவும் வாய்ப்பு இல்லாதது போல் அமைந்துள்ளது. அதிபர் ராஜபட்ச உள்பட சிங்கள அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுடனான கூட்டங்கள், விருந்துகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இது ஏதோ சம்பிரதாயத்துக்காக நடத்தப்படும் சுற்றுப் பயணம் போலவும், இது இலங்கை அரசால் அவர்களுக்கு சாதகமாக ஒரு கருத்து இந்தியாவில் ஏற்பட தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் போலவும்தான் தெரிகிறது.ஜெனீவாவில் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மென்மையான தீர்மானத்தை கூட இலங்கை அதிபர் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை.தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதை ராஜபட்ச அரசு தடுத்து நிறுத்தவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக சர்வதேச அணுமின் முகமையிடம் இலங்கை முறையிட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.


தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ராஜபட்ச அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் நேரில் காணும் உண்மைகளைப் பற்றி இலங்கை அதிபருடன் விவாதம் செய்ய வாய்ப்பு தரப்படாமல் சுற்றுப்பயணத்தின் கடைசி நாளில் அதிபர் ராஜபட்சவுடன் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.எனவே, இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிலிருந்து அதிமுக விலகிக் கொள்கிறது என்றார் ஜெயலலிதா.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...