|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 April, 2012

மனித பிறவியில் செய்ய வேண்டிய முக்கிய கடமை!

மனித பிறவியில் மூன்று கட்டமாக கிரியை செய்கின்றனர். பிறப்பிற்கு முன், பிறந்த பின், இறந்த பின் என பல சடங்குகள் நடத்துகின்றனர். இச்சடங்கினை கிரியை என்பர். பும்ஸவனம் : பெண் கருவுற்ற மூன்று மாதத்தில் கருவில் இருக்கும் சிசுக்கு எந்த ஊறும் உண்டாகாதவாறு இறைவனை பிரார்த்திக்கும் சடங்கு பும்ஸவனம். சீமந்தம் : கருவுற்ற பெண்ணுக்கு நான்கு அல்லது எட்டாவது மாதத்தில் செய்யும் சடங்கு. குழந்தையின் நலன் பொருட்டு சில தேவர்களை வேண்டுதல். இந்த சடங்கு தற்போது வளைகாப்பாக நடத்தப்படுகிறது. ஜாதகர்மம் : குழந்தை பிறந்தவுடன் தேனும் நெய்யும் கலந்து தேவதைகளுக்கு நிவேதிப்பர். நீண்ட ஆயுள், புத்தி கொடுக்க பிரார்த்திக்கும் கிரியை ஜாதகர்மம். கிராமங்களில் சுடலை போன்ற காவல் தெய்வங்களுக்கு, கோழி பலி கொடுப்பர். நாமகரணம் : குழந்தைக்கு தந்தை வழியிலோ அல்லது தாய் மரபிலோ, இறைவன் திருநாமத்தையோ பெயராக சூட்டி மகிழும் நிகழ்ச்சி. நிஷ்க்ராமணம் : முதல்முறையாக குழந்தையை வீட்டை விட்டு வெளியில் கொண்டு வரும் பொருட்டு, குழந்தையின் யாத்திரைகள் அனைத்தும் மங்களமாக இருக்க செய்யும் கிரியை நிஷ்க்ராமணம். அன்னபிப்ராசனம் : ஆறுமாதத்தில் சோறும், நெய்யும், தயிரும், தேனும் கொடுத்து குழந்தை நீண்டு வாழ பிரார்த்திப்பது அன்னபிப்ராசனம். குருவாயூரில் இதை செய்வது நல்லது. வித்தியாரம்பம் : பள்ளியில் சேர்க்கும் நாளில் செய்யப்படும் கிரியை. விஜயதசமியிலோ அல்லது வேறு நல்ல நாளிலோ ஹரி ஸ்ரீ கணபதியே நம எனவும், குரு வாழ்க, குருவே துணை என கூற செய்ய வேண்டும். பின்னர் குருவை வணங்க செய்து, கணபதி, சரஸ்வதி தேவியை வணங்கி அரிசியில் அரி என்னும் எழுத்தை எழுத செய்ய வேண்டும். கர்ணபூஷணம் : தங்கத்தின் வழியாக பாயும் நீர் உடம்பிற்கு ஆரோக்கியம் தருகிறது. நல்ல விஷயங்களை செவியின் வழியே செலுத்த வேண்டும். தீய விஷயங்களை உள்ளே செலுத்தாமல் துளை வழியே வெளியே செலுத்த வேண்டும். இது காதுகுத்துதல். உபநயனம் : குழந்தைக்கு ஏழுவயதில் பூணூல் எனும் சடங்கை நடத்தி வைக்க வேண்டும். உபநயகிரியை செய்யாதவர்களுக்கு தீட்சை செய்து வைக்க வேண்டும். 

குருகுல வாசம் : குழந்தைகள் குருவுடன் இருந்து கல்வி பயிலும் காலம். திருமணம், குருகுல வாசம் முடிந்ததும், குருவின் அனுமதி பெற்று திருமணம் செய்தல். சங்கற்பம் : சங்கற்பத்தை குறிக்கோள் பகர்தல் என்றும் கூறலாம். காலத்தையும் இடத்தையும் செயலையும் விளக்கி பிரார்த்திப்பது. புண்யாவாசனம் : உடம்பையும், உள்ளத்தையும் சுத்தி செய்வதன் பொருட்டு புனிதநீர் சுத்தி செய்ய வேண்டும். தண்ணீரை திருவருள் பெருக்காக கருதி மணமக்கள் மீது தெளித்து அவர்களை புனிதமாக்க வேண்டும். சஷ்டியப்த பூர்த்தி : அறுபதாம் ஆண்டு நிறைவு விழா, சிற்றின்ப வாழ்க்கையை வெறுத்து கடவுள் பணியை மேற்கொண்டு ஆன்மிக நெறியில் நிலை நிற்க வேண்டுமென தம்பதியினர் சங்கற்பம் ஏற்பதை இது குறிக்கிறது.  சதாபிஷேகம் : எண்பது அல்லது எண்பத்து நான்காவது ஆண்டில் செய்யும் சடங்கு சதாபிஷேகம். எண்பது வயதிற்கு மேல் வாழ்ந்தவர்களை ஆயிரம் பிறை கண்டவர்கள் என கூறுவர். அபரக்கிரியை : மனிதன் இறந்த பின் ஆன்மா நலம் அடைதற்பொருட்டு அவரது புத்திரர்கள் செய்யும் கிரியை. புத்திரன் என்றால் பத்தென்னும் நரகத்தில் தந்தை விழாமல் கரையேற்றுபவன் என்று அர்த்தம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...