|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 January, 2013

நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு!.




கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் லோகநாதன். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக யானைகளை படம் எடுத்து வருபவர்.யானைகளை பற்றி நிறைய தகவல் சொல்கிறார். முதலில் ஓரு இடத்தில் யானைகள் நன்றாக இருக்கிறது என்றால் அங்கு காடு நன்றாக இருக்கும், காடு எங்கு நன்றாக இருக்கிறதோ அங்கு நாடும் நன்றாக இருக்கும். ஆகவே யானைகளை எப்போதுமே குற்றம் சொல்லக்கூடாது, அதன் ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் உண்டு. அதனை புரிந்து கொள்ளாமல், அதன் வழித்தடத்தில் வீடுகளையும், ஆஸ்ரமங்களையும், கல்லூரிகளையும் கட்டிவிட்டு, யானை வருகிறது, யானை வருகிறது என்றால், அது பல நூறு ஆண்டுகளாய் வந்து போய்க் கொண்டிருந்த வழித்தடத்தில் வராமல் வேறு என்ன செய்யும். வழித்தடம் மாறும் போதும், உணவிற்கு வழியில்லாத போதும் வயலுக்கு வருகிறது, ஊருக்குள் புகுகிறது.
 
சினிமாக்களில் காட்டுவது போல யானைகள் மோசமான மிருகம் அல்ல, தன்னை சீண்டுபவனையும், துன்புறுத்துபவனையும்தான் யானை தாக்குமே தவிர மற்றபடி அது சாதுவான பிராணியே. பொதுவாக யானைக்கு மதுவின் வாடையே ஆகாது, குடித்துவிட்டு பக்கத்தில் வருவது பாகனே ஆனாலும் பொறுத்துக் கொள்ளாது. அதே நேரம் குட்டி போட்டு இருக்கும் நேரத்தில் யாராக இருந்தாலும் குட்டியிடம் நெருங்கவிடாது, அந்த அளவிற்கு பாசம் அதிகம். மனிதர்களைப் போல குட்டிக்கு தும்பிக்கை வழியாக மூச்சு காற்றை செலுத்தி பிழைக்க வைத்த நிகழ்ச்சி எல்லாம் உண்டு. பத்து கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ளவைகளை மோப்பம் பிடித்தே அறிந்து கொள்ளும். யானைக்கு கழுத்து பகுதி கிடையாது என்பதால், திரும்பிப் பார்க்கவேண்டும் என்றால் அது உடம்பையே திருப்பித்தான் பார்க்குமே தவிர ,கழுத்தை மட்டும் திருப்பிப்பார்க்காது. அதே போல யானைக்கு நேர் பார்வைதான் உண்டு, அது விரட்டும் போது நேர் பார்வையில் படாமல் பக்கவாட்டில் தப்பி ஒடினாலே பிழைத்துக் கொள்ளலாம்.
 
சினிமாக்களில் காட்டுவது போல கும்கி யானையை தனியார் வளர்க்க முடியாது. அரசாங்கத்தின் வனத்துறையினர்தான் வளர்க்கமுடியும். காட்டில் இருந்து நாட்டிற்குள் வரும் யானையை விரட்டியடிக்க பயிற்சியளிக்கப்பட்ட யானையே கும்கி. குட்டியில் இருந்தே சரியான யானையை அடையாளம் கண்டு அதனை கடுமையான பயிற்சி கொடுத்து வனத்துறையினர் வளர்த்து வருவார்கள். அந்த கும்கி யானை கூட பெண் யானையைத்தான் விரட்ட முடியும், இதைவிட உயரமான "டஸ்கர்' என்று சொல்லக்கூடிய பத்து அடி உயரத்திற்கு மேல்பட்ட ஆண் யானையைக் கண்டால் கும்கி யானையே ஒடிவந்துவிடும், அந்த மாதிரி யானையை இரண்டு கும்கி யானைகளைக் கொண்டுதான் விரட்டுவார்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...