|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 May, 2012

ஓட்டுவதற்குத்தான் உரிமம் தரப்படுகிறதே தவிர, பயணிகளையும் பாதசாரிகளையும் கொல்வதற்கு அல்ல!


வாகனங்களை ஓட்டுவதற்குத்தான் உரிமம் வழங்கப்படுகிறதே தவிர யாரையும் கொல்வதற்கு உரிமம் வழங்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.2002-ம் ஆண்டு ராசிபுரத்தில் இருந்து சேலம் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த பேருந்தை ஓட்டிய ராஜன் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் ராஜனோ தாம் விபத்துக்குக் காரணம் அல்ல எந்திரக் கோளாறால்தான் விபத்து ஏற்பட்டது என்றும் தம்மை டிஸ்மிஸ் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்றும் தொழிலாளர் நீதிமன்றத்தைஅவர் நாடினார். தொழிலாளர் நீதிமன்றத்தில் ராஜன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி பால்வசந்த்குமார் விசாரித்தார். ராஜனின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கூறியதாவது:பேருந்தை ஓட்டியபோது ஸ்டியரிங் திடீரென்று சுற்றாமல் போய்விட்டதால்தான் விபத்து நேரிட்டது. எனவே ஏற்பட்ட அந்த எந்திரக் கோளாறுக்கு நான் காரணமாக முடியாது. எனவே என்னை பணிநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் வேலை தருவதற்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கில் கோரியிருந்தார். எந்திரக் கோளாறு காரணமாகத்தான் விபத்து ஏற்பட்டது என்ற வாதத்தை ராஜன் வாக்குமூலமாகவோ, ஆவணங்கள் மூலமாகவோ நிரூபிக்கவில்லை.

மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த அறிக்கையில், பேருந்தில் விபத்து நேரிடுவதற்கு முன்பு எந்திரக் கோளாறு எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்புதான் அந்த பேருந்துக்கு எப்.சி. (தகுதிச் சான்றிதழ்) கொடுக்கப்பட்டதாகவும், எனவே அந்த பேருந்தில் எந்திரக்கோளாறு ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும் விசாரணை அதிகாரி கூறியுள்ளார் என்று தொழிலாளர் நீதிமன்றம் கூறியுள்ளது.எந்திரக்கோளாறு என்பதை நிரூபிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட டிரைவரின் கடமை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. விபத்துகள் கடவுளின் செயல் என்றும், எனவே தன்னை தண்டிக்கக் கூடாது என்றும் ராஜன் கூறியுள்ளார். ஆனால் அதை கீழ்நீதிமன்றம் ஏற்கவில்லை. அதிக வேகமாக பேருந்தை ஓட்டியதாலும், கவனக்குறைவாலும்தான் விபத்து நேரிட்டு, 8 பேர் சாவுக்கு காரணமாகிவிட்டது என்று தொழிலாளர் நீதிஅம்ன்றம் தெரிவித்துள்ளது. இதை சரியான தீர்ப்பு அல்ல என்று கூறமுடியாது. எனவே அந்த தீர்ப்புக்குள் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை.

விபத்துகளும் ஓட்டுநர்களும் தற்போது விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. விபத்துகளை தடுப்பதற்கு அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விபத்துகளை ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு சாதகமாக செயல்பட்டால், மற்றவர்களுக்கு அது தவறான சிக்னல் கொடுத்ததுபோல் ஆகிவிடும். இதை தீர்ப்பாயங்கள், கீழ்நீதிமன்றங்கள் மனதில் வைத்துக் கொண்டு, விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்குக் கருணை காட்டக்கூடாது.வாகனத்தை ஓட்டுவதற்குத்தான் டிரைவர்களுக்கு உரிமம் தரப்படுகிறதே தவிர, பயணிகளையும் பாதசாரிகளையும் கொல்வதற்கு அல்ல. எனவே ராஜன் வழக்கில் தொழிலாளர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு சரிதான் என்று முடிவு செய்து, ராஜனின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்கிறேன் என்றார் அவர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...