|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 January, 2013

நரேனின் இளமைப் பருவத்தில்!

நரேன் தன் இளமைப் பருவத்தில் நண்பர்களுடன் நாடகக் குழு ஒன்றை அமைத்து பல நாடகங்களில் நடித்தான். ஆனால் சில நாடகங்களுக்குப் பிறகு அவனது தாத்தா கோபத்துடன் இனி நாடகத்தில் நடிக்க கூடாது என்று தடுத்து விட்டார். நாடகக்குழு கலைந்தது! உடனே வீட்டு முற்றத்தில் உடற்பயிற்சிக்குழு ஒன்றை ஆரம்பித்தான். அது உற்சாகமாக நடைபெற்றது. உறவுச்சிறுவன் ஒருவன் கையை உடைத்துக்கொண்டதுடன் அது முடிவுக்கு வந்ததது. நரேன் விடவில்லை. நவகோபால் மித்ரர் என்பவர் நடத்திய உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று உடற்பயிற்சிகளில் ஈடுபட்டான். நரேன் மற்றும் அவனது நண்பர்களின் ஆர்வத்தைக் கண்ட நவகோபால், கூடத்தின் பொறுப்பையே அவர்களிடம் ஒப்படைத்தார்.

ஒருமுறை உடற் பயிற்சிக்காக பெரிய மரக்கட்டை ஒன்றை உயரத்தில் பொருத்த வேண்டியிருந்தது. பெரிய மரக்கட்டையைச் சிறுவர்கள் பொருத்துவதைக் காணக் கூட்டம் கூடியது. தங்களால் இயலாதபோது அங்கு நின்ற ஆங்கிலேயே மாலுமி ஒருவனை உதவிக்கு அழைத்தான் நரேன். மாலுமி அந்தக் கட்டையைக் தூக்குவதற்கு உதவிக் கொண்டிருந்த போது திடீரென்று கட்டை நழுவி அவனது தலையில் வீழ்ந்தது. தலையிலிருந்து ரத்தம் கொப்பளிக்க அவன் கீழே சாய்ந்தான். அவன் இறந்துவிட்டான் என்று கருதிய கூட்டம் காணாமல் போயிற்று! நரேனும் ஓரிரு நண்பர்களும் மட்டுமே எஞ்சினர். நரேன் சற்றும் தாமதிக்காமல் தனது வேட்டியின் மூலையைக் கிழித்து அவனுடைய தலையில் கட்டுப்போட்டான். அவனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அவன் தேறிய பிறகு, நரேனும் நண்பர்களுமாகப் பணம் சேர்த்து அவனுக்கு கொடுத்து அனுப்பினர்.

சிலம்பத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தான் நரேன். முகமதிய நிபுணர்கள் பலரிடமிருந்து அவன் பயிற்சி பெற்றான். அவனுக்குப் பத்து வயது. அவன் படிக்கும் பள்ளியில் சிலம்பப் போட்டி நடந்தது. அதை கவனித்து நரேனுக்கு போட்டி விறுவிறுப்பாக இல்லை என்று தெரிந்தது. பார்வையாளர்கள் சலிப்படையத் தொடங்கினர். திடீரென்று நரேன் எழுந்து கையில் கம்பை எடுத்துச் சுழற்றியபடி, யார் வேண்டுமானாலும் தன்னுடன் மோதலாம் என்று சவால் விட்டான். சவாலை ஏற்று ஒரு பயிற்சி பெற்ற பலசாலி இரும்பு கம்பிகளுடன் மோதினான். வந்தவனால் நரேனை எதிர்த்து நிற்க இயலாமல் அவனின் கம்பு இரண்டு துண்டாக ஒடிந்து வீழ்ந்தது. மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பரிசையும் வென்றான் நரேன். நீச்சல். மல்யுத்தம், தற்காப்புக்கலை, படகோட்டுதல் போன்றவையும் அவனுக்குக் கை வந்த கலையாக இருந்தன.

ஒரு நாள் நரேன் நண்பர்களுடன் கல்கத்தா கோட்டையைக் காணச் சென்றிருந்தனர். அவர்களில் ஒருவன் உடல் வலியால் அவதியுற்றான். மற்றவர்கள் அவனை வேடிக்கை செய்து களித்தனர். ஆனால் சிறிது நேரம் கழித்து அவன் உண்மையிலேயே வலியினால் துன்பப்படுகிறான் என்று தோன்றுகிறது. உடனே நரேன் ஜுரத்தினால் தவித்துக் கொண்டிருந்த அவனுக்கு உதவி செய்து, வண்டியில் அமர்த்தி வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்தான்.இவ்வாறு தனது இளமை பருவத்திலேயே பிறருக்கு உதவும் தயாள குணம் கொண்ட நரேனிடம் செயல்கள் நம்மை வியக்க வைக்கின்றது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...