|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 October, 2012

நவராத்திரி...

வீடு தோறும் கலையின் விளக்கம்' என்று பாடினார் மகாகவி பாரதியார். ஆம்; ஒவ்வொரு இல்லமும் எழிலோவியமாக, கலைக் கோயிலாக விளங்கும் விழாவே நவராத்திரி.
 நம் பாரதத்தில் பல்வேறு பெயர்களால் இந்த விழா அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் "கொலு', "சாரதா நவராத்திரி' என்றும் வங்கத்தில் "துர்க்கா பூஜை' என்றும், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் "மகாலட்சுமி பூஜை' என்றும், கர்நாடகத்தில் ஒன்பது தினங்களோடு, விஜய தசமியையும் சேர்த்து "தசரா' என்றும் இந்த விழாவைப் போற்றுவர்.
 பழந்தமிழர் நாகரிகத்தில் இருந்த கொற்றவை வழிபாடே ஜெய துர்க்கா பூஜையாக மலர்ந்தது என்றும் சொல்வர்.
 நவராத்திரியின் முதல் மூன்று நாள்கள் பார்வதி தேவி (மலைமகள்) வழிபாடாகவும், நடு மூன்று நாள் (அலை மகள்) மகாலட்சுமி வழிபாடாகவும்,கடைசி மூன்று நாள்கள் (கலைமகள்) மகா சரஸ்வதி வழிபாடாகவும், பத்தாவது நாள் வழிபாட்டினால் வரும் "வெற்றித் திருநாளாக' விஜயதசமியாகவும் அமைந்துள்ளது.
 நாடெங்கும் மக்கள் விழாவாகக் கொண்டாடும் நவராத்திரி விழாவில் தாய்க்குலத்துக்கு தனிப்பெரும் சிறப்பு உண்டு. நவராத்திரியின் ஒரு அங்கமாக "கன்னிகா பூஜை' என்று குறிப்பிடப்பட்ட சில இடங்களில் நிகழ்கிறது. இரண்டு வயது முதல் பத்து வயது வரை உள்ள கன்னிகளைத் தேர்ந்தெடுத்து குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோஹிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கை, சுபத்ரை என அம்பிகை திருப்பெயர்களாக அவர்களைப் பாவித்து சிறப்பிப்பதும் உண்டு.
 அம்பிகையின் அலங்கார விழாவான நவராத்திரியை பாவைமார்களே பக்தி சிரத்தையுடன் கொண்டாடி வருகிறார்கள். நவராத்திரி கொலுவில் ஒன்பது படிகள் இருக்க வேண்டும்; இல்லையேல் குறைந்த பட்சம் ஐந்து படிகளாவது அமைக்க வேண்டும். பற்பல வர்ண பொம்மைகள், சுதைச் சிற்பங்கள் மற்றும் பூங்கா, கோயில், கலைக் காட்சிகளையும் கொலுவில் இடம் பெறச் செய்ய வேண்டும். விழா நாள்களில் பெண் குழந்தைகள் சிவன், இராமன், கண்ணன் போல் வேஷங்கள் போட்டுக்கொண்டும், குறத்தி, பார்சி, மார்வாரிபோல் ஆடைகள் புனைந்துகொண்டும், குங்குமச் சிமிழை எடுத்துக் கொண்டு ""எங்கள் வீட்டுக் கொலுவுக்கு வாருங்கள்'' என்று ஒவ்வொரு இல்லமும் சென்று உவகையுடன் அழைப்பார்கள். தன் இல்லத்துக்கு வரும் மங்கையர்க்கு மஞ்சள், குங்குமம் வெற்றிலைப் பாக்குடன், வசதியிருந்தால் புடைவையும் வைத்து வழங்கிச் சிறப்பிப்பார்கள்.
 வரலட்சுமி விரதத்துக்கு நோன்பு எடுத்துக் கொள்வதுபோல், நவராத்திரி பூஜைக்கும் பழைமைப் பற்றுடைய ஸ்திரீரத்னங்கள் நோன்பு எடுத்துக் கொண்டு வழிபடுவதை "மகா நோன்பு' என்று தேவி தொடர்பான நூல்கள் சொல்கின்றன. பூஜை காலங்களில் தேவி பாகவதம், தேவி மாகாத்மியம், லலிதா சகஸ்ர நாமம், ùஸளந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி, வடிவுடை மாணிக்கமாலை போன்ற தோத்திர நூல்களை வாசிப்பதும் கேட்பதும் மிகுந்த மங்களங்களைக் கொடுக்கும்.
 நவராத்திரி ஒவ்வொரு நாளும் கோயில்களில் காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, சிவகாமவல்லி, கமலாம்பிகை, மகாகாளி, இவ்வண்ணம் ஒவ்வொரு வடிவமாக அலங்காரம் செய்து வழிபடுவதும் நடைமுறையில் உள்ளது.
 மகாகவி பாரதியார் நவராத்திரி பாடல்கள், நவராத்திரி கட்டுரைகள் வரைந்துள்ளார். ஒரு கட்டுரையில் ""இந்தப் பூஜைகளின் நோக்கம் உலக நன்மை; நவராத்திரி காலத்தில் யோக மாயை துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்ற மூன்று வித வடிவங்கொண்டு துஷ்டரை அழித்து, மனித ஜாதிக்கு மகிழ்ச்சி பெருக வைத்தாள். சக்தியால் உலகம் வாழ்கிறது; நாம் வாழ்வை விரும்புகிறோம்; ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்'' என்று அருமையாகக் குறிப்பிடுகிறார்.
 நவராத்திரி நாயகியை வணங்கிப் போற்றி, ""நாளும் நாளும் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே'' என்ற ஞான சம்பந்தர் சொற்படி நலங்கள் பெறுவோம்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...