|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 July, 2012

ஆடியில் வாங்கினாலும் சரி, ஆவணியில் வாங்கினாலும் விலை மாறாது.


ஆரம்பமாகிவிட்டது ஆடித் தள்ளுபடி சீசன். வருஷா வருஷம் வருகிற திருவிழாக்களைபோல ஆடித் தள்ளுபடியும் ஒரு கொண்டாட்டமாகவே மாறிவிட்டது. பண்டிகை காலத்தில் விலையைப் பார்க்காமல் வாங்கும் அதே துணிமணிகள் குறைந்த விலையில் கிடைக்கும்போது வாங்கலாமே என்கிற ஆசையில் பல ஆயிரம் ரூபாய்க்கு வாங்கித் தள்ளிவிடுகிறார்கள் மக்கள். துணிமணிகள் மட்டுமல்ல, மொபைல்கள், எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், அவ்வளவு ஏன், செருப்புகள்கூட இப்போது ஆடித் தள்ளுபடியில் விற்கப்படுகிறது.இந்த ஆடித் தள்ளுபடியில் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா? தள்ளுபடி என்று அறிவித்துவிட்டு, விலையை ஏற்றி, இறக்கி விற்கிறார்களா? என்பதை அறிய களத்தில் இறங்கி, விசாரித்தோம். நாம் முதலில் சென்றது துணிக் கடைகளுக்கு. முன்பெல்லாம் விற்க முடியாமல் இருக்கும் துணிமணிகளை தள்ளுபடி தந்து விற்றார்கள். ஆனால், இன்று ஆடி தள்ளுபடிக்காகவே பல துணிக் கடைகள் துணிமணிகளை வாங்கி, விற்கின்றன. புதுத் துணிக்கு இவ்வளவு தள்ளுபடியா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால், இங்குதான் இருக்கிறது வியாபாரத் தந்திரம். புதிய துணிமணிகளோடு, விற்க முடியாமல் தேங்கிக் கிடக்கும் பழைய துணிமணிகளையும் கலந்துவிடுவது, சிறிய அளவில் டேமேஜ்-ஆன துணிமணிகளை புதிய துணிகளோடு கலந்துவிடுவது போன்ற வேலைகள் சூப்பராக நடக்கும்.

விலையில் தள்ளுபடி என்பது வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு மட்டும்தான். 10 முதல் 20 சதவிகித தள்ளுபடியைத்தான் பெரும்பாலான கடைகள் தள்ளுபடி தருகின்றன. இது ஓரளவு நியாயமான தள்ளுபடி. ஆனால், 50 சதவிகித தள்ளுபடி என்பது விளம்பரத்துக்காகச் சொல்லப்படும் வாசகம் மட்டுமே. அதை நம்பி உள்ளே போனால், ஒப்புக்கு ஒன்றிரண்டு பொருட்களை மட்டுமே 50 சதவிகித தள்ளுபடி விலையில் வைத்திருப்பார்கள். மற்றவற்றுக்கு 10-20 சதவிகித தள்ளுபடிதான் இருக்கும். துணிகளின் மீது விலைப்பட்டியல் ஒட்டுவதில்தான் பலே தந்திரங்களை கடைப்பிடிக்கிறார்கள் சில கடைக்காரர்கள். பொதுவாக, இரண்டு வகை விலைப்பட்டை உண்டு. ஒன்று, துணியின் உண்மையான விலை, மற்றொன்று தள்ளுபடிக்காகவே ஒட்டப்பட்ட விலை. 350 ரூபாய் கொண்ட ஒரு புடவையின் விலை ஆடித் தள்ளுபடியில் 600 ரூபாயாக உயர்ந்து மீண்டும் 350 ரூபாயாக குறையும். இந்த முறையில் ஆடியில் வாங்கினாலும் சரி, ஆவணியில் வாங்கினாலும் துணியின் விலை மாறாது. கடைக்காரர்கள் பயன்படுத்தும் அடுத்த டெக்னிக், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது. யாருமே வாங்க விரும்பாத மோசமான துணியை ஒரு நல்ல துணியோடு சேர்த்து விற்பது இந்த டெக்னிக். ஒரு நல்ல துணி 300 ரூபாய், ஒரு மோசமான துணி 150 ரூபாய் என இந்த இரண்டையும் சேர்த்து, 450 ரூபாய் விற்பார்கள். காசைக் கொடுத்து நல்ல துணியை மட்டும் வாங்குவது புத்திசாலித்தனம்.  

ஆடித் தள்ளுபடியில் துணி வாங்கும்போது நன்றாக பிரித்துப் பார்த்து வாங்க வேண்டும். அப்போதுதான் இழை இல்லாமல் இருப்பது, சாயம் ஒட்டி இருப்பது போன்றவற்றை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

மொத்தமாக கூடைகளில் கொட்டிக்கிடக்கும் துணிகளை வாங்காமல் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அவை மிக பழைய ஸ்டாக்-ஆக இருக்கும். அதிக டேமேஜும் இருக்கும்.

நீங்கள் வாங்கிய பொருட்களில் ஏதாவது பிரச்னை இருந்தால் அதனை ஓரிரு நாட்களில் மாற்றிக்கொள்வது நல்லது. பத்து, இருபது நாட்கள் கழித்து சென்றால் கடைக்காரர்கள் நம்மை இழுத்தடிப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு. சில கடைகளில் தள்ளுபடி விற்பனையில் வாங்கிய பொருளை மாற்றித்தரமாட்டார்கள். மற்ற நாட்களில் எல்லாம் நிறைய லாபம் வைத்து விற்கும் கடைக்காரர்கள் ஆடி மாதத்தில் மட்டும் எப்படி இவ்வளவு தள்ளுபடி தருகிறார்கள்? இந்த கேள்வியை திண்டுக்கல்லில் கடை நடத்தும் சுப்ரமணியம் அண்ட் கோ-வின் உரிமையாளர் ஜோதிகுமாரிடம் கேட்டோம். ''சில துணிவகைகள், சில அளவுகளில் இருக்கும்போது அதை விற்றுத் தீரவேண்டும் என்பதற்காக ஆடித் தள்ளுபடி அறிவிக்கிறோம். இதனால் அடுத்தடுத்து வரும் பண்டிகைகளுக்கு புதிய துணிகளை எங்களால் வாங்கி வைக்க முடியும். நாங்கள் ஆடித் தள்ளுபடி தருவது போல எங்களுக்கும் சப்ளையர்களும் தருவார்கள். அதை அப்படியே வாடிக்கையாளர்களுக்கு தந்துவிடுவோம். மற்றபடி வாடிக்கையாளர்களை ஏமாற்ற வேண்டும் என்கிற நோக்கம் எங்களுக்கு கிடையவே கிடையாது'' என்றார்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...